இன்று மெட்ராஸ் டே, இந்த ஊருக்கு மெட்ராஸ் என்று முந்தைய பெயர் வந்ததற்கான காரணம் தெரியுமா? கேட்டால் மதராசன் பட்டினம் தான் மதராஸ் என்று ஆனதாக சொல்வார்கள். மெட்ராஸை விட சென்னை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. லண்டன் , டோக்கியா வரிசையில் இதுவும் வரும். மெட்ராஸ் டே அன்று மறந்து போன மதராஸின் அடையாளங்களை தேடிப் போவோமா!
பிரிட்டிஷ்ராஜ் காலத்து மெட்ராஸ் நகரில், பூந்தமல்லி அதிவேக சாலையில் 1930 ஆண்டு கே.சீதாராமராவினால் உருவாக்கப்பட்டது தான் மாடர்ன் கஃபே. அந்த காலத்திலேயே சங்கிலி தொடர் உணவகமாக இது தொடங்கப்பட்டது. தமிழ் நாட்டில் மாசால் தோசை முதன்முதலாக அறிமுகமானது இந்த உணவகத்தில் தான், அது மட்டுமல்லாமல் ஐஸ்கிரீம், கூல்டிரிங்க்ஸ் எல்லாம் இங்கு அந்த காலத்திலே செய்யப்பட்டது.
பிரிட்டிஷ் காலத்தில் மாடர்ன் கஃபேயில் சாப்பிடுவது அந்தஸ்து மிகுந்த செயலாக பார்க்கப்பட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்த உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். விடுதலைக்கு பின்னர் தாசபிரகாஷ் ஹோட்டலாக மாறிய உணவகம் அப்போதும் புகழ் மங்காமல் இருந்தது. 90 களில் தாசபிரகாஷ் ஹோட்டல் மூடப்பட்டு, 2010ல் இடிக்கப்பட்டது. ஒரு காலத்தில் மாடர்ன் கஃபே என்பது மதராசின் பாரம்பரிய அடையாளமாக இருந்தது.
மெட்ராஸின் முக்கிய அடையாளமாக மூர் மார்க்கெட் இருந்தது என்றால் மிகையல்ல. லெப்டினன்ட் கர்னல் ஜார்ஜ் மூர் திட்டத்தின் படி 1900 ஆம் ஆண்டு இந்த மார்க்கட் திறக்கப்பட்டது. புத்தக கடைகள், பொம்மை கடைகள், செல்லப்பிராணி விற்பனை கூடங்கள், கிராமபோன், இசைத்தட்டு கடைகள் மற்றும் பழங்கால கலாச்சார பொருள் விற்பனைக் கூடங்கள் இவற்றிற்காகவும் இந்த சந்தை புகழ் பெற்றது. இதுக்கு மட்டுமா? பிக் பாக்கெட்டுகளுக்கும் புகழ்பெற்றது தான் மூர் மார்க்கெட்.
புத்தகக் கடைகள் பெருகியதால், இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். புத்தகக் கடைகளில் இருந்து வரும் காகித வாசனைகள், வாசகர்களை உள்ளே இழுக்கும். 80களில் ஒரு நாள் மூர் மார்க்கெட் தீப்பிடித்து எரிந்து போனதும், தென்னக இரயில்வே அந்த இடத்தை தங்களது விரிவாக்கத்திற்கு எடுத்துக் கொண்டது. அத்தோடு மெட்ராஸின் ஒரு அடையாளம் தொலைந்து போனது.
1854 ஆம் ஆண்டு மெட்ராஸ் அருங்காட்சியகத்தின் இயக்குனர் எட்வர்ட் கிரீன் பால்ஃபோர் என்பவரால் மெட்ராஸ் மிருகக் காட்சி சாலை, பார்க் டவுனில் இருக்கும் ரிப்பன் மாளிகைக்கு பின்புறம் 11 ஏக்கர் நிலப்பரப்பில் தொடங்கப்பட்டது. இவர் பிரிட்டிஷ் பாணியில் ஆற்காடு நவாப்பை வற்புறுத்தி அவரது வளர்ப்பு விலங்குகளை மிருகக்காட்சி சாலைக்காக பெற்றுக் கொண்டார். அந்த காலத்தில் ரிப்பன் மாளிகை, மூர் மார்க்கெட், மை லேடீஸ் கார்டன், இவற்றின் அருகில் இருந்த மெட்ராஸ் மிருகக் காட்சி சாலை ஆகியவற்றால் பார்க் டவுன் சுற்றுலாத் தளமாக வளர்ந்தது.
விடுதலைக்கு பின்னர் 100 ஏக்கர் மிருகக்காட்சி சாலைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் மக்கள் பூங்காவாக மாறிய இது 125 ஆண்டுகளை கடந்த பின்னர், மெட்ராஸ் மாநகரின் வளர்ச்சிக்காக, 1985 ஆம் ஆண்டு இங்குள்ள விலங்குகள் வண்டலூருக்கு மாற்றப்பட்டது. அதோடு மெட்ராஸ் மிருகக் காட்சி சாலையின் வரலாறு முடிக்கப்பட்டது.
1837 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பனியால் மெட்ராஸ் சிறைச் சாலையாக துவங்கப்பட்ட இது, பின்னர் மெட்ராஸ் மத்திய சிறைச்சாலையாக மாறியது. பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியை எதிர்ப்பவர்கள் இங்கு சிறை வைக்கப்பட்டனர். நாட்டு விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தார்.
தேச விடுதலைக்குப் பின்னர் குற்றவாளிகள் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர். 1999 ஆம் ஆண்டு இந்த சிறைக்குள் பெரும் கலவரம் தூண்டப்பட்டது, சிறையின் அறைகளுக்கு தீ வைக்கப்பட்டது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு சிறைச்சாலை காலி செய்யப்பட்டு, சிறிது காலம் மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. பின்னர் சிறைச்சாலை இடிக்கப்பட்டு சென்னை மாநகர வளர்ச்சிக்கும், மெட்ரோ ரயில்வேவிற்கும், மருத்துவக் கல்லூரிக்கும் அளிக்கப்பட்டது.
பழைய பிளாக் டவுன் மற்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் இடையில் இருந்த பெரிய திறந்தவெளி சாலைப் பகுதியை மெட்ராஸ் எஸ்பிளேனட் என்று அழைத்தனர். பிரிட்டிஷ்காரர்களின் பாதுகாப்புக்காக, உள்ளூர் மக்களின் பிளாக் டவுனில் இருந்த வீடுகளை இடித்து இங்கு சாலை போட்டனர். இந்த பகுதி டிராம் போக்குவரத்துகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் நிறைய சந்தைகள் எஸ்பிளேனடுகளில் போடப்பட்டன.
பிரிட்டிஷ் காலத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்துள்ளது. பிற்காலத்தில் இந்த பகுதிகள் வளர்ந்து இங்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம், சட்டக் கல்லூரி, பிராட்வே பேருந்து முனையம், மெட்ராஸ் யுனைடெட் கிளப், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி விடுதிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு பொது சேவை ஆணையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. மெட்ராஸ் நகர வளர்ச்சியில் எஸ்பிளேனட் மறைந்து போனது.