
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா வளர்த்து வந்த கம்பஸ்கேன் என்ற ஆண் குதிரையினை 1873-ம் ஆண்டில் ஹங்கேரிக்கு விற்றார். இந்தக் குதிரைக்கும், ஒரு பெண் குதிரைக்கும் 1874-ம் ஆண்டு, ஹங்கேரியின் கிஸ்பெர் நகரில் பிறந்த பெண் குதிரை தேசிய அடையாளமாக, உலகின் மற்றப் பகுதிகளிலும் மதிக்கப்படுகிறது. இக்குதிரை நான்கு பருவங்களில் பெண் மற்றும் ஆண் என இருபால் குதிரைகளையும் வீழ்த்தி ஐரோப்பா முழுவதும் 54 பந்தயங்களில் பங்கேற்று ஒரு போட்டியில் கூட பின்னடைவைச் சந்திக்காமல் முதலிடம் பெற்று சாதனையைப் படைத்திருக்கிறது.
போட்டிக்குத் தகுதியில்லாத மெலிவான உடலமைப்புடன், பலவீனமான தோற்றத்தைக் கொண்ட இந்தக் குதிரை அடைந்த வெற்றியால் பெருமையடைந்த ஹங்கேரியைச் சேர்ந்தவர்கள், “விலை மதிப்பற்ற" அல்லது "என் பொக்கிஷம்" என்று பொருள் தரும் ஹங்கேரி மொழிச் சொல்லான ‘கின்க்செம்’ (Kincsem) என்ற பெயரில் அழைத்தனர்.
கின்க்செம் தனது இரண்டாவது வயதில் 1876-ம் ஆண்டில் முதன்முறையாகப் பந்தயத்தில் கலந்து கொண்டது. அதே ஆண்டில் ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் வெவ்வேறு இடங்களில் நடந்த பத்து பந்தயங்களிலும் கின்க்செம் முதலிடம் பிடித்து, மக்களின் மனத்திலும் இடம் பிடித்தது.
1887-ம் ஆண்டில் இறந்த இக்குதிரை, அதன் வாழ்நாளில் 54 பந்தயங்களில் தொடர் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தச் சாதனை இதுவரை எந்தக் குதிரையாலும் முறியடிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஹங்கேரியில் புடாபெஸ்டில் எனுமிடத்தில் 87 ஹெக்டேர் அளவில், கின்க்செம் பெயரில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பூங்கா, குதிரைப் பந்தயம் மற்றும் குதிரை வண்டிப் பந்தயத்திற்கான முக்கியமான இடமாகவும் இருக்கிறது. இங்கு கின்க்செமின் முழு உருவச் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.