

பாரத நாட்டில் தோன்றிய இசைக் கலைஞர்களில் அபூர்வமான மேதையாகவும் அதிசய சம்பவங்களை நிகழ்த்திக் காட்டிய இசைக் கலைஞருமாகத் திகழ்ந்தவர் தான்ஸேன்.
இவரது இயற்பெயர் ராமதாணு பாண்டே என்பதாகும். இவர் க்வாலியர் அருகே உள்ள பேஹட் என்ற ஊரில் 1500ம் (1506 என்றும் சொல்லப்படுகிறது) ஆண்டு பிறந்தார். இவரது தந்தையாரின் பெயர் முகுந்த் மிஸ்ரா. அவரே இவருக்கு இசை கற்பித்த ஆசான் ஆவார்.
இளமையிலேயே இவரது இசைத் திறன் அனைவரையும் பிரமிக்க வைத்தது. அருகிலுள்ள காட்டிற்குள் சென்று சிங்கம், புலி போன்ற மிருகங்களின் குரலை அச்சு அசலாக அப்படியே எழுப்புவது இவர் வழக்கம். இதனால் அங்கிருந்த மக்கள் பயந்து போவார்கள். பின்னர் இவரது குரல் திறமையைக் கண்ட அவர்கள் அதிசயித்தனர். பறவைகளின் ஒலியை எழுப்பி அனைவரையும் இவர் மகிழ்விப்பார்.
அனைத்து இசைக்கருவிகளையும் இசைத்து தனது இசைத் திறமையை இவர் வளர்த்துக் கொண்டார். அத்தோடு சமஸ்கிருத மொழியில் புலமை பெற்றவரானார். விரஜ பாஷை, பெர்ஸிய மொழி, அவதி ஆகிய மொழிகளில் கவிதைகளை இயற்றினார்.
ஒருநாள் காட்டில் இவர் எழுப்பிய குரலைக் கேட்டு அந்த வழியே சென்று கொண்டிருந்த ஹரிதாஸ் ஸ்வாமிகள் இவரை அழைத்தார். இவருக்கு இசையின் மீது இருந்த ஆர்வத்தைக் கண்டு தனது சிஷ்யனாக இவரை ஆக்கிக் கொண்டார்.
ரேவா மன்னராகத் திகழ்ந்த ராஜா ராமசந்திர சிங்கின் அரசவையில் இவர் இசைக் கலைஞராகத் திகழ்ந்தார்; த்ருபத் பத்ததியை உபயோகித்து பல இசைப்பாடல்களையும் புனைந்தார்.
இவரது இசைத் திறமையைக் கேட்ட அக்பர் இவரைத் தனது அரசவைக்கு அழைத்து நவரத்தினங்களுள் ஒருவராக இவரை ஆக்கிக் கொண்டார். அப்போது இவருக்கு வயது அறுபது. தான்ஸேன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு இவர் பெரும் புகழைப் பெறலானார்.
தீபக் ராகத்தைப் பாடி விளக்கு ஏற்றலாம் என்று இவர் சொன்னதை நம்ப முடியாத அக்பர், அதை நிரூபித்துக் காட்டுமாறு கூறினார்.
ஒரு ஏரிக்கரையின் அருகில் அரங்கத்தை நிர்மாணிக்கக் கூறிய தான்ஸேன் அங்கு தீபக் ராகத்தைப் பாட அவர் உடலில் இருந்த ஆடை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. உடனே ஏரியின் நீரில் குதித்து தன்னை அவர் காப்பாற்றிக் கொண்டார். இதை நேரில் கண்ட அக்பர் பிரமித்துப் போனார். மக்களும் ஆரவாரித்தனர்.
பல புதிய ராகங்களை இவர் படைத்தார். அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று மழையை வருவிக்கும் ராகமான ‘ராகா மேக மல்ஹார்’. அந்த ராகத்தை இவர் பாடினால் மழை பெய்யும்.
மிருகங்களை இசையால் வசமாக்க முடியும் என்பதையும் இவர் நிரூபித்தார். அக்பரது பட்டத்து யானை நோயினால் பீடிக்கப்பட, அந்த நோயை தன் இசையால் இவர் நீக்கினார். அத்தோடு அது மதம் பிடித்து அலறிய போது அதைத் தன் இசையால் சாந்தப்படுத்தினார்.
இப்படி இசை மூலம் அவ்வப்பொழுது இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
சூஃபி துறவியான முகம்மது காஸ் என்பவர் இவரை வெகுவாக ஆசீர்வதித்து இவருக்கு உபதேச உரைகளைச் செய்தார்.
இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. அனைவரும் இசைக்கலைஞர்களே! சரஸ்வதி என்ற இவரது புதல்வி இசை மேதையாக இவரைப் போலவே பிரபலமானார்.
1586ம் ஆண்டு (1589 என்றும் சொல்லப்படுகிறது) இவர் மரணமடைந்தார். இவரது சவத்தின் அருகே இவரது புதல்வரான பிலாஸ் கான் துக்கம் தாளாமல் ராகம் ஒன்றை மனமுருகி இசைக்க, தான்ஸேனின் சவம் தலையை அசைத்து, கைகளைத் தூக்கி அவரை ஆசீர்வதித்தது. இது ராகா பிலாஸ்கானி தோடி என்ற பெயரில் துக்க காலத்தில் இசைக்கப்படும் ராகமாக ஆயிற்று.
இவரது சமாதி க்வாலியரில் முகம்மது காஸ் சமாதியின் அருகே நிறுவப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் க்வாலியரில் தான்ஸேன் சமாரோ என்ற இசைத் திருவிழா இவரது நினைவாக நடத்தப்படுகிறது.
இவரை கௌரவிக்கும் வண்ணம் இந்திய அரசு 1986 மற்றும் 2024ம் ஆண்டுகளில் தபால்தலைகளை வெளியிட்டது.
பல திரைப்படங்கள் இவரது வாழ்க்கை சம்பவங்களைச் சித்தரிக்கின்றன. தான்ஸேன் (1943), சங்கீத சாம்ராட் தான்ஸேன் (1962), பைஜு பாவ்ரா (1952) ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பாகிஸ்தானில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் இவரைப் பற்றிய தொலைக்காட்சி தொடர் ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது.
தான்ஸேனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஏராளமான புத்தகங்களில் அவரைப் பற்றிய நூற்றுக்கணக்கான அற்புதச் செய்திகளைப் படித்து மகிழலாம்!