

இன்றைய டிஜிட்டல் ஆப்களின் உலகத்தில், மேலாண்மைப் பற்றி பல்வேறு கருத்தரங்கங்கள், பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த மேலாண்மைப் பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்பாக பாடல்களில் எடுத்து காட்டியுள்ளனர்.
உதாரணமாக, கம்பராமாயணத்தில், இராமனுக்கு அனுமன் சேவகன் என்ற முறையில் பார்த்தால், அனுமனின் எஜமான விசுவாசம் சொல்லி மாளாது. மேலிருந்து கீழே குதி என்றால் குதித்து விடுவார். யோசிக்கவே மாட்டார். அனுமன், தன் மார்பையே கிழித்து இராமர் உறைவிடம் இதோ என்று எஜமான் விசுவாசத்தைக் காட்டியவர். எள்ளென்றால் எண்ணெயாக நிற்பவர். அவருக்கு தூரம் ஒரு பெரிதல்ல. மலை பெரிதல்ல. இரண்டையும் ஒரே நொடியில் கடந்து கடமையை ஆற்ற வல்லவர் அனுமன். பணியாளர் மேலாண்மையை கம்பர் தன் பாடல்களில் காட்டியுள்ளார். அதேபோல, தகவல் தருவதில்… இன்றைய தொழில்நுட்பத்தையே விஞ்சியவர் அனுமன் எனலாம்.
எடுத்துக்காட்டாக… இலங்கையில் தேடி போய் வனத்தில் இருக்கும் சீதையைக் கண்டு திரும்பிய பின்பு இராமனைப் பார்த்தார் அனுமன்.
“அனுமன் என்ன சொல்ல போகிறாரோ? என யோசிப்பதற்குள் இராமனின் உள்ளகிடக்கையை அறிந்த மாத்திரத்திலே “கண்டேன் சீதையை” என தகவல் தெரிவித்தார். இது தகவல் தொழில் நுட்ப மேலாண்மை அல்லாது ஒரு தூதுவர் என்ற பணியாளர் மேலாண்மையும் அடங்கியுள்ளது.
அதை விடுத்து நீங்கள் உத்தரவிட்டீர்கள், நான் காடு மலையெல்லாம் கடந்து … என்று நீட்டி முழக்கினால் எப்படி இருக்கும்.
இந்த மேலாண்மைப் பற்றி நமது வள்ளுவ பெருந்தகை என்ன கூறியிருக்கிறார்? ஒரு மன்னன், தமது மக்களை அவர்களது தகுதிக்கேற்றவாறு அரவணைத்து சென்றால் சிறப்பு என்கிறார். அதேதான் ஒரு நிறுவனத்திற்கும் பொருந்தும்.
மேலாளர், தன் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தனித்திறமையைக் கணித்து, அவர்களைத் தக்க நேரத்தில் பாராட்டி, வேலை வாங்குவது சிறப்பு என்கிறார்.
இதோ அந்த குறள்
“பொதுநோக்கார் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் (528)
மேலாண்மை செய்யும் பொழுது நெருக்கடி வந்தால் என்ன செய்வது?
நல்ல கேள்வி.
சோர்ந்து துவண்டு விடுவதா? இல்லை அதை இடுக்கண் வருங்கால் நகுக என்பதா?
மேலாளரை அவருக்கு மேலுள்ள பொதுமேலாளர் தமது அறைக்கு அழைத்து கடிந்து கொள்கிறார். அதை முகத்தில் காண்பித்து கொள்ளாமல், முகம் சிரித்தபடி வெளியே வர வேண்டும்.
அப்படி இல்லாமல் முகத்தை தொங்க போட்டு கொண்டு வந்தால்…., அவருக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் பொது மேலாளர் எப்படியெல்லாம் திட்டினார் என்று புலம்பினால்…., பணியாளர்கள் மத்தியில் மேலாளரின் மதிப்பு தானாகவே இறங்கி விடும். யாரும் ஏணி போட்டு இறக்க வேண்டியதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பே, நம் முன்னோர்கள் கடல் கடந்து வணிகம் செய்தனர். அதைத்தான் திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்றார்கள்.
அப்படி கடலில் செல்லும் போது பொழுது சாய்ந்து இரவு வந்து விட்டால் கரை தெரிய வேண்டுமல்லவா? அதற்குதான் கலங்கரை விளக்கம் அமைத்தனர். இதுவும் ஒரு வகையில் வணிக மேலாண்மைதான்.
இதையும் ஒரு பாடலாக பாடியுள்ளனர் நம் முன்னோர்கள்.
இரவில் மாட்டிய இலங்கு அடர் ஞெகிழி
உரவுநீரமுவத் தோருங் கரையும்
துறைபிறக் கொழியப் போகி (பெரும்பாண்349-351)
என்ற பெரும்பாணாற்றுப்படையில் பாடல் வாயிலாக வணிக மேலாண்மையைக் காட்டியுள்ளனர்.
ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களில் எல்லோரும் ஒரே மாதிரி திறமையுள்ளவர்களாக விளங்க மாட்டார்கள். ஒருவருக்கு கணிதம் நன்றாக வரும்… இன்னொருவருக்கோ நிர்வாக திறமை கூடுதலாக இருக்கும்.
கணிதம் அறிந்தவரை நிர்வாக பணியிடத்திலும், நிர்வாக திறமையுள்ளவரை கணக்கு பிரிவிலும் பணியமர்த்தினால் நிலைமை என்னவாகும்.
இதைத்தான் தெரிந்து விளையாடு என்ற அதிகாரத்தில்..
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவண்கண் விடல்
என்கிறார் வள்ளுவ பெருந்தகை.
பண்டைய இலக்கிய நூலான புறநானூற்றில் ஒரு மன்னரின் மேலாண்மை எப்படி இருக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
“பலர்துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன் எந்தை என்
தென்கிணைக் குரலே
என்று கோவூர் கிழார் என்ற புலவர் பாடியுள்ளார்.
மேற்காணும் பாடலின் பொருள் என்னவென்றால்
மக்கள் எல்லோரும் உறங்கினாலும், நடுச்சாமத்திலும் மன்னன் உறங்காமல் மக்களின் நலன்கள் பற்றி சிந்திக்கும் சோழன் நலங்கிள்ளியின் மேலாண்மைப் பற்றி வியந்து பாடியுள்ளார்.
மேலாண்மை தெரிந்து கொள்வோம்; முன்னேறுவோம்!