
மழைக்காலம் மனதையும் உடலையும் வருடினாலும் உடல் நலம் பாதிக்கப்படும் நேரமாகவும் இருக்கிறது. ஆகவே, மழைக்காலங்களில் நாம் சாப்பிடும் உணவின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். அந்த வகையில் மழைக்காலங்களில் சாப்பிடக் கூடாத சில வகை உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. தெருவோர உணவுகள்: மழைக்காலங்களில் தெருவோர உணவகங்களில் சுத்தமற்ற நீர் மற்றும் பாத்திரங்கள் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகள் மிகவும் ஆபத்து விளைவிப்பவையாக இருக்கின்றன. தெருவோர கடைகளில் தயாரிக்கப்படும் சமோசா, பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட தெருவோர உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். மேலும், பானி பூரி போன்ற உணவுகள் டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் தெருவோர உணவுகளை மழைக்காலங்களில் தவிர்ப்பதே சிறந்தது.
2. பச்சை காய்கறிகள்: பச்சை இலை காய்கறிகளான கீரை, முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றில் மழை நீர் ஏறுவதால் கிருமிகள் அதிகப்படியாக இருக்கும். ஆகவே, இவற்றை நன்றாக சுத்தம் செய்யாவிட்டால் உடல்நல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உண்டு .இத்தகைய பச்சை இலை காய்கறிகளை வாங்கி வந்தவுடன் உப்பு கலந்த வெந்நீரில் கழுவி வேகவைத்து பிறகு சமைக்கப் பயன்படுத்துவதே சிறந்தது.
3. சாலட் மற்றும் பச்சை உணவுகள்: மழைக்காலங்களில் சமைக்கப்படாத கேரட், வெள்ளரிக்காய் போன்ற சாலட் வகைகள் விரைவாகக் கெட்டுப்போகும் என்பதால் அவற்றை சாப்பிடும்போது பாக்டீரியா உடலுக்குள் சென்றுவிடும் அபாயம் உள்ளது. ஆகவே, சாலட் மற்றும் பச்சை உணவுகள் மழைக்காலத்திற்கு ஏற்றதல்ல.
4. வெளியில் வெட்டப்படும் பழங்கள் மற்றும் ஜூஸ்: தெருவோரங்களில் வெட்டி வைத்து விற்கப்படும் பழங்களில் தூசி, ஈக்கள் போன்றவை இருப்பதால் அது உடலுக்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. சாலையோரங்களில் வெட்டப்பட்டு பயன்படுத்தப்படும் பழச்சாறும் சுகாதாரமற்றது என்பதால் வீட்டில் தயார் செய்த பழச்சாறு வகைகளை தயார் செய்த உடனேயே அருந்துவதே சிறந்தது.
5. கடல் உணவுகள்: மீன்களின் இனப்பெருக்கக் காலமாக மழைக்காலங்கள் இருக்கின்றன. அதனால் நீரின் தரம் பாதிக்கப்பட்டு கடல் உணவுகள் நச்சுத்தன்மை உடையதாக இருக்கக்கூடும் என்பதால் மழைக்காலங்களில் கடல் உணவுகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது.
6. பால் மற்றும் பால் பொருட்கள்: மழைக்காலங்களில் பால் பொருட்களான பால், தயிர், மோர் போன்றவை விரைவாக கெட்டுப்போகும் என்பதால் பால் பொருட்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும், பால் பொருட்களை புதிதாகப் பயன்படுத்துவதே ஆரோக்கியத்திற்கு சிறந்த வழியாகும்.
மேற்கூறிய உணவுகளை மழைக்காலங்களில் சாப்பிடும்போது கவனமாக இருப்பதும் சில நேரங்களில் தவிர்த்து விடுவதும் வயிற்றுக்கு இதமளிக்கும் இனிய தருணம் ஆகும்.