தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றித் தெரியும்! 'தில்லானா' என்றால் என்னவென்று தெரியுமா?

Thillana mohanambal
Thillana mohanambal
Published on

கொத்தமங்கலம் சுப்பு என்பவர் கலைமணி எனும் புனைப்பெயரில் எழுதிய நாவலான ‘தில்லானா மோகனாம்பாள்’ 1968 ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளியானது. சிவாஜி கணேசன், பத்மினி, எம்.என்.நம்பியார், கே.பாலாஜி, டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, நாகேஷ், சி.கே.சரஸ்வதி, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம், 1969 ஆம் ஆண்டு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது (குடியரசுத் தலைவரின் வெள்ளி பதக்கம்) பெற்றது. 1970 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகளில், இத்திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது (இரண்டாவது இடம்) பெற்றது.  இத்திரைப்படத்தில் நடித்த நடிகை பத்மினி சிறந்த நடிகைக்கான திரைப்பட விருதும், நடிகை மனோரமா சிறந்த துணை நடிகைக்கான திரைப்பட விருதும் பெற்றனர்.

நாதஸ்வரம் வாசிப்பதில் மிகவும் புகழ் பெற்றவரான சண்முகசுந்தரம் (சிவாஜி கணேசன்) எதையும் நேர்பட பேசக்கூடியவர். பரதநாட்டியம் ஆடுவதில் மிகவும் திறமையுடையவரான மோகனாம்பாள் (பத்மினி) இருவரும் தங்களது முதல் சந்திப்பிலேயே ஒருவரின் மேல் ஒருவர் காதல் வயப்படுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருவரும் சண்டையிட்டுப் பிரிகிறார்கள். அவர்கள் மீண்டும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே இத்திரைப்படத்தின் மீதக் கதையாகும். 

இந்தக் கதை ஒரு புறம் இருக்கட்டும். தில்லானா மோகனாம்பாள் என்பதில் மோகனாம்பாள் என்பது கதை நாயகியின் பெயர். முன்னொட்டாக வரும் ‘தில்லானா’ என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? 

ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில், தில்லானா, தில்லானா தித்திக்கின்ற தேனா? என்று ஒரு பாடல் வருகிறதே... அதிலும் ‘தில்லானா’ என்ற சொல் இடம் பெற்றிருக்கிறதே... 

‘தில்லானா’ என்றால் என்னவென்று அறிந்து கொள்ள ஆர்வமிருந்தால், தொடர்ந்து படியுங்கள்...!

தில்லானா என்பது ஹிந்தி வழிப் பாட்டு வகையைச் சேர்ந்த ஓர் உருப்படி ஆகும். 

உருப்படி என்பது இசைக்கப்படுவதற்கான வடிவங்கள் ஆகும். உருப்படிகள் என்பது அப்பியாசகான உருப்படிகள், சபாகான உருப்படிகள் (அரங்கிசை வடிவங்கள்) என்று இரண்டு வகைப்படும். 

இதையும் படியுங்கள்:
இராமாயணத்தில் வரும் 'தண்டகாரண்யம்' எங்கிருக்கிறது?
Thillana mohanambal

அப்பியாசகான உருப்படிகளில், 

1. சுராவளி என்றழைக்கப்படும் சரளி வரிசைகள் (கோவை வரிசைகள்)

2. ஜண்டைசுர வரிசைகள் (இரட்டைக்கோவை வரிசைகள்)

3. மேல்ஸ்தாயி வரிசைகள் (வலிவு மண்டில வரிசைகள்)

4. கீழ்ஸ்தாயி வரிசைகள் (மெலிவு மண்டல வரிசைகள்)

5. தாட்டுவரிசைகள் (தாண்டு வரிசைகள்)

6. அலங்காரங்கள்

7. கீதம்

8. ஸ்வரஜதி

9. ஜதீஸ்வரம்

10. வர்ணம்

என்று 10 வகையான உருப்படிகள் இருக்கின்றன. 

அரங்கிசை வடிவங்கள் எனப்படும் சபாகான உருப்படிகள் என்பது, ஓர் இசைவாணர் தனது இசைப்புலமையினைக் காட்டி அவையில் உள்ளவர்களை மகிழ்விக்கக் கையாளும் இசை வடிவங்கள் ஆகும். இவ்வடிவங்களில்

1. வர்ணம்

2. கிருதி

3. கீர்த்தனை

4. இராகமாலிகை

5. தேவாரம்

6. திருப்புகழ்

7. திருவருட்பா

8. திவ்வியப் பிரபந்தம்

9. பட்டினத்தார் பாடல்

10. தாயுமானவர் பாடல்

11. பதம்

12. ஜாவளி

13. தில்லானா

14. தரு

15. தரங்கம்

16. அஷ்டபதி

17. காவடிச்சிந்து

18. இராகம்-தானம்-பல்லவி 

என்று பதினெட்டு வகையான உருப்படிகள் இருக்கின்றன. இந்தப் பதினெட்டு உருப்படிகளில் ஒன்றாக இருப்பதுதான் ‘தில்லானா’. 

இதையும் படியுங்கள்:
தென்கொரியாவை ஆண்ட தமிழ் இளவரசியை பற்றித் தெரியுமா?
Thillana mohanambal

தில்லானா என்பது மத்திம காலத்தில் அமைந்துள்ளதுடன் இதன் தாது விறுவிறுப்புள்ளதாகவும் உணர்ச்சி உள்ளதாகவும் இருக்கும். இதன் சாகித்தியத்தில் முக்கியமாக திரனா, தில்லில்லானா, தொந்திரனா, தனம் என்பவை போன்ற சொற்கட்டுக்களை சேர்த்து இராக, தாள பொருத்தத்துடன் அமைந்துள்ளது.

இந்த உணர்ச்சிவசப்பட்ட உருப்படியில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்க வித்தியாசம் உண்டு. ஒவ்வோர் அங்கமும் வெவ்வேறு தாதுவில் அமைந்திருக்கும். சில தில்லானாக்களில் அனுபல்லவி இல்லாமலும் இருக்கும். அம்மாதிரித் தில்லானாக்கள் தவித்தாதுக்கள், உபயோகங்கள், சமஷ்டி, சரணங்கள் போன்றவைகளுடைய தாதுக் கிருதிகளுக்குச் சமமாக இருக்கின்றன. பல்லவியும் அனுபல்லவியும் ஜதிகளாகவும், சரணத்திலுள்ள வார்த்தைகள் சொற்கட்டு ஸ்வரங்களாகவும் இருக்கும்.

சில தில்லானாக்கள் சங்கதிகளுடன் அமைந்துள்ளன. இம்மாதிரியான உருப்படிகள் பாட்டுக் கச்சேரிகளில் பல்லவி (இராகம், தானம், பல்லவி) பாடிய பிறகு பாடுவார்கள். நாட்டியக் கச்சேரிகளிலும் பாட்டுக் கச்சேரிகளிலும் இதைப் பாடுவது வழக்கம். ஹரிகாலாட்சேபங்களிலும் கதை ஆரம்பிக்க முன்னரும் பூர்வீகப் பிடிகை முடிந்த பின்னும் தில்லானாக்களைப் பாடுவது வழக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com