
மேல் நாட்டு சொற்பொழிவுகளில் பார்வையாளர்கள் சோர்வுறுவது மாதிரி தெரிந்தால் 'மார்க் ட்வைன்னின்' நகைச்சுவை துணுக்குகளை கூறி பார்வையாளர்களை உற்சாகமூட்டுவது இன்றும் தொடரும் பழக்கம். அந்தளவிற்கு தனது சிறந்த நகைச்சுவை எழுத்தால் மற்றும் பேச்சால் அமெரிக்க மக்களை கவர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் மார்க் ட்வைன் (Mark Twain). அவர் எழுத்து மட்டும் அல்ல, அவருடைய வாழ்க்கையையும் நகைச்சுவையாகவே வாழ்ந்தவர். இந்தியாவின் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தார் "இந்தியாதான் மனித நாகரீகத்தின் தொட்டில், மனிதன் பேசியது இந்தியாவில்தான், சரித்திரத்தின் தாய் இந்தியாதான்" எனக் குறிப்பிட்டவர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், மிஸோரியில் 1835 நவம்பர் 30 ல் பிறந்தார் மார்க் ட்வைன். இவரது இயற்பெயர், சாமுவேல் லாங்ஹோன் கிளெமென்ஸ். தந்தை, வணிகர். 11 வயதில் தந்தை இறந்ததால், பள்ளியிலிருந்து வெளியேறி ஒரு அச்சகத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். அந்த காலகட்டத்தில்தான் தன்னுடைய 17 வயதில் முதல் முறையாக "டான்டி" எனும் விளையாட்டு பத்திரிகைக்கு 'கேலிச் சித்திரம் ' வரைந்து அனுப்பினார் அதுவும் பிரசுரமானது. அப்போதுதான் ‘மார்க் ட்வைன்’ என தன் பெயரை குறிப்பிட்டார். இதையே பின்னாளில் தனது புனைப்பெயராக சூட்டிக்கொண்டார். 18 வயதில் நியூயார்க் சென்றார். அங்கும் அச்சகராகப் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் சூதாட்டத்தில் கொஞ்சம் பணத்தை இழந்தார்.
1853 ம் ஆண்டு மிசிசிப்பி ஆற்றில் நீராவிப் படகு கேப்டனாக இரண்டாண்டுகள் பணிபுரிந்தார். அப்போது இடை இடையே பத்திரிகைகளுக்கு செய்திகளை நகைச்சுவை ததும்பும் வகையில் எழுதி அனுப்பினார் இது அவரின் 22 வயது வரை தொடர்ந்தது. தவறாமல் நூலகம் சென்று அறிவியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த நூல்களை வாசித்து அறிவை வளர்த்துக் கொண்டார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வும் பெற்றிருந்தார். வெர்ஜீனியாவில் வெளியிடப்பட்ட ‘டெரிடோரியல் என்டர்பிரைஸ்’ என்ற பத்திரிகையில் 1863-ல் ‘லெட்டர் ஃபிரம் கார்சன்’ என்ற பயணக்கட்டுரை எழுதினார்.
நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த இவரது எழுத்தும், பேச்சும் உலகம் முழுவதும் வாசகர்களைப் பெற்றுத்தந்தது. 1867-ல் உள்ளூர் பத்திரிகைக்காக ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயண அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதினார். இவை தொகுக்கப்பட்டு ‘தி இன்னொசன்ஸ் அப்ராட்’ என்ற நூலாக வெளிவந்தது.
இவரது நகைச்சுவை பேச்சுகளை கேட்க கூட்டம் கூட்டமாக வந்தனர் அதனால் ஊர் ஊராகச் சென்று நகைச்சுவை சொற்பொழிவு ஆற்றினார். அந்த கால கட்டத்தில்தான் 1870 ம் ஆண்டு ஒலிவியா என்ற தன் நண்பரின் தங்கையை பார்த்து அவரை காதலிக்க வேண்டுமென்றே காலை உடைத்து கொண்டு அவரது வீட்டில் இரண்டு வாரங்கள் படுக்கையில் இருந்து அனைவரின் அனுதாபத்தை பெற்று கல்யாணம் செய்து கொண்டார்.
‘பஃபெல்லோ எக்ஸ்பிரஸ்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1872-ல் ‘ரஃபிங் இட்’ என்ற நூல் வெளிவந்தது. 1874 முதல் 1891 வரையிலான காலகட்டத்தில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதினார். இவரது படைப்புகள் உலகப் புகழ்பெற்றவை. லண்டன் சென்ற இவர், அறிவியல் ஆராய்ச்சிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டார்.
தனது விஞ்ஞான நண்பருடன் இணைந்து சில சாதனங்களை உருவாக்கினார். தனது எழுத்து மூலம் சம்பாதித்த பணத்தை எல்லாம், கண்டுபிடிப்புகளுக்கும் பல தொழில்நுட்பங்களைக் கண்டறிவதற்கும் செலவிட்டார். மேலும் இவர் தொடங்கிய பதிப்பகமும் நஷ்டமடைந்ததால் கடனாளியானார். 1906 ம் ஆண்டு அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆல்பர்ட் பி.பைன் என்பவர் எழுதினார். அந்த புத்தகம் நன்கு விற்பனையானது. அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ஒரு பெரிய பங்களா கான் பகுதியில் கட்டினார். அதற்கு அவர் வைத்த பெயர் "சூறாவளி புலம்"(storm field) என்பதுதான்.
பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உரையாற்றியும், எழுதியும் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு கடன்களை அடைத்தார். 1908-ல் சிறுமிகளுக்கான ‘ஏஞ்சல் ஃபிஷ் அன்ட் அக்குவேரியம் கிளப்’ (Angel Fish and Aquarium Club) என்ற அமைப்பை உருவாக்கினார்.
மார்க் ட்வைன் பிறந்தபோது வானில் ஹாலி வால் நட்சத்திரம் தோன்றியது. அது பற்றி குறிப்பிடும்போது அது மறுபடியும் வானில் தோன்றும்போது நானும் மறைந்து விடுவேன் என வேடிக்கையாக குறிப்பிடுவாராம் மார்க் ட்வைன். அது இறுதியில் உண்மையானது அவர் 1910 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் வானில் ஹாலி வால் நட்சத்திரம் தோன்றியது.