

கேரளாவின் பெயரை மாற்றப்போகிறார்கள். 'கேரளா' என்று இருக்கும் பெயரை 'கேரளம்' என்று மாற்ற வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக காண்போம்.
கேரளா என்று பெயர் வந்ததற்கு இரண்டு விதமான விஷயங்கள் சொல்கிறார்கள். முதலாவது வரலாற்று ரீதியான காரணம். அதாவது பண்டைய காலத்தில் இந்த பகுதியை சேர மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள். சேர மன்னனில் இருந்து 'சேர' என்ற வார்த்தையையும் நிலத்தை குறிக்கும் 'அளம்' என்ற வார்த்தையையும் சேர்த்து 'சேரளம்' என்று அழைக்கப்பட்டது.
அதுவே நாளடைவில் மருவி கேரளம்(keralam) என்றானது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இரண்டாவது மொழி ரீதியான விளக்கம். மலையாளத்தில் 'கேரா' என்றால் தென்னை மரம் என்று பொருள். 'அளம்' என்றால் நிலம் என்று பொருள். தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் நிலம் என்பதால் கேரளம் என்ற பெயர் வந்தது.
சரி, இப்போ எதுக்காக பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று பார்த்தால் மலையாள மக்களின் உச்சரிப்பில் கேரளம் என்றே உச்சரிப்பார்கள். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியின்போது அவர்களுக்கு உச்சரிப்பு சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக கேரளம் என்பதை 'கேரளா' என்று மாற்றி அதிகாரப்பூர்வமாக எல்லா இடத்திலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
இதாவது பரவாயில்லை நம் தஞ்சாவூரை Tanjore என்று மாற்றி வைத்திருந்தார்கள். திருச்சிராப்பள்ளியை Trichinopoly என்று மாற்றி வைத்திருந்தார்கள். திருநெல்வேலியை Thinnaveli என்று மாற்றி வைத்திருந்தார்கள். அதையெல்லாம் கூட தாங்கிக் கொள்ளலாம். தரங்கம் பாடி என்ற ஊர் இருந்தது. இதில் 'தரங்கம்' என்றால் அலை என்றும் பாடி என்றால் பாடும் இடம், ஊர் என்று அழைக்கப்படுகிறது. கடல் அலைகள் அழகாக எப்போதும் சத்தம் இட்டுக் கொண்டேயிருக்கும் இடம் என்பதால் தரங்கம்பாடி என்ற பெயர் வந்தது.
அங்கே ஆங்கிலேயருக்கு முன்பே டேனிஷ்காரர்கள் வந்துவிட்டனர். அவர்களுக்கு தரங்கம்பாடி என்ற பெயர் வராததால் Tranquebar என்று மாற்றி விட்டார்கள்.
இப்போது கேரளாவிற்கு வரலாம். ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் வேண்டாம். நம்முடைய உண்மையான உச்சரிப்பை கொண்டுவர வேண்டும் என்பதற்காக கேரளா சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர். மத்திய அரசு இதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. இன்னும் நாடாளும் மன்றத்தால் இதற்கான நடைமுறைகள் முடிந்துவிட்டால் அதிகாரப்பூர்வமாகவே கேரளம் என்ற பெயர் வந்துவிடும். அதற்கு பிறகு எல்லா ஆவணங்கள், போர்டுகளில் கேரளம் என்றுதான் இருக்கும்.