சில பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் தோற்கருவிகள் (percussion instruments) வெறும் சத்தத்தை மட்டும் எழுப்புவதில்லை; அவை குறிப்பிட்ட அதிர்வுகளையும், மனிதனின் உணர்ச்சி மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. பழங்காலத்திலிருந்தே சடங்குகள், சிகிச்சை முறைகள் மற்றும் குழு ஒற்றுமைக்காகப் பயன்படுத்தப்படும் இந்த இசைக் கருவிகளின் ஆழமான தாக்கம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தோற்கருவிகள் உருவாக்கும் சத்தம், காற்றில் குறைந்த அதிர்வெண் (Low Frequency) அலைகளாகப் பரவுகிறது. இந்த ஆழமான அதிர்வலைகள் காது மூலம் மட்டுமல்லாமல், நம் சருமத்தின் உணர்வு நரம்புகள் மூலமாகவும் நேரடியாக உடலுக்குள் பயணிக்கின்றன.
குறிப்பாக, 'பறை' போன்ற பெரிய தோற்கருவிகள் உருவாக்கும் 40 முதல் 100 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வெண்கள், நமது செவியைத் தாண்டி, எலும்புகள் வழியாக நேரடியாக உடலால் உணரப்படுகின்றன.
இந்த சீரான மற்றும் ஆழமான தாளங்கள் மூளையின் அலைகளை பாதிக்கின்றன. தொடர்ச்சியான தாளத்தை உணரும்போது, மூளை ஓய்வெடுக்கும் நிலைக்குச் செல்லத் தூண்டப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, அமைதியையும், தியான உணர்வையும் ஏற்படுத்துகிறது.
தாளத்தின் அதிர்வுகளால் உடலின் பல பகுதிகளிலும் உள்ள மெல்லிய தசைகள் மற்றும் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் இரத்த ஓட்டம் மற்றும் உயிரணுக்களின் செயல்பாடு அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.
தோற்கருவிகளின் தாளம் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. ஒரே தாளத்திற்கு ஏற்ப பலரும் ஒன்றாக ஆடும்போதும், பாடும்போதும், அவர்கள் ஒருமித்த உணர்வைப் பெறுகிறார்கள். இது சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது.
தாளத்தின் உச்சத்தில், மக்கள் தங்கள் உணர்ச்சிகளைத் தடையின்றி வெளிப்படுத்தவும், மன அழுத்தத்திலிருந்தும், தினசரி சவால்களிலிருந்தும் விடுபடவும் செய்கிறார்கள்.
சில பாரம்பரிய மருத்துவ முறைகளில், தோற்கருவிகளின் அதிர்வுகள் வலி நிவாரணத்திற்கும், மனநலப் பிரச்னைகளிலிருந்து விடுபடவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் நோயாளி ஒரு ஆழ்ந்த ஓய்வு நிலைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.
தாளப் பயிற்சிகளைச் செய்வது நினைவாற்றலை மேம்படுத்துகிறது. அத்துடன், படைப்பாற்றல் உள்ளுணர்வு, மொழி, வாசிப்பு மற்றும் தர்க்கரீதியான சிந்தனை போன்றவற்றுடன் தொடர்புடைய மூளையின் பகுதிகளையும் தூண்டுகிறது. இது கவனம் செலுத்தும் திறனை அதிகரித்து, அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது.
இது ஒரு உடற்பயிற்சி வடிவம். தாள இசை என்பது அசைவுகளை மீண்டும் மீண்டும் செய்வதை அடிப்படையாகக் கொண்ட ஒரு உடல் உழைப்பு ஆகும். இது பெரும்பாலும் நடனத்துடன் சேர்ந்து வரும். தாங்கும் சக்தி, கவனம் மற்றும் வலிமை ஆகியவை இதில் தேவைப்படுவதால், இது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான சிறந்த பயிற்சியாக அமைகிறது.
தாளம் வாசிக்கும்போது நாம் மிகுந்த கவனத்துடன் இருப்பதால், எவ்வளவு உடல் உழைப்பைக் கொடுக்கிறோம் என்பதை உணர மாட்டோம். இதனால் இதைச் சோர்வான ஒன்றாகக் கருதாமல், மகிழ்ச்சியான ஒன்றாகவே உணர்கிறோம்.
ஒரு கருவியைக் கற்றுக்கொள்வதிலும், அதில் வளர்ச்சி அடைவதிலும் உள்ள சவால்களை நாம் கடக்கும்போது நமது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இதில் ஈடுபடும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவை மலையின் உச்சியை அடைவது போன்ற ஒரு பெரிய சாதனை உணர்வை அளிக்கின்றன. ஒவ்வொரு முன்னேற்றமும் தொடர்ந்து வளர நம்மைத் தூண்டுகிறது.
இசை சிகிச்சை (Music Therapy) என்பது இசையுடன் இணைவதன் மூலம் மனநிலை மற்றும் பொது ஆரோக்கியத்தில் நேர்மறை மாற்றங்களைத் தூண்டுகிறது. இந்த சிகிச்சையில் இசையை உருவாக்குதல், பாடுதல், அசைதல், கேட்டல் அல்லது ஓய்வெடுத்தல் ஆகியவை அடங்கும்.
தாளக் கருவிகள் இந்தத் துறையில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. ஏனெனில் அவை ஒலிகள் மற்றும் அதிர்வுகள் (Vibrations) மூலம் மன அமைதியை அடைய உதவும் ஒரு சிறப்பான அனுபவத்தை உருவாக்கும் திறன் கொண்டவை.
உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதனை ஆழமாகப் பாதிக்கும் திறன் கொண்ட இந்தத் தோற்கருவிகள், வெறும் இசைப் பாரம்பரியமாக இல்லாமல், நமது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது.