தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஓமோ பள்ளத்தாக்கில் சுர்மா பழங்குடியினர் தங்கள் கலாச்சாரத்தில் முக்கியமாக கருதப்படும் உதட்டு தட்டுகள் மற்றும் பிற மரபுகளுக்காக அறியப்படுகின்றனர். இவர்கள் தங்களின் கீழ் உதடுகளில் தட்டுகளை பொருத்திக்கொண்டு அழகு, அடையாளம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் சின்னங்களாக அவற்றை கருதுகிறார்கள். இவர்களின் உதடு தட்டுகள் அழகு, கருவுறுதல் மற்றும் சமூக அந்தஸ்தை அடையாளப்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக பெரிய உதட்டு தட்டுகள் இவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை குறிக்கின்றன.
சூரி பழங்குடியினர் மற்றும் முர்சி பழங்குடியினர் கூட்டாக சுர்மா பழங்குடியினர் என்று அழைக்கப்படும் இரண்டு இன குழுக்களாகும். முர்சி பழங்குடியினர் சூரி பழங்குடியினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். கீழ் ஓமோ பள்ளத்தாக்கில் முர்சி பழங்குடியினரும், மேல் ஓமோ பள்ளத்தாக்கில் சூரி பழங்குடியினரும் வாழ்கிறார்கள்.
இந்த இரண்டு பழங்குடியினருமே ஒத்த கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த இரண்டு பழங்குடி இன குழுக்களில் உள்ள பெண்களும் உதடு தட்டுகளை அணியும் வழக்கம் உள்ளவர்கள். இவர்கள் திருமணத்தின் பொழுது உதட்டின் அளவிற்கேற்ப வரதட்சணை நிர்ணயிக்கப்படுகிறது.
தெற்கு எத்தியோப்பியா ஓமோ பள்ளத்தாக்கு நகரமான ஜிங்காவிற்கு அருகில் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். ஓமோ தேசிய பூங்காவின் எல்லையில் உள்ள மாகோ தேசிய பூங்காவிற்குள் முர்சி பழங்குடியினர் வாழ்கின்றனர்.
இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் உதடு தகடுகள் பொருத்தப்பட்ட பழங்குடி பெண்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஜிங்காவிலிருந்து பயணம் செய்யும்பொழுது மாகோ தேசிய பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கு ஒரு ஆயுதமேந்திய சாரணர் முர்சி பழங்குடி கிராமத்திற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறார்.
மேல் ஓமோ பள்ளத்தாக்கில் சூரி பழங்குடியினர் வசிக்கின்றனர். மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அணுக முடியாத சாலைகள் காரணமாக இந்த சூரி பழங்குடியினர் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகக் குறைவாக தான் உள்ளது. இவர்கள் தெற்கு சூடானின் எல்லைக்கு மிக அருகில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தென்மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள கிபிஷ் நகரத்தைச் சுற்றி வாழ்கிறார்கள்.
இங்குள்ள பெண்களுக்கு 15 வயது ஆகும்போது உதட்டு தகடு செயல்முறை தொடங்குகிறது. உதட்டின் கீழே ஒரு சிறிய மரக் குச்சியை சொருகுவதன் மூலம் செயல்முறையை தொடங்குகிறார்கள். பின்பு மரத்தால் ஆன பெரிய குச்சிகளால் பெரிதாக்கி, பின்னர் களிமண் வட்டுக்களால் படிப்படியாக பெரிதாக்கி கீழ் உதட்டை நீட்டுகின்றனர். இந்த செயல்பாட்டின் போது உதடுகள் பாதிக்கப்படலாம். விரைவாக நீட்டினால் கீழ் உதடுப் பகுதி உடைந்து போய் இரண்டு பகுதிகளாக தொங்கிக் கொண்டு தரையை நோக்கி இருக்கும்.
கீழ் உதடு மற்றும் வாய் லிப் பிளேட்டை பிடிப்பதற்காக கீழ் பற்களில் இரண்டு முதல் நான்கு பற்கள் வரை அகற்றப்படுகின்றன. இந்த செயல்முறைகள் அவர்களுக்கு வலியை ஏற்படுத்துவதாகவும், ஆனால் விரும்பிய அளவுக்கு உருவாக்கப்பட்டவுடன் வலி இருக்காது என்றும் கூறுகின்றனர். இவர்கள் சமைக்கும் பொழுதும், வீட்டு வேலைகளை செய்யும் பொழுதும் உதட்டு தட்டுகளை அணிவதில்லை. அவற்றை எடுத்துவிட்டு சாப்பிடவும், குடிக்கவும் செய்கிறார்கள்.
சுர்மா பழங்குடி கிராமத்தில் பாரம்பரியமான லிப் பிளேட் பெண்களின் விருப்பமாக உள்ளது. இருப்பினும் இளைய தலைமுறையினர் பலர் இந்த நடைமுறையை தவிர்க்கின்றனர். அரசாங்கமும் இந்த நடைமுறையை நிறுத்த நிறைய அழுத்தம் கொடுத்து வருகிறது. இவை கடுமையான உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும் என்ற காரணத்தால் பெரும்பாலான இளம் பெண்கள் இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டாம் என்று எண்ணுகிறார்கள். உதட்டு தட்டுகளை அணியும் ஆப்பிரிக்காவின் கடைசி பழங்குடியின மக்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.