சீதையின் அருள் பெற்ற அனுமன்!

திருமகள் திருவருள் - 4
Thirumagal Thiruvarul
Sita and Hanuman
Published on
இதையும் படியுங்கள்:
நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!
Thirumagal Thiruvarul

திருமகளான சீதா தேவியின் பெருமையைச் சொல்லும் காவியமே ‘ஸ்ரீமத் ராமாயணம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடுவர். திருமகளின் திருவருளுக்குப் பாத்திரமான பலரையும் நம்மால் ஸ்ரீமத் ராமாயணத்தில் பார்க்க முடியும். ‘கைங்கர்ய ஸ்ரீ’ என்று போற்றப்படக்கூடிய கைங்கர்ய செல்வம் லக்ஷ்மணருக்குக் கிடைத்தது திருமகளான சீதையின்

கடாக்ஷத்தால்தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக தம் திருவருளை அள்ளித் தந்த அழகிய திருமகள், அனுமனுக்கு விசேஷ திருவருளை செய்திருக்கிறாள்.

ஸ்ரீ ராமபிரானின் பட்டாபிஷேகம் படு விமர்சையாக நடைபெற்று முடிந்தஉடன், அந்த ராமச்சந்திர மூர்த்தி சந்திரனை தனது முகத்தில் கொண்ட தனது அன்பு மனைவியான சீதைக்கு அந்த சந்திரனை போலவே வெள்ளை வெளேரென்று ஒளி வீசக்கூடிய ஒரு முத்து மாலையை பரிசளித்தார். சந்தோஷமாக தமது அன்புக் கணவர் பரிசளித்த அந்த முத்து மாலையை அணிந்துகொண்ட சீதா தேவி, சுற்றி அங்கே கூடி இருந்தவர்களைப் பார்த்தாள். பிறகு தனது கணவரையும் பார்த்தாள். மீண்டும் கூடி இருந்தவர்களைப் பார்த்துவிட்டு தன்னைப் பார்த்த தம் மனைவியின் மன ஓட்டத்தை அறிந்துகொண்ட ராமபிரான் சீதையிடம், “சீதே… உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குப் புரிந்துவிட்டது. உனக்கு யாரிடம் அதிகப்படியான ப்ரியம் இருக்கிறதோ அவர்களுக்கு இந்த முத்து மாலையை நீ தாராளமாகக் கொடுக்கலாம்” என்றார். அதைக் கேட்டு சந்தோஷப்பட்டுப்போன சீதை, சட்டென்று அந்த முத்து மாலையை அனுமாருக்கு பரிசளித்தாள். தனக்கு முத்து மாலை கிடைத்த சந்தோஷத்தைவிட, திருமகளின் திருவருள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் அந்த முத்து மாலையை பிரசாதமாக ஏற்றுக்கொண்டு, தம் முகம் பிரசன்னமாக எப்போதும்போல ராம நாம ஜபத்தை செய்ய ஆரம்பித்து விட்டார் அனுமன்.

அஞ்சனை மைந்தனான அனுமனுக்கு திருமகளின் திருவருள் பத்து விதமான குணங்களைத் தந்தது என்று கொண்டாடுவார் வால்மீகி, தம்முடைய ராமாயணத்தில். திருமகளின் திருவருளுக்குப் பாத்திரமாகி பத்து விதமான விசேஷ குணங்களைப் பெற்ற அனுமன், சீதையிடமிருந்து முத்து மாலையை பரிசாகப் பெற்றார் என்றே வர்ணிப்பார் வால்மீகி. அப்படி அவர் பட்டியலிட்ட அந்த பத்து குணங்கள்: வீரம், பேசும் திறமை, ஒளிச்சுடர் போன்ற அறிவு, பவ்யம், நல்லறிவு, பெருமை, பராக்ரமம், தைர்யம், ஜாக்கிரதையாக ஒரு செயலை செய்யக்கூடிய திறமை, ஒரு செயலைச் சரியான வழியில் கையாளும் திறன்.

திருமகளின் திருவருளுக்கு யார் பாத்திரமாகப் போகிறார்கள் என்பது சக்ரவர்த்தி திருமகனுக்கு நன்றாகத் தெரியுமல்லவா? சீதையின் திருவருளுக்குப் பாத்திரமாகப் போகிறார் வாயுபுத்திரன் என்று அறிந்தே அவரை சீதை வனவாசம் இருந்த தெற்கு திசை நோக்கி அனுப்பினார் ராமபிரான்.

அனுமனின் தைரியத்தைத்தான் பொதுவாக எல்லாருமே கொண்டாடுவார்கள். சாதாரணமாக நாம் மனம் தளர்ந்து இருக்கும்போது கூட ஆஞ்சனேயரை மனதில் நிறுத்தி தியானம் செய்துவிட்டால் போதும், நம் மனதில் தனி ஒரு தைரியம் உண்டாவதை நாம் பல முறை உணர்ந்திருப்போம். அசோக வனத்தை நோக்கிச் சென்ற அனுமன், சீதை யார் என்றே தெரியாமல் மனதளவில் தைரியத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு மரத்தின் மீதேறி தூரத்தில் இருந்த சீதா தேவியின் கண்களைப் பார்த்து இவள்தான் ராகவனின் சீதை என்றே கண்டுபிடித்தாராம். தாயாரின் திருக்கண்களின் கடாக்ஷம் என்பது தூரத்திலிருந்தே அனுமனின் மீது பட, அதுவரை அவரைத் துரத்திய அதைரியம் என்பது அகன்று, அசாத்தியமான தைரியம் என்பது அனுமனை விட்டு அகலாத ஒரு குணமாகவே மாறிப்போனது.

எதையுமே ஜாக்கிரதையாக செய்யக்கூடிய திறனை வாயுபுத்திரன் பெற்றது கூட ஜனக மஹாராஜாவான திருமகளின் திருவருளால்தான். அசோக வனத்தில் ராக்ஷஸிகளின் பிடியிலும், கடும் சொற்களின் வலியிலும் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தபோது இதை எல்லாம் மரத்தின் மீது அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்த அனுமான், சீதையின் மனதிற்கு ஆறுதல் அளிக்கும்படி ராமாயண கதையை, மிதிலாபுர நகரவாசிகளின் மொழியில் பாட ஆரம்பித்தார். இந்த நயம், ஜாக்கிரதை என்கிற கல்யாண குணம் சீதையின் திருவிழியின் கடாக்ஷத்தால்தான் அனுமனிடம் வந்து சேர்ந்தது.

இதையும் படியுங்கள்:
கருணையின் விலாசம்!
Thirumagal Thiruvarul

திருமகளின் திருவருளால் வாயுகுமாரனுக்கு கிடைத்த அடுத்த குணம், தாக்ஷ்யம் என்று சொல்லக்கூடிய எதையும் திறம்பட கையாளும் திறன். ராம தூதனாக சீதையிடம் சென்ற அனுமன், சீதையை பார்த்ததுமே தன்னிடம் இருந்த ராமபிரானின் மோதிரத்தை உடனடியாகக் கொடுக்கவில்லையாம். ராமபிரான் எப்படி இருக்கிறார் என்று சொல்லி விட்டு, மேலும் எதைச் சொல்ல வேண்டுமோ, எப்படிச் சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் சரியாகச் சொல்லிவிட்டு பிறகுதான் ராமபிரானின் மோதிரத்தை சீதையிடம் கொடுத்தாராம் அனுமன். அந்த மோதிரத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்ட சீதை, அதே சந்தோஷமான மன நிலையோடு ஆஞ்சனேயருக்கு கூடுதலான அருளை வாரி வழங்கினாள்.

சீதையின் பரிபூரண திருநேத்திர அருளுக்குப் பாத்திரமான அனுமன், சீதை கொடுத்த மோதிரத்தை கையில் ஏந்திக்கொண்டு இலங்கையை விட்டுச் செல்ல நினைத்தபோது, ‘இந்த ராவணனை எப்படியாவது திருத்த வேண்டும்’ என்று நினைத்தாராம். அப்படி ராவணனை திருத்த வேண்டும் என்றால் அதற்கு வீரம்தான் துணைக்கு நிற்க வேண்டும். அந்த வீரம் என்பது வீர ஆஞ்சனேயருக்கு துணையாய் வந்தது திருமகளின் திருவருள் துணையாய் நின்றதால்தானே? சீதையை ஒரு நொடி மனதில் தியானித்த அனுமன், சட்டென்று அசோக வனத்தில் உள்ள மரங்களை சாய்க்க ஆரம்பித்தார். ‘வந்திருப்பது ஒரு வீரன், அவன் ராம தூதன் என்பது ராவணனுக்குத் தெரிய வேண்டும்’ என்று தனது வீரத்தை காட்டிய அனுமன், ராமாயணத்தில் செய்து காட்டிய அத்தனை சாகசங்களுக்கும் காரணம் திருமகளான சீதையின் திருவருளே!

அந்தத் திருமகளின் திருவருளை ராமாயணத்தின்வழி படித்த நம் அனைவருக்கும் அனுமனுக்குக் கிடைத்த அத்தனை குணங்களும் பரிசாகக் கிடைக்கும்.

திருமகளின் திருவருளில் மேலும் நனைவோம், இணைவோம்..

(இந்த திருமகள் திருவருள் தொடர் வெள்ளிதோறும் இடம்பெறும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com