
மன்னன் கூத்து என்பது இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மன்னன் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த ஆண்களால் மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படும் ஒரு விதிவிலக்கான சடங்குக் கலை.
இரவில் நிகழ்த்தப்படும் இந்த வசீகரிக்கும் நிகழ்ச்சி தமிழ் இலக்கியத்தின் சிறந்த காவியங்களில் ஒன்றான புகழ்பெற்ற சிலப்பதிகாரத்திலிருந்து கண்ணகி மற்றும் கோவலனின் கதையை சிக்கலான முறையில் பின்னிப்பிணைக்கிறது. இந்தப் பாடல்கள் கண்ணகி மற்றும் கோவலனின் பிறப்பு முதல் கேரளாவுக்கான அவர்களின் துரதிர்ஷ்டவசமான பயணம் வரையிலான பயணத்தை விவரிக்கின்றன.
கதை சிலப்பதிகாரத்துக்கு இணையாக இருந்தாலும், மன்னன் பதிப்பு அதன் சொந்த குறியீட்டுக் கூறுகளையும், கலாச்சார விழுமியங்களையும் உள்ளடக்கியது. இது மத விழாக்கள், அறுவடை விழாக்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களின் போது மையமாகிறது. இது ஒரு பாரம்பரிய நடன நாடகமாகும். கதை சொல்லல், இசை மற்றும் புராணங்களை இணைக்கும் ஒரு தனித்துவமான கலாச்சார வெளிப்பாடாகும்.
மன்னன் பழங்குடியினர் பெரும்பாலும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் குமிளி பஞ்சாயத்தில் வசிக்கின்றனர். தேவிகுளம், அழுஹா மற்றும் இடுக்கி தொகுதி பஞ்சாயத்துகளிலும் இந்த சமூகங்கள் காணப்படுகின்றன. பழங்குடியினர் ஆதிவாசி சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் இவர்கள் தனித்துவமான பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளுக்கு பெயர் பெற்ற பழங்குடி குழுவாக உள்ளனர்.
மன்னன் கூத்து என்பது ஒரு சிறப்பு வாய்ந்த கலை வடிவமாகும். ஒரு காலத்தில் வாராந்திர நிகழ்வாக இருந்தது இன்று சமூக நிகழ்வுகளின் பொழுது மட்டும் நிகழ்த்தப்படுகிறது. இரவில் தொடங்கி விடியற்காலை வரை தொடரும் ஒரு இரவுநேர நிகழ்வாகும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கோவில்மலக்குடி மன்னன் பழங்குடியினரின் தலைமையிடமாகும்.
இந்த சமூகத்திற்கு என்று ஒரு ராஜா இருக்கிறார். அவரது முடி சூட்டுதல், இறுதிச் சடங்குகள் மற்றும் அறுவடை விழாவின் ஒரு பகுதியாக கூத்து அரங்கேற்றப்படுகிறது. மலை தெய்வங்கள் மற்றும் குலதெய்வங்கள் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நிகழ்த்தப்படுகிறது.
இந்தியாவின் பழங்குடியினர் தங்களின் முத்தியம்மன் திருவிழாவின்போது கூத்துக்கலை வடிவத்தில் சில பாரம்பரிய நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். இந்தக்கலை வடிவங்கள் பெரும்பாலும் அவர்களின் பாரம்பரியக் கதைகளையும், சடங்குகளையும் அடிப்படையாகக் கொண்டவை. அத்துடன் இவை அவர்களின் நம்பிக்கைகளையும், வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கின்றன.
கூத்து திட்டமிடப்படும் பொழுது அப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. நடன கலைஞர்கள் குறைந்தது 7 நாட்களுக்கு விரதம் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது உணவு மற்றும் சில செயல்களில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்கள். கூத்து நாளன்று காலையில் குலதெய்வத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் பிரசாதங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இரவு முழுவதும் நடைபெறும் இந்நிகழ்ச்சியைக்காண அனைத்து மக்களும் அந்த இடத்தில் கூடுவார்கள்.
பெண் கலைஞர்கள் அரிதானவர்கள். சில சமயங்களில் வயதான பெண்கள் இருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் பெண் கதாபாத்திரங்களை ஆண்களே ஏற்று செய்வது வழக்கம். சமீபத்திய ஆண்டுகளில் மன்னன் கூத்தில் பழங்காலத் தடைகளை உடைத்து வயதான பெண்கள் மற்றும் டீனேஜ் பெண்கள் பங்கேற்கத் தொடங்கி கலாச்சார கலை வடிவத்திற்கு புதிய உயிர் கொடுத்து வருகின்றனர். தாள வாத்தியங்களாக மாதளம், பறை மற்றும் சரல், ஒரு சிம்பல் ஆகியவை உள்ளன. கலைஞர்கள் முகம் மற்றும் உடல் ஒப்பனை மற்றும் உடையில் இலைகளையும், கொடிகளையும் பயன்படுத்துகிறார்கள்.