
ஜப்பானியருக்கும் இந்தியருக்கும் நிறைய பண்பாட்டு ஒற்றுமைகள் உண்டு. குறிப்பாக, மொழி, வழிபாடு, உணவு போன்றவற்றில் இரு நாட்டினரும் நெருங்கிய உறவு கொண்டுள்ளனர்.
ஜப்பானிய மொழியில் 'ட' என்ற ஒலி கிடையாது. அதன் தலைநகரை 'தோக்கியோ' என்று தான் அழைக்க வேண்டும். அந்நகரில் ஒரு கோடி மக்கள் வாழ்கின்றனர். உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் தோக்கியோ முதலிடத்தில் உள்ளது. இங்கு வசிக்கும் வெளிநாட்டவர் 2 சதவீதம் மட்டுமே. ஜப்பானியர் பேசுவதற்கும், நிற்பதற்கும், உட்கார்வதற்கும், சாப்பிடுவதற்கும் என தனித்தனி விதிமுறைகளைப் பின்பற்றுவர். பெரியவர்களுக்கு (ஒரு வயது மூத்தவராக இருந்தாலும்) அதிகளவில் மரியாதை தருவர்.
விழாக்கள்
ஜப்பானியர் பொங்கல் விழா கொண்டாடுவர். நாம் 'பொங்கலோ,பொங்கல்' என்று ஆர்ப்பரிப்பது போல அவர்கள் 'ஹொங்கரோ ஹொங்கர்' என்பர். நமது 'நவராத்திரி' போல கொலுப்படிகள் செய்து அவர்களும் சிறுமிகளுக்காக பொம்மைகளைப் படிக்கட்டில் அடுக்கி வைத்து கொண்டாடுவர். கியோதோ நகரில் 1,600 கோயில்கள் உண்டு. இந்நகரத்தை ஜப்பானின் இரண்டாம் தலைநகர் என்பர்.
தெய்வங்கள்
இந்தியாவின் 11 தெய்வங்கள் புத்த மதத் துறவிகள் மூலமாக அங்கே பரவியுள்ளது. விநாயகர், சரஸ்வதி, இந்திரன், முருகன், எமன் போன்ற தெய்வங்களை ஜப்பானியர் வேறு பெயர்களில் வணங்குகின்றனர். அவை பௌத்த மதத் தெய்வங்களாக அங்கு வணங்கப்படுகின்றன.
சந்திர வழிபாடு
ஜப்பானியர் சித்ரா பௌர்ணமியையும் வைகாசி பௌர்ணமியையும் புத்தர் நினைவாகக் கொண்டாடுகின்றனர். அவர்கள் தம் வீட்டு ஜன்னல் வழியாக சந்திரனை (மூன் வாட்சிங்) ஒரு யோகப் பயிற்சியாகக் காண்பர். சந்திரன் ஜன்னலின் கீழ் விளிம்பில் தோன்றி பின் மேலெழுந்து சென்று மேல் விளிம்பில் மறைவது வரை அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருப்பர்.
'கொ தாமா' எனப்படும் மரக்கடவுள்
ஜப்பானிலும் சீனாவிலும் மரங்களை மக்கள் தெய்வாம்சம் பொருந்தியனவாகக் கருதுகின்றனர். ஜப்பானில் 'கொ தாமா' என்ற சொல்லால் மரக்கடவுளைக் குறிப்பிடுகின்றனர். அதன் (கொ தாமாரின்) சாபத்துக்கு ஆளாகக் கூடாது என அஞ்சுகின்றனர். ஜப்பானில் மரங்களை வெட்டுவதற்கு அவற்றிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக ஆண்டுதோறும் 'கொ தாமா சானு'க்கு சிறப்பு வழிபாடும் பண்டிகையும் நடத்துகின்றனர்.
ஸஸான் ஸகொதாமா சான் = மரக்கடவுள் அவர்கள் (சான் என்றால் தமிழில் அவர்கள் போன்ற ஒரு மரியாதை சொல் ஆகும்)
ஜப்பானின் ஸ்தலவிருட்சம் Gink Ko
1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ம் நாள் ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்டபோது அனைத்து மரம், செடி, கொடிகளும் கருகிப் போயின. விளைநிலங்கள் தரிசாகி விட்டன. தாவரவியல் அறிஞர்கள் Gink Ko Phyta என்ற மரம் உலகில் அழிந்து விட்டதாக முடிவு செய்தனர். அப்போது அங்கு வாழ்ந்த சீனத் துறவிகள் தமது மடத்தில் அந்த மரத்தைப் பாதுகாத்து வளர்த்து வருவது தெரியவந்தது (இது போலத்தானே நமது ஸ்தலவிருட்சங்கள் கோவிலின் பெயரால் பாதுகாக்கப் படுகின்றன?) Ging Ko மரத்தை ஜப்பானில் 'பாலூட்டும் தாய்மாருக்கு உதவும் மரம்' என அழைப்பர். இந்த Ging Ko மரம் மட்டும் அமெரிக்க குண்டுவீச்சின் நச்சுக்காற்றிலும் தாக்குப் பிடித்ததால் இதனை 'Living fossil' , 'The survivor' , 'The bearer of hope' என்று இம்மக்கள் அழைக்கின்றனர். இந்த மரம் அணுகுண்டில் இருந்து வெளியேறிய நஞ்சினையும் எதிர்த்து நிற்கும் வீரியம் படைத்ததாக உள்ளது.
எரிமலை பூமியான ஜப்பானில் ஒரு வருடத்தில் சிறியதும் பெரியதுமாக 1500 முறை பூமி அதிர்ச்சி ஏற்படுகின்றது. 200 முறை எரிமலைகள் குமுறுகின்றன. Ging ko மரங்கள் ஜப்பானியருக்கு உயிர்ச்சத்தைக் கொடுத்து வாழ வைக்கின்றன.