
கண்களில் ஒற்றியபடி அவன் அந்தப் புத்தகத்தைப் பிரித்தான்! ‘புது வெள்ளம்’ என்ற முதல் பாகத்தின் பெயரைப் போலவே அவன் உள்ளத்தில் புது வெள்ளம் பீறிட்டுப் பாய்ந்தது! பதினொன்றாம் வகுப்பின் பொதுத் தேர்வுக்காக நேற்று வரை படித்து, பரீட்சைகளையெல்லாம் எழுதி முடித்த அவனுக்கு, இந்த நாவலைப் படிப்பதில் அவ்வளவு ஆர்வம்! அதிகாலையின் அமைதியும், மிதமான குளிரும் மனசுக்கு இதம் அளிக்க, அவன் கவனமெல்லாம் அந்த நவீனத்தில் நன்கு பதிந்திருந்தது.
வீரநாராயணபுரம் ஏரி - அதாங்க, வீராணம் ஏரி குறித்த வருணனையும், அதன் கரைகளி்ன் அமைப்பைக் கண்டு வியந்தபடி, தனது குதிரையை அதன் இஷ்டத்திற்கு மெல்ல நடக்க விட்டபடி செல்லும் வந்தியத்தேவனும், அவன் மனதில் மெல்ல தடம் பதிக்க ஆரம்பிக்க, அவன் பெரும் திருப்தியுடன் அந்தப் புதினத்தைத் தொடர்ந்தான்!
ஆடி பதினெட்டில் தொடங்கும் அந்தக் கதை, கடம்பூர் மாளிகையின் நடுநிசிக் கூட்டத்துடன் தொடர்கிறது. வினாடிக்கு ஒரு நூற்றாண்டு என்ற வேகத்தில் கதைக் களத்துக்கு வாசகர்களை அழைத்துச் செல்லும் அமரர் கல்கி ஐயாவின் அந்த யுக்தி, வெகுவாகக் அவனைக் கவர்ந்தது. கதை படிப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு மட்டுமல்ல, வாழ்க்கைப் பாடமும் அதுதான் என்ற எண்ணம் சிறு வயதிலேயே அவனுள்ளே துளிர்த்து விட்டது. அதிலும் இந்தக் கதையைப் படிப்பது… ‘எப்படி வரலாற்றையும், வாழ்விடங்களையும் ஓர் எழுத்தாளரால் இப்படிச் சரியாக இணைத்து எழுத முடிகிறது’ என்ற ஆச்சரியம் அவனுள்ளே ஊற்றாகப் பெருக்கெடுத்தது! அது மட்டுமா? பூகோள ஆசிரியர்களையே வியக்க வைக்கும் விதமாக எல்லா இடங்களையும், ஏன்? மூலை முடுக்குகளின் முக்கியத்துவத்தையும் கூட கதைக் கருவுடன் இணைத்து கதையைக் காவியமாக்கிய அவரின் கற்பனை விசுவரூபம் எடுத்தது அவனுக்குள்!
சம்மணம் போட்டுச் சாப்பிடுகையிலும் மடியில் வைத்து அதனைப் படிக்க, ”சாப்பிட்டுட்டு அப்புறந்தான் படியேப்பா!” என்று ஆரம்பித்த அம்மா, பல நாட்கள் அதனைச் சொல்லிச் சொல்லி ஓய்ந்தே போனார்கள். வல்லவரையன் வந்தியத்தேவன் அவனுள்ளே பதியப் பதிய, தானும் பிற்காலத்தில் வந்தியத்தேவனைப் போல் ஒரு வெற்றியாளனாக உருவெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது.
வந்தியத்தேவனும் குந்தவையும் சந்திக்கும் அத்தியாயங்களின் பக்கங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, அமைதியாகப் படுத்து அசைபோடும் பசுவைப் போல், மீண்டும் ஒரு முறை அதனைப் படித்தான். ‘உயர் குணம் கொண்ட பெண்கள் உண்மையான வெற்றியாளர்களை மட்டுந்தான் காதலிப்பார்கள் போலும்!’ என்ற கருத்து மெல்ல அவனுள்ளே படர்ந்தது.
ஐந்து பாகங்கள்! ஆயிரக்கணக்கான பக்கங்கள்! அவ்வளவு கதாபாத்திரங்கள்! ஆனாலும், விவேகம் குறையாத வேகம்! அதனைப் படிக்கும் வாசகர்களின் மனதில் இன்பம், துன்பம், வியப்பு, கோபம், சிரிப்பு என்று அத்தனை ரசங்களையும் கொண்டு வந்து, எழுத்துலக வரலாற்றில் ஏகலைவனாக நிமிர்ந்து நிற்பவர் ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.1960களின் இறுதியில் ஒவ்வொரு பாகம் முடிந்ததும் உடனடியாகத் தொடர்ந்து அடுத்ததைப் படிக்கும் நிலை அவனுக்கு அமைந்தது ஒரு கொடுப்பினையே! 1950களில் தொடர்கதையாக வந்தபோது, வாராவாரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த வாசகர்களை எண்ணி, ஒரு பக்கம் வருத்தமாகவே இருக்கிறது.
அவனைப் போலவே ஆயிரமாயிரம் இளைஞர்கள் மனதில், ஒரேயொரு வந்தியத்தேவனைக் கொண்டு வீரத்தையும், சாதுரியத்தையும், சமயோசித புத்தியையும் விதைத்த வித்தகர் அமரர் கல்கி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்தக் கதை வெளிவந்து 70, 75 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படமாக வெளியாகிக் கொண்டாட்டம் போடுகிறது, ‘பொன்னியின் செல்வன்’ என்றால், அவரது எழுத்தாற்றலை என்னென்பது?
சிறுகதைகள், சமூக நாவல்கள், வரலாற்றுப் புதினங்கள், பயணக் கட்டுரைகளென்று அவர் தொட்ட அனைத்திலும் தனது தனி முத்திரையைப் பதித்த வரலாற்று நாயகர் அவர்! இவ்வளவு போக்குவரத்து வசதிகளும், அபரிமிதமான அதிசயிக்கத்தக்க தொலைத் தொடர்புகளும் இல்லாத அந்தக் காலத்திலேயே அவர் இவ்வளவு சாதித்திருக்கிறார் என்றால், இன்றைக்கு அவர் வாழ்ந்திருந்தால் எவ்வளவு உன்னதங்களை நிகழ்த்தியிருப்பார் என்று எண்ணும்போதே இதயம் விம்முகிறது!
‘‘வந்தியத்தேவனாக தன்னை பாவித்துக் கொண்டு, வாழ்வின் படிக்கட்டுகளில் ஏறிய அந்த ‘அவன்’ யார்?” என்றுதானே யோசிக்கிறீர்கள்! அந்த வளமிக்க வரலாற்றுப் புதினத்தைப் படித்த நீங்களும், நானும், நம்மைப் போன்ற லட்சக்கணக்கானவர்களும்தான்! அதனை விரும்பிப் படித்த யாரும் தன்னை சில நிமிடங்களாவது வல்லவரையனாக தன்னை கற்பனை செய்து கொள்ளாமல் இருந்திருக்க முடியாது!
அதிலும், இளவயதில் அதனைப் படித்தவர்கள் வந்தியத்தேவனாகவே மாற வேண்டுமென்று வேட்கை கொண்டு, அதற்கான முயற்சிகளில் இறங்கியதும் உண்டு. குந்தவையைப் போல ஒரு காதலி அமைய வேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்தனை மேற்கொண்டவர்களும் உண்டு.
‘பொறப்பதும் போறதும் இயற்கை’ என்ற நிலைப்பாடு உள்ள இந்த உலகத்தில், தனது எழுத்துக்களால் அமரத்துவம் பெறும் சில எழுத்தாளர்கள் உண்டு. தனது எழுத்துக்களால் நிகழ்கால சமுதாயத்தையும், எதிர்கால சமுதாயத்தையும் வீரத்திற்கும், துணிவுக்கும் ஆளாக்கும் வல்லமை படைத்த எழுத்தாளராக அமரர் கல்கி அவர்கள் திகழ்கிறார். அதிலும் எப்படி? கடந்த காலத்தில் நிகழ்ந்த வீரம் செறிந்த வரலாற்றை வாசகர்கள் விரும்பும் வண்ணம் எழுதியதன் மூலம்! எனவே, முக்காலத்தையும் கவரும் ஓர் எழுத்தாளராக அவர் திகழ்கிறார்.
எழுத்தாளர்கள் மறையலாம். எழுத்துக்களுக்கு, அதிலும் தரமான எழுத்துக்களுக்கு மரணமேது? அந்த எழுத்துக்கள், எழுதியவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டேதானே இருக்கும்!