இலங்கையின் தேசிய நடனமாக விளங்கும் கண்டிய நடனம்: சிங்களர்களின் புனித கலாச்சார அடையாளம்!

இலங்கையின் மத்திய மலைநாட்டில் தோன்றிய கண்டிய நடனம், கோஹம்ப கங்காரிய சடங்குகளும் எசல பெரஹரா ஊர்வலங்களும் வழியாக சிங்களர்களின் புனித பாரம்பரியத்தை தாங்கும் தேசிய நடனமாக உயர்ந்தது.
kandyan-dance
kandyan-dance
Updated on

ண்டிய நடனம் (Kandyan dance) சிங்களவர்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் ஒரு பாரம்பரியமிக்க கலை வடிவமாகும். இது பல நூற்றாண்டுகளாக சிறப்பான முறையில் ஆடப்பட்டு வருகின்றது. இந் நடனமானது சிங்களவர்களது புனித கலாச்சார நிகழ்வுகளின் பொழுது தவறாது ஆடப்படும். இது இலங்கையின் மத்திய மலைநாடான கண்டி பகுதியை பூர்வீகமாகக் கொண்டது.

கண்டி அரசர்கள் காலத்தில்(16 -19 ஆம் நூற்றாண்டுகளில்) செல்வாக்கு பெற்று வளர்ந்த இந்த நடனம் தற்போது இலங்கையின் தேசிய நடனமாக கருதப்படுகிறது. இது ஆரம்ப காலத்தில் ஆண்களால் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது பெண்கள் உட்பட இரு பாலருமே ஆடுகின்றனர். 

கண்டிய நடனத்தின் வகைகள்: 

கண்டிய நடனத்தில் வெஸ் (Ves) நடனம் மிகவும் புகழ்பெற்றது. இது தவிர பாந்தேரு (Pantheru), நையாடி (Naiyadi), வன்னம், உடக்கி (Udekki) போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. இந்த நடனங்கள் பெரும்பாலும் கோஹம்ப கங்காரிய (Kohomba Kankariya) என்ற சடங்குடன் தொடர்புடையவை. இது கண்டி தெய்வங்களை திருப்திபடுத்துவதற்காக ஆடப்படுகிறது.

வேஸ் நடனம்: 

கண்டிய நடனங்களில் மிகவும் புகழ்பெற்றது. இது புனிதமான நடனமாக கருதப்படுகிறது. 

வன்னம் நடனம்: 

இது கவிதை மற்றும் நடனத்தின் கலவையாகும். இது இயற்கையை சித்தரிக்கிறது. 18 கிளாசிக்கல் வன்னம் நடனங்களை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு கஜகா வன்னம் - யானை நடனம், மயூர வன்னம் - மயில் நடனம். 

உடக்கி நடனம்: 

உடக்கி எனப்படும் சிறிய கை டிரம்ஸைப் பயன்படுத்தி ஆடப்படும் நடனம் இது. 

பாந்தேரு நடனம்: 

பாந்தேரு எனப்படும் டம்பரின் போன்ற கருவியைப் பயன்படுத்தி ஆடும் ஆற்றல் மிக்க நடனமிது. 

நையாடி நடனம்: 

சடங்குகளின் பொழுது அணியும் உடைகளுடன் ஆடப்படுகின்ற நடனம் இது. 

லீகேலி(கோல் நடனம்), கலாகெடி(குட நடனம்) மற்றும் ரபான்(கை டிரம்) போன்றவையும் கண்டிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த நடனங்கள் முக்கியமாக ஆண்கள் ஆடும் பாரம்பரிய நடனமாக இருந்தது. 1950க்கு பிறகு பெண்களும் பயிற்சி பெற்று ஆடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
லம்பாடி நடனம்: வண்ணமயமான உடைகளும்... மண்ணின் மணமும்!
kandyan-dance

சிறப்பம்சங்கள்: 

இது வலிமையான காலடி அசைவுகள், துள்ளல், சுழற்சி மற்றும் தனித்துவமான கை அசைவுகளைக் கொண்டது. கண்டி அரசர்களின் காலத்தில் இந்த நடனம் அரசின் ஆதரவுடன் நன்கு வளர்ந்தது. இந்திய கதகளிப் பாணியை ஒத்த இந்த நடனமானது புராணக்கதை, புராண நாயகர்கள், மிருகங்களின் நடத்தைகளை முக்கிய கருவாக வைத்தே ஆடப்படுகின்றது. இலங்கையின் பண்பாட்டு அடையாளமாக கருதப்படுகின்ற இந்த நடனம், சிங்களவர்களது கலாச்சார நிகழ்வுகளின் போது தவறாமல் ஆடப்படுகின்றது.

உடை அலங்காரம்: 

கண்டி நடன கலைஞர்கள் வேலைப்பாடுகளுடன் கூடிய உடைகளை அணிந்து ஆடுகிறார்கள். இது "வெஸ் உடை" எனப்படுகிறது. நடனக் கலைஞர்கள் மிகவும் நேர்த்தியான வெள்ளி ஆபரணங்கள் மற்றும் தலைக்கவசம் (வெஸ் தொப்பியா) அணிந்து ஆடுவார்கள். இடுப்பில் அணியப்படும் வெண்மையான ஆடையும் இதற்கென தனித்துவம் வாய்ந்தது. ஆண்கள் தலைப்பாகை அணிவதுடன், மேற்சட்டை எதுவும் அணியாமல், மணிகளால் இழைத்து வலைபோல் செய்யப்பட்ட மார்பணியை  அணிகிறார்கள். காலில் சலங்கையும் அணிவதுண்டு.

இசை: 

இந்த நடனத்திற்கு பிரதானமாக 'கெத்த பெர'(Geta Beraya) என்ற பாரம்பரிய பறையும், தாளக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனை கண்டி நடனத்துக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். "தாளம்பொத்த" எனப்படும் சல்லாரியையும் பயன்படுத்துகிறார்கள். சிலவகை கண்டி நடனங்களில் பாடல்களுடன் கூடிய இசையும் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பரதநாட்டியத்தில் ஒளிந்திருக்கும் கணிதம் - வெளிநாட்டினர் வியக்கும் ரகசியம்!
kandyan-dance

இலங்கையில் கண்டி நடனத்தை பயிற்றுவிப்பதற்காக பள்ளிகளும் இயங்குகின்றன. அவற்றில் சித்திரசேன நடனப்பள்ளியே மிகவும் பெரியது மற்றும் புகழ்பெற்றது.

கண்டி எசல பெரஹரா (Esala Perahera) போன்ற முக்கிய பௌத்த சமய நிகழ்வுகள் மற்றும் கலாச்சார திருவிழாக்களில் இந்த நடனம் தவறாது ஆடப்படுகின்றது.

logo
Kalki Online
kalkionline.com