
வரலாற்று கதைகளின் பிதாமகன், ஆசிரியர் கல்கியின் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உண்மைகளை உணர்த்துவதாக எழுதப்பட்டு இருக்கும். தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் காலத்திலேயே கல்வி அறிவு பெற்ற தமிழர்கள் ஏராளமாக இருந்தனர். அவர்கள் புராணக் கதைகளில் பேரார்வம் கொண்டிருந்தனர். அந்த காலத்தில் தமிழர்கள் புதிய கதைகளைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். அவர்களின் ஆர்வத்திற்கு தன் எழுத்துகள் மூலம் விருந்து படைத்தவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
அவரது 3 வரலாற்று நாவல்களின் வெற்றியால் இன்று வரையில் தமிழ் அரசர்களின் வரலாற்றை புனைந்து நூற்றுக்கணக்கான நாவல்கள் வந்து விட்டன. எவ்வளவு நாவல்கள் இருந்தாலும் அதில் என்றும் முதலிடம் பெறுவது பொன்னியின் செல்வன் என்ற சோழ பெருங்காப்பிய நூல் தான். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு எல்லாம் இன்றும் உயரத்தில் நிற்பவை. இந்த நாவல்களை தமிழகத்தில் படிக்காதவர்கள் இருக்க முடியாது.
இந்த நாவல்கள் நாம் வெறுமனே படித்து மகிழ்வதற்காக மட்டும் ஆசிரியர் எழுதவில்லை. அந்த காலக்கட்டத்தில் அதன் நோக்கத்தை நாம் உணர வேண்டும் என்று எழுதியுள்ளார். மாபெரும் வெற்றி பெற்ற கல்கியின் 3 நாவல்களும் அன்றைய கால மக்களுக்கு தேசிய உணர்வினை ஊட்டுவதற்காக எழுதி இருந்தார்.
1. பார்த்திபன் கனவு
இந்த நூல் பார்த்திபன் என்னும் சோழ மன்னன், தன் சோழநாடு பல்லவ மன்னனின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற வேண்டும் என்ற கனவினை கருவாகக் கொண்டது. பார்த்திப சோழன் சுதந்திர கனவுகளுடன் பல்லவர்களுடன் போரிட்டு வீர சுவர்க்கம் புகுகிறார். பார்த்திப மன்னனின் விடுதலைக் கனவு அவரது மகன் விக்கிரம சோழன் மூலம் நனவாகிறது.
இந்த கதையை கல்கி அவர்கள் அன்றைய காலக் கட்ட விடுதலைக் கனவைப் பின்னணியாக வைத்தே எழுதியிருந்தார். அப்போது பிரிட்டிஷ் காரர்களுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு ஏராளமானோர் தங்கள் உயிரை தியாகம் செய்திருந்தனர். தங்களின் தாய் தந்தையரின் விடுதலைக் கனவை நனவாக்க அடுத்த தலைமுறையினரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற வேண்டும் என்பதை மனதில் வைத்தே ஆசிரியர் இந்தக் கதையை எழுதி இருந்தார்.
2. சிவகாமியின் சபதம்
பல்லவ நாட்டின் நடன மங்கை சிவகாமிக்கும் அந்த நாட்டு இளவரசன் நரசிம்ம வர்மனுக்கும் தீராத காதல் இருந்தது. இவர்களின் காதலின் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருந்த பல்லவ நாட்டின் மீது சாளுக்கிய மன்னன் புலிகேசி படையெடுத்து சிவகாமியை சிறைப் பிடித்து சென்றான். சிவகாமியை புலிகேசி மன்னன் கொடுமைப்படுத்த, "தன் காதலன் நரசிம்ம பல்லவன் வாதாபி நகரை தீக்கிரையாக்கித் தன்னை மீட்டுச் செல்லும் வரை தான் அந்நகர் விட்டு வெளியேறுவதில்லை" என்று சபதம் செய்கிறாள் சிவகாமி.
இதனால் ரகசியமாக அவளை காப்பாற்றி அழைத்து செல்ல வந்த நரசிம்மவர்ம மன்னனுடன் வர மறுக்கிறாள். இறுதியில் நரசிம்மன் பெரும்படை திரட்டி வாதாபியை தீக்கிரையாக்கி சிவகாமியையும் மீட்டு நாடு திரும்புகிறான். அங்கு நரசிம்மன் பெரும்படை திரட்ட சோழ இளவரசியை மணந்ததை அறிந்து மனம் வெதும்பி பரதத்திற்கு தன்னை அர்ப்பணித்து விடுகிறாள் சிவகாமி!
விடுதலைப் போராட்டத்தின் உச்சக் காலக்கட்டத்தில் எழுதப்பட்ட சிவகாமியின் சபதம் அன்றைய இந்திய விடுதலைப் போராட்டத்தின் வடிவத்தை உணர்ச்சியுடன் காட்டியது. அன்று நரசிம்மர் சிவகாமி போன்ற ஏராளமான காதலர்களை , கணவன் மனைவிகளை விடுதலைப் போராட்டம் பிரித்தது. சிவகாமி போன்ற எண்ணற்ற தாய்மார்களின் சபதம் விடுதலைப் போரை தீவிரப்படுத்தியது. இறுதியில் நாட்டிற்கு விடுதலை கிடைத்தாலும் அதற்கு பின்னால் சிவகாமி போன்றோரின் தியாகம் இருக்கிறது, என்பதை உணர்த்தும் வகையிலும் விடுதலை உணர்வை தூண்டும் வகையிலும் கல்கியின் பார்த்திபன் கனவு மற்றும் சிவகாமியின் சபதம் ஆகிய வரலாற்று நாவல்கள் எழுதப்பட்டிருக்கும்.
3. பொன்னியின் செல்வன்
இந்திய நாவல்களில் இன்று வரை, எந்த நாவலும் அருகில் கூட நெருங்க முடியாத அளவில் உயரத்தில் உள்ளது பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல். சோழப் பேரரசர் பெரிய தேவர் சுந்தர சோழனுக்கும் அவரது நாட்டை சதி செய்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் சிற்றரசர்களின் எண்ணங்களுக்கும் இடையில் நிகழும் நிகழ்வு தான் இந்த பெருங்கதை.
சோழநாட்டு இளவரசன் ஆதித்தன் படுகொலையும் அதை தொடர்ந்து எழும் அரசியல் குழப்பங்களும், வந்தியத் தேவனின் சுவாரசியமிக்க கேலி பேச்சுகளும் , இளவரசி குந்தவியின் ஆளுமையும், அருண்மொழி - வானதியின் அழகிய காதலும் பழுவேட்டையர்களின் வீரமும் அவ்வப்போது சிரிக்க வைக்கும் ஆழ்வார்க்கடியான் நகைச்சுவை என ஜனரஞ்சகமாக உருவாகிய தமிழின் முதல் சரித்திர நாவல் இது தான்.
விடுதலைக்கு பின்னர் இந்தியாவில் ஏற்படும் அரசியல் குழப்பங்கள் , அமைச்சர்களின் ஊழல்கள் , இந்தப் பெரிய நாட்டை சிதைத்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட நாவல் இது. இந்த நாவல் விடுதலைப் பெற்ற ஒரு நாடு எதிர்காலத்தில் சந்திக்க உள்ள ஆபத்துகளை விளக்குகிறது. நாட்டை உருவாக்க ஒரு காலத்தில் தியாகம் செய்தவர்கள், பின்னாளில் பதவி கிடைத்ததும் அதிகார போதையில் ஆடக் கூடாது என்பதை பழுவேட்டரையரின் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தி இருப்பார்.
மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் அடித்துக் கொள்ளக் கூடாது என்பதை ஆழ்வார்கடியான் மூலமும் , அண்டை நாட்டினர் எவ்வாறு நம் நாட்டை நாசமாக்க முயல்வார்கள் என்பதை நந்தினி, பாண்டிய ஆபத்துதவிகள் மூலமும் விளக்கி இருப்பார். சிறு சிறு கட்சிகள் எல்லாம் அதிகாரம் பிடிக்க சதிகள் செய்ய காத்திருப்பார்கள் என்பதை சிற்றரசுகள் எண்ணங்களில் வெளிப்படுத்தி இருப்பார்.
கல்கியின் மூன்று நாவல்கள் உணர்த்தும் உண்மைகள்
கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய மூன்று நாவல்கள் விடுதலைக் கனவு , விடுதலை போராட்டம் , விடுதலைக்கு பின்னர் அரசியல் நிலை ஆகியவற்றை உணர்த்துகிறது.