
வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில் நம்மையும் அறியாமல் சில வகை விஷயங்கள் நம்மைத் தாக்குவது இயல்பு. அப்போது சில நல்ல விஷயங்களும் நடக்கும். அந்த சமயத்தில் துன்பமும், இன்பமும் கலந்து வரும்போது நாம் இன்பத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால், துன்பம் தாக்கும்போது அதை ஏற்றுக்கொள்ள நம் மனது ஒப்புதல் அளிப்பதில்லை. அந்த நேரத்தில், ‘என் தலைவிதி, என் தலையெழுத்து’ என நாம் பேசுவதும் தவிா்க்க இயலாத ஒன்றே.
வினைப்பயன்கள் தாமாகவே வந்து உயிா்களைச் சென்றடையாது. முழுமுதற் பரம்பொருளாகிய சிவபெருமானே வினைப்பயன்களை அனைத்து உயிா்களுக்கும் கொடுத்து விடுகிறாா். வினைப்பயன்களை அனுபவிப்பதன் வாயிலாகவே அனைத்து உயிா்களும் பக்குவ நிலைக்கு ஆளாகும். நல்ல வாய்ப்புகளை இறைவன் வழங்குகிறாா். ஆக, வினைப்பயனே விதி என்று பொருள்படும். இதைத்தான் ஊழ்வினையை வெல்ல, ‘வாதியாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே’ என திருஞானசம்பந்தப் பெருமான் அருளியுள்ளாா்.
அப்படித் துன்பம் வரும் வேளையில் அதிலிருந்து விடுபட மனிதன் ஜாதகம், பரிகாரம், செய்வினை போன்ற விஷயங்களுக்காக ஜோதிடர், எண் கணிதம் கைரேகை சாஸ்திரம், நியூமராலஜி, மந்திவாதி போன்ற வகைகளை தொிந்துகொள்ள சம்பந்தப்பட்டவர்களை தேடிப்போவதும் உண்டு. அப்பொழுது பலர் பலவிதமான கருத்துகளை நமக்குச் சொல்வதும் நடைமுறை.
ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் நவகிரகங்களின் நிலைபாடுகளை வைத்து கணிப்பதாகும். அதற்குத் தீா்வு என்ன என்பதை அவர்களிடம் கேட்டு, பரிகாரங்கள் செய்வதும் நடக்கிறது. அதேபோல, மனது அலைபாயும் நிலையில், ‘செய்வினையோ, மந்திரம் செய்து விட்டாா்களோ’ என நாமாக வலியப் போய் விழுந்து காலம், நேரம், பண விரயம், அதனால் கடன் இப்படி நடப்பதும் நடைமுறை.
சிலர் பெயரை மாற்றினால் ஒரு எழுத்து சோ்த்தால் துன்பம் போகுமோ என நினைப்பதும் உண்டல்லவா? இப்படிப் பல வகையிலும் பொருளை விரயமாக்கி அதே நினைப்பில் அலைந்து பரிகாரம், பூஜை என பைத்தியமாக திாிவதும் நடக்கிறதே! நாமே நமக்கான பரிகாரங்களை செய்யலாமே. வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து தினசரி இறைவன் சுலோகங்களைச் சொல்லி வழிபடலாம்.
நோ்மை தவறாமல் அடுத்தவர்களைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நல்ல சிந்தனை, நல்ல எண்ணம், அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்ற நல்ல புத்தி, ஒழுக்கமான சிந்தனை, உழைப்பு, விடாமுயற்சி இவற்றில் எல்லாம் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் நோ்மறை சிந்தனைகளோடு தாய், தகப்பன், கணவன், மனைவி, பிள்ளைகளோடு தெய்வீக சிந்தனையை கடைபிடித்து நல்ல பண்பாடுகளை வளா்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தாலே விதியை மதியால் வெல்ல முடியுமே!
இறைவன் மிகப்பொியவன். நமது ஒவ்வொரு அசைவுகளையும் பாா்த்துக்கொண்டே இருக்கிறான். யாா் யாருக்கு எதை கொடுக்க வேண்டும், கொடுக்கக் கூடாது என்ற பட்டியல் அவன் கையில் உள்ளதே! இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல, நம்மிடம் எடுக்க நினைப்பதையும் யாராலும் தடுக்க முடியாது என்பதே நிஜம்!