
‘‘மார்கழி மாதம் ஆரம்பிக்க இன்னும் மூன்று நாள்தான் இருக்கு‘‘
‘‘சரி, அதுக்கு என்ன இப்போ?‘‘
‘‘இப்போ என்னவா? இந்த வருஷம் மார்கழி கச்சேரிகளுக்குப் போக வேண்டாமா?‘‘
‘‘போகணும்தான். அதுக்காக?‘‘
‘‘சென்னையில எங்க தங்கறதாம்?‘‘
‘‘அதுக்குதான் சர்வீஸ் அபார்ட்மென்ட் நிறைய இருக்கே.‘‘
‘‘இருக்கு சரி, முன்கூட்டியே புக் பண்ணிக்க வேண்டாமா?‘‘
‘‘என்னை யாருன்னு நினைச்சே? எல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாலேயே பண்ணியாச்சு. நாம ஃப்ளைட் பிடிச்சு போய் சென்னையில இறங்க வேண்டியதுதான், அப்புறம் நேரா சர்வீஸ் அபார்ட்மென்டுக்குப் போக வேண்டியதுதான், தினமும் எத்தனை முடியுமோ அத்தனை கச்சேரிகளைக் கேட்டுட்டு வர வேண்டியதுதான்.‘‘
- இந்த உரையாடல் அநேகமாக நியுயார்க், மெல்பர்ன், லண்டன், சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நகரங்களில் வசிக்கும் தம்பதியிடையே ஏற்படக்கூடியது.
அவர்கள் அங்கே நிரந்தரமாகத் தங்கி விட்டவர்கள்தான் என்றாலும், அதற்குமுன் தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் மார்கழி மஹோத்ஸவமான இன்னிசைக் கச்சேரிகளை வருடம் தவறாமல் அனுபவித்தவர்களாகவே இருப்பார்கள்.
இவர்கள் சில வருடங்களுக்கு முன்பெல்லாம் ஹோட்டல் அறைகளில் தங்கி அங்கிருந்தவாறே பல சபாக்கள் நடத்தும் கச்சேரிகள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளுக்குப் போய் வந்தவர்கள். இப்போது அவர்களுடைய வசதிக்காக, சுமார் ஒரு மாதம்வரை தங்கிக் கொள்வதற்காக சர்வீஸ் அபார்ட்மென்ட்டுகள் என்ற சில ஃப்ளாட்டுகள் உருவாகியிருக்கின்றன. இவர்களுக்காக மட்டுமே என்றில்லாமல், வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வேறு காரணங்களுக்காக வந்து சில நாட்கள் தங்கிச் செல்பவர்களுக்காகவும் ஏற்பட்டிருக்கும் வசதி இது.
இந்த ஃப்ளாட்டுகளில் அவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ள, தேவையான பாத்திரம், பண்டங்களுடன் சமையலறை உள்ளது. மளிகை சாமான்களை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். காஸ் அடுப்பு, குக்கர், மைக்ரோவேவ் அவன், ரெஃப்ரெஜிரேட்டர் எல்லாம் உண்டு. பாத்ரூமில் வாட்டர் ஹீட்டர், படுக்கையறையில் கட்டில், ஏஸி, டைனிங் டேபிள், டிவி, சோபா-நாற்காலிகள், டீபாய் போன்றவையும் அங்கே காத்திருக்கும்.
தேவைப்படும் சிலருக்கு, அதே ஃப்ளாட்டிற்கு வந்து சமையல் செய்து தர சமையல்காரரும் தயாராக இருப்பார். வீடு பெருக்க, துடைக்க சுகாதாரப் பணியாளர் சேவையும் கிடைக்கும். காலையில் கடைக்குச் சென்று செய்தித்தாள் முதல் வேறு எந்தப் பொருள் வேண்டுமானாலும் வாங்கித் தரவும் பணியாளர் இருப்பார்.
எத்தனை நாள் தங்கியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வாடகை, சமையல்காரர் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் எல்லாம் நிர்ணயிக்கப்படும்.
விருந்தினர்களை அவர்கள் விரும்பும் சபா கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்ல வாடகைக் கார் வசதிக்கும் குறைவில்லை. இதனால் சிலசமயம் இரவில் நேரமாகிவிட்டாலும், இந்த சேவையால் இசைப் பிரியவர்கள் நிம்மதியாக ஃப்ளாட்டுக்குத் திரும்ப முடியும்.
பொதுவாக இப்போதெல்லாம் சங்கீத சபாக்களில், இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்குகளில் (இதற்காக சில கல்யாண மண்டபங்களையும் சபாக்காரர்கள் பதிவு செய்து அங்கே தம் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மார்கழியில் திருமண முகூர்த்த நாள் இல்லாததும் இதற்கு முக்கிய காரணம்) காணப்படும் கூட்டத்தைப் போலவே அந்தந்த இடங்களில் தற்காலிகமாக நிறுவப்பட்டிருக்கும் உணவு விடுதிகளிலும் கூட்டம் நிரம்பியிருக்கும். சென்னைவாசிகளில் சிலர் எந்த அரங்கில் யார் கேட்டரிங் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த உணவு வகைகளை ருசிப்பதற்காக மட்டுமே செல்கிறார்கள். சில சபாக்காரர்கள், நிகழ்ச்சி மண்டபத்தைவிட இங்கே கூட்டம் அதிகம் இருப்பதைக் கண்டு, கச்சேரிக்கு வருபவர்கள் மட்டுமே உணவுப் பகுதிக்குச் செல்ல முடிவதுபோல வழியை அடைத்து, தடை செய்திருப்பார்கள்!
இந்த வித்தியாசமான அனுபவத்தை வருடந்தோறும் நேரில் சந்திப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து இசைப் பிரியர்கள் சென்னைக்கு வருகிறார்கள்; வந்தாரை மகிழ்விக்கும் சென்னையும் அதற்கான எல்லா வசதிகளையும் செய்து தருகிறது.
ஆனால், அப்படி வருபவர்களின் பணப்பை மிகவும் பெருத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம், மிக மிக அவசியம்.