
இப்படியோர் இசைக்குயிலை
இந்தியாவில் படைத்ததற்கு
இறைவா உந்தனுக்கே
எங்களின் முதல்வணக்கம்!
எந்தன் இனிதமிழே!
இவர்புகழைப் பாடுதற்கு
முனைகின்றேன் நீயெனக்கு
முழுதாய் உதவிடுக!
அப்பப்பா இவர்சாதனையை
அகிலத்தில் வேறெவரும்
கொண்டிருக்க சாத்தியங்கள்
குறைவே! மிகக் குறைவே!
புரட்சித்தாயிவர்! பூவுலகில்வேறெவரும்
செய்யாத பலவற்றைச்
செய்து நம்மை அசத்தியவர்!
அம்மாவின் நாமத்தை அப்போதே
தன் பெயரின் முன்னாலே
தரித்தேமகிழ்ந்திட்ட தகைசால் புரட்சியாளர்!
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (M.S.Subbulakshmi )
என்றாலே இவ்வுலகம்
ஏகமாய்க் குதூகலிக்கும்!
விரல்கள் மற்றும் நாவுகொண்டு
வியனுலகை ஈர்த்துவிட்டார்!
முதல் நிலை மாதாவும்
மூன்றாம் நிலைக் குருவும்
ஒருவராக வாய்ப்பது
ஒருசிலரின் கொடுப்பினையே!
தாயே இவருக்குத் தக்க இசையினையே
போதித்து வளர்த்ததனால்
போனார் ஐ.நா.சபைவரை!
முதல் இந்தியராய்
முழுதாய் அரங்கேற்றம்! (1966)
அன்னையின் கச்சேரி
அரங்குள் நடக்கையிலே…
வெளியிலே இவரும்
விளையாடி மகிழ்வாராம்!
திடீரெனக் கூப்பிட்டதும்
திகட்டாமல் பாடியே…
திகைப்பில் அனைவரையும்
மகிழ்வித்தே நிற்பாராம்
மழலையாய் இருக்கையிலே!
தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு
இந்தி வங்கம் சமஸ்கிருதம் குஜராத்தி யென்று
அத்தனைமொழிகளிலும் அழகாய்ப்பாடியவர்!
மேக்சசே (1974) பாரதரத்னா (1998)
விருதுகள் இவரை விருந்துக்கழைத்தன!
தேவிசரஸ்வதியே சிறப்பான இவர் உருவில்
வந்து போனதாகவே வாழ்த்து மிந்தச்சமுதாயம்!
இசைக்குயில் இசையரசி
இசைப்பேரரசி இசைராணி
என்பதெல்லாம் இவர் ஒருவருக்கே
இவ்வுலகம் தந்த அடைமொழிகள்!
1926ல் மணி விழா ஒன்றில்
மகளின் பாடலுக்கு மாதாவேவீணையிசைக்க
உலகவரங்கில் உதித்ததோர்சகாப்தம்!
1935ல் மைசூர் மகாராஜா அரண்மனையில்
பாடியேகுயிலும் பறந்தது மேலே!
திரைவானம் அதனை சேவாசதனம் மூலம்
தன்னுள்ளே ஈர்க்க திரையிலும் இணைந்து
பரப்பினார் பேரரசி பார்முழுதும் இசை மணத்தை!
1940 லோர் நல்லபரபரப்பு! இசைராணி
கல்கி சதாசிவத்தின் கைபிடித்தார் கனிவுடனே!
1941ல் வந்தன சாவித்திரியும் பக்தமீராவும்!
காற்றினிலே வரும் கீதம் பாடல்
உலகக் காற்றினிலே உயர்வான இடத்தை
பெற்றேயெங்கும் பிரதிபலித்தது!
சாவித்திரிதனில் நாரதர்வேடத்தை
ஏற்றிடவே நாயகியும் ஏற்கவில்லை முதலில்!
ஆண்வேடம் புனைவதையே அவரும் விரும்பவில்லை!
கல்கி ஆரம்பிக்க காசு தேவையென்றதும்
உடனே ‘ஆம்’ சொல்லி உயர்வுக்கு வழிவகுத்தார்!
இன்றும் நாம் இன்புற்று இனிதாய் வாழ்வதற்கு
அவரின் தியாகமன்றோ அடித்தளமாய் அமைந்ததன்று!
பக்த மீரா இந்திப் பதிப்பை எல்லோரும் பாராட்ட…
பிரதமர் நேருவும் பிரெஞ்சு மவுண்ட்பேட்டனும்
கவியரசு சரோஜினியும் காட்சிகளைப் பார்த்தபின்னர்
“இசை ராணிக்கு முன்னர் இந்தியப் பிரதமர்
சாதாரணந்தானே!”
என்றே நேருவும் இனிதாய்ப் பாராட்டினாராம்!
எங்கள் கவிக்குயிலே! இன்னொருமுறை பிறந்து
இளைய தலைமுறையை இனிதாக்கி மகிழ்வீரே!