
2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் , தீர்க்க தரிசனங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வந்தது. கோவிட் காலத்திற்கு பின்னர் அதிக மக்களால் கணிப்புகள் நம்பப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் கணிப்புகளில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் நடைப்பெற்றதும் , அதைக் கணித்தவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றது. துல்லியமான கணிப்புகளுக்கு பெயர் பெற்ற ஜப்பானிய ஜோதிடர் ரியோ டாட்சுகியின் புதிய கணிப்புகள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஜோதிடர் ரியோ டாட்சுகி 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பேரழிவு நடக்கும் என்று பீதியூட்டும் கணிப்பை வெளியிட்டுள்ளார். இவரது கணிப்புகள் உலக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ரியோ டாட்சுகியின் முந்தைய கணிப்புகள் உண்மையானதால் , புதிய கணிப்புகள் அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. ரியோ தட்சுகி முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு தனது "தி ஃபியூச்சர் ஐ சா" என்ற புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் சிலரது கவனத்தை ஈர்த்தார். இது பல ஆண்டுகளாக அவர் கணித்த தீர்க்க தரிசனங்களின் தொகுப்பாக இருந்தது. இந்தப் புத்தகம் ஆரம்பத்தில் சிறிய கவனத்தைப் பெற்றிருந்தாலும், தட்சுகியின் பல கணிப்புகள் உண்மையாகி, அதன்பின் அவர் ஜப்பானை தாண்டி புகழ் பெற்றார்.
அவர் 2011 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த டோஹோகு பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து ஏற்படும் பேரழிவுகளைப் பற்றிய கணிப்புகளை செய்திருந்தார். பின்னாளில் அவர் குறிப்பிட்ட மாதத்தில் பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்த சுனாமி ஏற்பட்டு 18,000 க்கும் மேற்பட்ட மக்களை பலி கொண்டது. ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணுஉலையில் கசிவு ஏற்பட, அது உலகையே அதிர்ச்சியில் தள்ளியது. அவர் குறிப்பிட்ட சம்பவங்கள் நடைபெற்றதும் மக்கள் அவரை நம்பத் தொடங்கினார்.
சர்வதேச ஊடகங்கள் அவரை ஜப்பானின் பாபா வாங்கா என்றும், புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கின்றன.
ஜப்பான் பாபா ரியோ தட்சுகி எழுதிய "நான் கண்ட எதிர்காலம்" என்ற புத்தகம் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் ஜூலை 2025 இல் நிகழவிருக்கும் ஒரு பேரழிவு பற்றி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை மாதம் ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கடியில் ஒரு பெரிய விரிசல் உருவாக உள்ளது. இந்த விரிசல் காரணமாக இரு தட்டுகளில் உள்ள நாடுகள் மீது பேரழிவு ஏற்படும். இது 2011 ஆம் ஆண்டு டோஹோகு பேரழிவின் போது ஏற்பட்ட சுனாமி அலைகளை விட மூன்று மடங்கு உயரத்தில் சுனாமிகளை ஏற்படுத்தும்.
இது போன்ற மிகப் பெரிய சுனாமி வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கும் . கடலுக்கடியில் எரிமலை வெடித்து இழப்புகளை மேலும் அதிகரிக்கும். இந்த பேரழிவின் மையப்பகுதி ஜப்பான், தைவான், இந்தோனேசியா மற்றும் வடக்கு மரியானா தீவுகளை இணைக்கும் வைர வடிவப் பகுதியாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் சுற்றியுள்ள மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கலாம். இந்த நேரத்தில் பிலிப்பைன்ஸ் இந்தோனேஷியா அருகில் உள்ள சிங்கப்பூர் , மலேஷியா இந்தியாவின் அந்தமான் பகுதிகள் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம்.
புதிய பாபாவின் தீர்க்கதரிசனம் , குறிப்பாக ஜூலை மாதத்தில் ஜப்பானுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளிடையே மாற்றத்தை கொடுத்துள்ளது. பலரும் தங்களது பயணத்தை ரத்து செய்ய தொடங்கியுள்ளனர். ஏப்ரல் 2025 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஜப்பானில் உள்ள சீன நாட்டினர் இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு சீன தூதரகம் எச்சரித்துள்ளது. ஜப்பானிய அரசு , நாட்டின் விரிவான பேரிடர் மீட்புக்கு , உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தயார் நிலையில் உள்ளது.