

மார்கழி என்றால் குளிரும், அதிகாலை கோவில் தரிசனங்களும் (பொங்கல் பிரசாதமும்), கோஷ்டி கானங்களும் எல்லோருக்கும் கிடைக்கும். சென்னைவாசியாக இருந்தால் கூடுதலாக இசைக் கச்சேரிகள் (Margazhi Music Concert) தெருவுக்குத் தெரு இசைக்கும்.
"இசையை மட்டும் ரசித்த ரசிகர்களுக்குக் கூடுதலாக வாய்க்கு ருசியாகச் சாப்பிடக் கிடைத்தால், இன்னும் தெம்பாக இருக்குமே!" என்று தோன்றிவிட, அப்படி கிளைத்தது தான் கேன்டீன்களும்.
"சென்னையின் டிசம்பர் மாத இசைக்கச்சேரிக்கும், கேன்டீன் சாப்பாட்டுக்கும் எப்போது தொடர்பு ஏற்பட்டது?" என்று துழாவிப் பார்த்தால் சென்னை வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கும் வி. ஸ்ரீராம் கொட்டித் தீர்க்கிறார். அவர் சொல்வதையும் கேட்டுவிட்டு தற்போதைய நிலவரத்தையும் ஒரு சுற்று சுற்றிச் சுவைத்துப் பார்ப்போமா?
சென்னையில் இசைக் கச்சேரிகள் 1920களில் துவங்கினாலும், டிசம்பர் மாத கச்சேரிகள் துவங்கியது 1929களில் மியூசிக் அகாடமி தொடங்கிய பிறகு தான். அதனைத் தொடர்ந்து இந்தியன் பைன் ஆர்ட்ஸ் கிளப் 1931லும், தமிழிசை சங்கம் 1943லும் ஆரம்பித்தது.
மற்ற சபாக்கள் முளைக்கத் துவங்கியது எல்லாம் எழுபதுகளுக்குப் பிறகு தான். தற்போது 60 -70 சபாக்கள் என்றும் ஆயிரக்கணக்கில் கச்சேரிகள் என்றும் சொல்லப்பட்டாலும், உருப்படியாக 20-25 சபாக்களில் 700 கச்சேரிகள் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் நடக்கிறது.
1940ல் சென்னை பல்கலைகழக செனேட் கட்டிடத்தில் நடந்த மியூசிக் அகாடமி இசை விழாவில் தான் முதன்முறையாக ஜார்ஜ் டவுன் அம்பி கபே கேன்டீனை தொடங்கினார்கள்.
1950களில் வி எஸ் அப்பாசாமி ஐயரும் அவரை தொடர்ந்து காசி அல்வா கிருஷ்ணமூர்த்தியும் சபா கேன்டீனை முன்னிறுத்தினர். 2000களில் மௌன்ட்பாட்டன் மணிஐயரும், பின்பு மின்ட் பத்மநாபனும் மியூசிக் அகடெமியில் கேன்டீன் நடத்தினார்கள். மும்பையிலிருந்து பட்டூரா கொடுக்கவும் ஓரிரு வருடங்கள் முனைந்தார்கள். மறுபடியும் இங்குள்ளவர்களே பாதாம் அல்வாவும், பலவித தோசை வகைகள் கொடுத்து அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக சாஸ்தா கேட்டரரஸ் வசம் காண்ட்ராக்ட் வந்துள்ளது. 550 ரூபாயில் மதிய விருந்து படைக்கிறார்கள் இவர்கள்.
தமிழ் இசை சங்கமும், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியும் 1950 களில் கச்சேரிகளுடன் சிற்றுண்டி சேவையும் நடத்தின. அவர்களது இருப்பிடத்திலேயே அல்லது அருகிலேயே ஒரு உணவகம்/கேன்டீன் வசதி இருந்தது. இப்போதும் தமிழிசை சங்கம் அதன் வளாகத்தில் அந்த வசதியை தொடர்கிறது.
1980களில் அறுசுவை அரசு நடராஜன் பார்த்தசாரதி சபாவிலும், அவரது இரு சகோதர்கள் ஜெயராமன் (ஞானம்பிகா கேட்டரிங்) நாரத கான சபாவிலும், கண்ணன் (மீனாம்பிகா கேட்டரிங்) மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸிலும் கேன்டீன் ஆரம்பித்த பிறகு கச்சேரியில் சாப்பாடு என்பதே சூடு பிடிக்கத் தொடங்கியது.
ஆறாவது வருடமாக அறுசுவை அரசரின் விருந்தை தங்கமுலாம் பூசிய தட்டில் மதிய விருந்து பரிமாறுகிறார்கள். பீமா சேனா தெருவில் அமைந்த பார்த்த சாரதி சபாவிற்கு சென்றால், 24 வகை உணவுகளை 650 ரூபாய்க்கு வழங்குகிறார்கள்.
கிருஷ்ண கான சபாவிலும், பிரம்ம கான சபாவிலும் சத்வா கேட்டரிங் மதிய சாப்பாட்டை தழை வாழை இலையில் 400 ரூபாய்க்கு தருகிறார்கள். நாரத கான சபாவில் வழக்கமாக இருக்கும் சாஸ்தாலயா இந்த வருடம் விலகிக்கொள்ள, முதல் முறையாக மயிலம் கேட்டரிங் கேன்டீன் எடுத்திருக்கிறார்கள். வகைவகையாக டிபன்களும், மினி மீல்ஸ் கலந்த சாதங்களும் கிடைக்கும்.
கச்சேரி கேட்க வரும் ரசிகர்களுக்கு தான் இசை பற்றிய ஸ்ருதி, தாள ராக ஞானம் தேவைப்படும். உணவு அருந்த, சுவை தேடும் நாக்கும் பசி கண்ட வயிறும் போதுமே! அதனால் கச்சேரி ரசிகர்கள் தவிர, உணவு பிரியர்கள் இந்த கேன்டீன்களுக்கு இத்தருணத்தில் படையெடுக்கிறார்கள்.
அலுவலக நண்பர்கள், குடும்பத்தினர், சென்னைக்கு சுற்றிப் பார்க்க வந்தவர்கள் என்று எல்லோரும் குவிந்து காத்திருந்து சாப்பிட்டு செல்லும் அளவுக்கு கூட்டம் சேர்கிறது. சௌகார்பேட்டை, மின்ட் பகுதி வியாபாரிகள் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து தினசரி மெனுவை பார்த்து கும்பலாக வரத்தொடங்கியிருப்பது கடந்த சில வருட நடைமுறையாகி உள்ளது.
"எந்த வித்துவான் எந்த இடத்தில பாடுகிறார் என்று அறிவது போல எந்த கேன்டீனில் அன்றைய மெனு என்ன?" என்பதையும் சேர்த்தே கச்சேரி களைகட்டுகிறது. விமர்சனங்களும் இரண்டுக்கும் சேர்த்தே அலசப்படுகின்றன.