
இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய ஊர்களின் மீது அமெரிக்கா குண்டு வீசியதால் அங்கு வாழ்ந்த மக்கள் கருகிச் செத்தனர். கருவில் இருந்த குழந்தைகள் உடல் ஊனத்துடன் பிறந்தன.
பிழைத்தவர்கள் சாம்பலாகக் கிடந்த விளைநிலங்களில் கடுமையாக உழைத்துப் பண்படுத்தினர். தங்களின் தாய்மொழி, பண்பாடு ஆகியவற்றைப் போற்றி மதித்து மீண்டும் புத்துயிர் பெற்றனர். இன்று உலகளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக பொருளாதார நிலையில் ஜப்பான் சாம்பலில் இருந்து பிறந்த ஃபீனிக்ஸ் பறவையாக உயர்ந்துள்ளது.
கிறிஸ்து பிறப்புக்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜப்பான் நாடு நாகரீகத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கி வருகிறது. இந்நாடு ஹோன்ஷு, க்யூஷு, ஷாகேகு மற்றும் ஹொக்கைதொ என்ற நான்கு தீவுகளின் கூட்டாக அமைந்தது.
இன்றுள்ள ஜப்பானிய அரசப் பரம்பரை உலகிலேயே மிகப் பழைய மிக நீண்ட பரம்பரை ஆகும். ஜப்பானில் மக்கள் சமூகத்தில் தொழில் சார்ந்த (ஜாதி) பிரிவினைகள் உண்டு.
அரசருக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளவர்கள் 'சமூராயி' போர் மறவர் ஆவர். இவர்கள் தமக்குக் கீழாக உள்ள எந்த சமூகப் பிரிவினருடன் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் வசிக்கின்றனர். இவர்கள் மரியாதைப் படிநிலையைத் தீவிரமாகப் பின்பற்றுகின்றனர்.
ஜப்பானிய மொழியை மட்டுமே கற்றுத் தெளியும் அந்நாட்டவர் அந்த மொழியிலேயே கணினி, அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கற்கின்றனர். அங்கு ஏறத்தாழ 20 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். தற்போது அந்நாட்டில் ஆங்கில மொழி கற்பிக்கப்படுகிறது. இளைஞர்கள் ஆங்கிலத்தில் பேசவும் மேனாட்டு நாகரிகத்தைப் பின்பற்றவும் ஆசைப்படுவதால் திருமணத்தை வெறுகின்றனர். அதனால் குழந்தைப் பேறு குறைகிறது. மூத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
ஜப்பானில் எழுத்தறிவு உடையோர் நூறு சதவீதம் ஆகும். சிறுவர்களுக்கு 'அனிமேஷன்' மூலமாக பாடம் கற்பிக்கின்றனர். சுத்தம், சுகாதாரம், மறு பயன்பாடு, நேர மேலாண்மை ஆகியவை சிறுவயதில் இருந்து கற்பிக்கப்படுகிறது.
வீடுகளிலும், கடைகளிலும், தெருவிலும் 'எந்திரன்'களைக் காணமுடியும். 'புல்லட் ரயில்' விடுவதில் இந்நாடு முதலிடத்தில் உள்ளது.
ஜப்பானியர் 'உணவே மருந்து' முறைப்படி வாழ்கின்றனர். அங்கு அரிசியே பிரதான உணவு. மீன் குஞ்சுகளை சோற்றுருண்டைக்குள் பொதிந்த 'சுஷி' என்னும் உணவு ஜப்பானின் பிரபல உணவாகும். குதிரை இறைச்சியைப் பச்சையாக உண்பர். அரிசியில் 'சாகே' (Sake) என்ற மதுவை (சுண்டக் கஞ்சி) அவரவர் வீட்டிலேயே தயாரித்து அருந்துவர்.
ஜப்பான் மொழி தமிழைப் போல பகுதி விகுதி இடைநிலை சந்தி என ஒட்டுக்கள் இணைந்து வரும் ஒட்டுநிலைமொழி ஆகும். தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும், கொரிய மொழிக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை சுசுமோ ஓநோ போன்ற பல அறிஞர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளனர். சென்னையில் ஆசியவியல் ஆய்வியல் நிறுவனம் தமிழ் மூலமாக ஜப்பான் மொழி கற்பதற்கான நூல்களை வெளியிட்டுள்ளது. ஆங்கிலம் மூலமாக படிப்பதை விட தமிழ் மூலமாக ஜப்பானிய மொழியை படிப்பது எளிது.
ஜப்பானியர் தமது மொழியை ரோமன் எழுத்துக்களிலும் ( a,b,c எழுத்துக்கள்) எழுதிப் படிப்பதுண்டு. இந்த எழுத்தை ரோமாஜி (Romaji) என்பர்.
இது தவிர பிற மொழி எழுத்துகளைப் பிரித்துக் காட்ட வேண்டி அதனை 'கதகானா' (Kata gana) என்ற எழுத்தில் எழுதுவர். பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொற்களை (Noun & Verbs) சீனமொழிச் சொற்களாக 'காஞ்சி' (Kanji) என்ற சித்திர எழுத்துகளில் எழுதுவார்கள். இடைச்சொற்களைத் தமது ஹிராகாணா எழுத்து வடிவில் எழுதுவர். அவர்கள் தம் மொழியை மேலிருந்து கீழாக எழுதுவர். இரண்டு கைகளாலும் அவர்களால் எழுதமுடியும்.
ஜப்பானிய மொழியில் 'ட' என்ற ஒலி கிடையாது. அதன் தலைநகரை 'தோக்கியோ' என்று தான் அழைக்க வேண்டும்.
உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் முதலிடத்தில் உள்ள தோக்கியோவில் ஒரு கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் வெளிநாட்டவர் 2 சதவீதம் மட்டுமே.
ஜப்பானில் மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாகவும் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும் நடப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் குறைவு. அதனால் அங்குக் கொலையும், தற்கொலைகளும் குறைவு.
ஜப்பானியர் அதிர்ந்து பேசமாட்டார்கள். ஆனால் சுமோ, நிஞ்சா போன்ற தற்காப்புக் கலைகளில் வல்லவர்கள். இவர்களின் பௌத்த சமயம் உடலை யோக சாதனமாக பயன்படுத்தும் வழிமுறைகளை கற்றுத்தந்துள்ளது.