

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் 19 ஆம் நூற்றாண்டில் மன்னர் சுவாதித் திருநாள் பலராம வர்மா என்பவரால் ‘குதிர மாளிகா’ அல்லது ‘குதிரை மாளிகை’ (Kuthira Malika) கட்டப்பட்டது. பத்மநாபசுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள அரசக் கட்டிடங்களின் வளாகத்திலிருக்கும் பல கட்டிடங்களில் இந்த அரண்மனையும் ஒரு பகுதியாக இருக்கிறது.
தேக்கு மரம், ரோஸ்வுட், பளிங்கு மற்றும் கிரானைட் ஆகியவற்றைக் கொண்டு, கேரளக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கட்டிடம், அதிகாரப்பூர்வமாக ‘புத்தன் மாளிகை’ என்று அழைக்கப்படுகிறது. இக்கட்டிடத்தின் கூரைப்பகுதிக்குக் கீழே 122 சிரிக்கும் மரக்குதிரைகள் அமைந்திருப்பதன் காரணமாக இது பெரும்பாலும் ‘குதிரை மாளிகை’ என்றே அழைக்கப்படுகிறது. முற்றிலும் மர வீடுகளால் ஆன கூரை, வெவ்வேறு செதுக்கப்பட்ட வடிவங்களைக் காட்டும் 42 விட்டங்கள் மற்றும் முன்பகுதியில் கூரை, மலர் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கூரையைத் தாங்கும் கிரானைட் தூண்களும் பல்வேறு கலை வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்த அரண்மனையில் 16 அறைகள் உள்ளன. அவை அனைத்தும் வெவ்வேறு வடிவங்களில் கட்டப்பட்டுள்ளன. மன்னர் சுவாதித் திருநாள் இந்த அரண்மனையில் வசித்து வந்தார். அவர் இறந்த பிறகு ஒரு வருடம் மட்டும் அவரது இல்லம் மூடப்பட்டிருந்தது. அதன் பிறகு, அண்மைக் காலம் வரை அரசக் கட்டிடம் பூட்டியே இருந்தது. இசை ஆர்வலர் சுவாதித் திருநாள் தனது முக்கியமான தொகுப்புகளில் சிலவற்றை இந்த அரண்மனையின் உள்ளே ஒரு அறையில் அமர்ந்து எழுதியதாக வரலாறு கூறுகிறது. அங்கிருந்து பத்மநாபசுவாமி கோயிலின் அரியக் காட்சியைப் பார்க்க முடியும்.
இந்த அரண்மனை ஒவ்வொரு ஆண்டும் முன் முற்றத்தில் நடத்தப்படும் புகழ்பெற்ற சுவாதி திருநாள் இசை விழாவின் போது உயிர் பெறுகிறது. ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் ஐந்து நாள் விழாவில் கருநாடக மற்றும் இந்துஸ்தானி இசை உலகின் முன்னணி இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். உஸ்தாத் பிஸ்மில்லா கான், கங்கு பாய் ஹங்கல், கிஷோரி அமோன்கர், டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா, டி.கே.பட்டம்மாள் போன்ற பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்று நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
இந்த அரண்மனையில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா, தென்னிந்தியாவின் சிறந்த இசை விழாக்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. இங்குள்ள சூழல், இசை நிகழ்ச்சிகளின் மகிழ்ச்சிக்கு மேலும் வசீகரத்தை அளிக்கிறது. குளிர்காலத்தின் குளிர்ந்த காற்றுடன், நட்சத்திரங்கள் நிறைந்த மாலை வானம், பின்னணியில் பத்மநாபனைப் புகழ்ந்து பாடல்களுடன் கூடிய ஒளிரும் அரண்மனையின் மங்கலான ஒளி ஆகியவை ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும்.
அரண்மனையின் ஒரு பகுதி, திருவாங்கூர் அரச குடும்பத்தின் படங்கள், தனிப்பட்ட உடைமைகள் மற்றும் கலைப்பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. சுவாதித் திருநாளின் தந்த சிம்மாசனம், பளிங்குச் சிலைகள், சீனக் கலைப்பொருட்கள் மற்றும் அரிய இசைக்கருவிகள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.