
அச்சு அசல் ஓவியங்களுடன் நமது கல்கி இதழ்களில் வெளியான பொன்னியின் செல்வன் தொடர்கதையை படித்து மகிழ click here:
தமிழின் ஆகப் பெரும் எழுத்தாளரான கல்கி எழுதிய பொன்னியின் செல்வனைக் கையில் எடுத்தால் முடிக்கும் வரை வேறு வேலை எதையும் செய்ய முடியாது! இது தமிழர்களின் அனுபவம்!
பொன்னியின் செல்வனில் நீங்கள் நான்கு லட்சத்தி பதினான்காயிரத்து நானூற்றி எண்பத்துமூன்று – 4,14,483 – சொற்களைப் படிக்கிறீர்கள்!
50876 வாக்கியங்கள் கொண்டது இந்த சரித்திர நாவல்.
***************
அட, இதை யார் கண்டுபிடித்தது என்று கேட்கிறீர்களா?
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம் ஐ டி காம்பஸில் உள்ள AU-KBC Research Centre – ஏயூ கேபிசி ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டு பல நுணுக்கமான புள்ளி விவரங்களைத் தந்துள்ளது.
2016ல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை வைத்து கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கல்கி ஆர்வலரான திரு க. சீனிவாசன் இன்னொரு ஆய்வை மேற்கொண்டார். கிடைத்த தரவுகளை வைத்துக் கொண்டு இந்த நாவலை அலசி ஆராய்வதற்குத் தேவையான நிரல்களை மட்டும் கம்ப்யூட்டருக்கென அவர் எழுதினார்.
இதன் மூலம் கல்கி அவர்களின் சொல்லாட்சியைத் தெரிந்து கொள்ளலாம். 293 அத்தியாயங்கள் கொண்ட பொன்னியின் செல்வன்:
ஏ-4 அளவுத் தாளில் அச்சிடப்பட்டால் சுமார் 900 பக்கங்கள் வரும்.
அதில் உள்ள ஓர் எழுத்துச் சொற்கள் 2220; இரண்டு எழுத்துச் சொற்கள் 40606; மூன்று எழுத்துச் சொற்கள் 78705; நான்கு எழுத்துச் சொற்கள் 101573; ஐந்து எழுத்துச் சொற்கள் 69321; ஆறு எழுத்துச் சொற்கள் 44348; ஏழு எழுத்துச் சொற்கள் 30217; எட்டு எழுத்துச் சொற்கள் 19220; ஒன்பது எழுத்துச் சொற்கள் 9445; பத்து எழுத்துச் சொற்கள் 5830; பதினொன்று எழுத்துச் சொற்கள் 2961; பன்னிரெண்டு எழுத்துச் சொற்கள் 1438.
இவர் தனது ஆய்வின் முடிவாக 61333 வாக்கியங்களில் பத்தொன்பது லட்சத்தி பதினாலாயிரத்தி நானூறு எழுத்துக்கள் உள்ளதாகச் சொல்கிறார்.
ஷேக்ஸ்பியர் தனது 37 படைப்புகளில் 8,35,997 சொற்களைக் கையாண்டுள்ளார். கல்கியோ ஒரே படைப்பில் 4,14,483 சொற்கள்!
வள்ளுவர் 1330 குறள்களில் 4310 சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
இப்படி எல்லாம் சொற்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது, மொழி வல்லமையைப் பற்றி ஆய்வுகள் செய்யும் ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
பொன்னியின் செல்வனைப் பற்றிய ஏராளமான ஆய்வுகள் ஒவ்வொன்றும் ஒரு விதமான சிறப்பை முன்னிறுத்துகிறது.
இதை ஒரு முறை படித்தவர்கள் மறுமுறை படிக்காமல் இருப்பதில்லை.
இதில் வரும் வந்தியத்தேவன், குந்தவை, பூங்குழலி, பொன்னியின் செல்வன், செம்பியன் மாதேவி, வானதி, சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன் உள்ளிட்டோர் நம் நினைவை விட்டு நீங்காத கதாபாத்திரங்களாக ஆகி விடுகின்றனர்.
தமிழுக்குப் பெருமை கல்கி!
தமிழ் தனக்குக் கிடைத்ததைப் பெருமையாக நினைத்தார் கல்கி; தமிழுக்கு அவர் கிடைத்ததைப் பெருமையாக நினைப்போம் நாம்.
கல்கியின் ஜிலு ஜிலு நடையைக் கொண்ட பொன்னியின் செல்வன் போன்ற ஒரு நாவல் தமிழில் வசன நடையில் இதற்கு முன் வந்தது இல்லை என்பது ஒரு புறமிருக்க இனி இப்படி ஒரு நாவல் எதிர்காலத்தில் தோன்றுமா என்பதும் சந்தேகமே!
இதை projectmadurai.org இணையதளத்தில் இலவசமாகப் படிக்கலாம்; பல பதிப்பகங்கள் அழகுற அச்சிட்டுள்ளன. புத்தகமாக வாங்கி வீட்டில் வைத்துப் படித்துப் படித்து மகிழலாம்!