
'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். இன்றைய சென்னையின் அன்றைய பெயர் மெட்ராஸ். அன்று முதல் இன்று வரை சென்னையைத் தேடி தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் வந்து கொண்டே இருக்கிறார்கள். வெறும் கையோடு வந்து கோடீஸ்வரர் ஆனவரும் உண்டு. பெரும் தொகையோடு வந்து ஏழ்மை நிலைக்குப் போனவரும் உண்டு.
அண்ணா சாலையில் அமைந்துள்ள எல்ஐசி கட்டடம் ஒருகாலத்தில் பெரும் புகழ் பெற்றிருந்தது. காரணம் தமிழ்நாட்டில் பதினான்கு மாடிகளைக் கொண்ட ஒரே உயரமான கட்டடம் என்ற பெருமை அதற்கு உண்டு. சென்னைக்கு முதல் முதலில் வருபவர்கள் எல்ஐசி கட்டடத்தை அண்ணாந்து ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். அத்தகையவர்களில் நானும் ஒருவன். என்னுடைய நெருங்கிய உறவினர்களின் வீடுகள் பெரம்பூரிலும், ட்ரிப்ளிகேன் என்று அழைக்கப்பட்ட திருவல்லிக்கேணியிலும் இருந்தன. பள்ளி விடுமுறைகளில் சென்னைக்குச் சென்று பொழுதைப் போக்குவது வழக்கம்.
எழுபத்தி ஐந்துகளில் மவுண்ட் ரோடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய அண்ணாசாலையில் பாதையைக் கடக்க சப்வே அமைக்கப்பட்டது. அதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.
என்னுடைய சிற்றப்பா மாலை வேளைகளில் தன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும் ட்ரிப்ளிகேனில் இருந்து நடராஜா சர்வீஸில் என்னை அங்கு அழைத்துச் செல்லுவார். இருவரும் அதில் இந்தப்பக்கம் இறங்கி நடந்து படிகளில் ஏறி எதிர்சாலையை அடைவோம். சிறிது தூரம் பிளாட்பாரத்தில் நடந்து சென்று மீண்டும் சப்வேக்குள் இறங்கி எதிர்திசையை அடைவோம்.
மெட்ராஸின் மற்றுமொரு அடையாளம் மூர் மார்க்கெட். அங்கு எல்லா பழைய பொருட்களும் சகாய விலைக்குக் கிடைக்கும். பழைய புத்தகங்கள், கிராமபோன் பாட்டு ரெக்கார்ட்டுகள், பழைய ரேடியோக்கள், பூட்டுகள், சைக்கிள் டைனமோ, டார்ச் லைட்டுகள் என அனைத்து வகையாக அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான பொருட்களை அங்கே மிகவும் மலிவு விலையில் வாங்கிவிடலாம். தமிழ்நாட்டில் எங்குமே கிடைக்காத ஒரு பொருள் கூட மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் என்பார்கள். எனது சிற்றப்பா ஒரு மூர் மார்க்கெட் பிரியர். அடிக்கடி அங்கே சென்று பழைய பொருட்களை பேரம் பேசி வாங்கி வருவார். சில சமயங்களில் என்னையும் அழைத்துச் செல்லுவார்.
தற்போது வண்டலூரில் இயங்கும் உயிரியல் பூங்கா முற்காலத்தில் மிருகக்காட்சி சாலை என்ற பெயரில் நேரு ஸ்டேடியத்தின் பின்னால் சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் அமைந்திருந்தது. எல்லா விலங்குகளும் தற்போது போல திறந்த வெளியில் இல்லாமல் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மெட்ராஸில் மக்கள் அடிக்கடி செல்லும் ஒரு இடமாக இந்த உயிரியல் பூங்கா திகழ்ந்தது.
மெட்ராஸின் மற்றொரு அடையாளம் மெரீனா பீச். மாலை வேளைகளில் மக்கள் மெரீனா பீச்சிற்கு மெட்ராசின் பல பகுதிகளில் இருந்தும் வருவார்கள். இங்கு விற்பனை செய்யப்படும் தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல் மிகவும் பிரபலம். பேப்பரைச் சுருட்டி அதில் சுண்டலை நிரப்பித் தருவார்கள். வாங்கி சுவைத்துக் கொண்டே கடலை ரசிப்பார்கள். பீச் மணலை சில அடி ஆழத்திற்குத் தோண்டி அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரையும் விற்பார்கள். அந்த தண்ணீர் உப்பு கரிக்காமல் சுவையாகவே இருக்கும்.
சென்னையை அறிமுகப்படுத்த எல்லா திரைப்படங்களிலும் முதலில் காட்டப்படும் ஒரு கட்டடம் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன். ஹீரோ அல்லது படத்தின் உள்ள கதாபாத்திரங்கள் என யார் சென்னைக்கு வருவதாகக் காட்டினாலும், இந்த கட்டடம் தவறாமல் முதலில் காட்டப்படும்.
அடுத்ததாக புகழ்பெற்ற ஒரு பகுதி கொத்தவால் சாவடி எனப்படும் மிகப்பெரிய காய்கறி மற்றும் பூ மார்க்கெட். பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகில் ஜார்ஜ்டவுன் பகுதியில் இந்த புகழ் பெற்ற காய்கறி மொத்த வியாபார மார்க்கெட் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த மார்க்கெட் பிற்காலத்தில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக 'மெட்ராஸ் பாஷை' என்ற ஒரு தனி வட்டார வழக்கு இங்கே இன்று வரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. பல திரைப்படங்களிலும் இடம் பெற்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. மெட்ராஸ் பாஷையை ரசிக்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு மெட்ராஸ் பாஷை தனித்துவமானது. இன்னா நைனா நான் சொல்றது கரீட்டா இல்லியா?