தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், பனை மரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், பனையோலைகளில் செய்யப்பெற்ற பெட்டி, கூடை, கொட்டான், அஞ்சறைப் பெட்டி, மிட்டாய் பெட்டி, பணப்பை, விசிறி, முறம், தட்டு, கிலுகிலுப்பை, தொப்பி என விதம்விதமான கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பெற்று, தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. நெகிழி, காகிதம், அட்டை போன்றவைகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதால், பல பனை பொருட்கள் காணாமல் போய்விட்டன. அப்படிக் காணாமல் போன சில பொருட்களை இங்கு பார்க்கலாம்.
அரிவட்டி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரிசி வடிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பனை ஓலைக் கூடையின் பெயர் அரிவட்டி. இது அரிசி வடிக்கும் பெட்டியாகப் பயன்பட்டதால் ‘அரிவட்டி’ என்று அழைத்தனர். இப்பெட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் செய்யப்பட்ட ஒரு பெட்டி வகை ஆகும். பெரும்பாலும் குருத்தோலைகளிலிருந்து பெறப்படும் ஈர்க்கில்களைக் கொண்டு செய்யப்பட்டு வந்தது. குருத்தோலைகள் கிடைப்பது அரிதான தற்காலத்தில் சாரோலை ஈர்க்கில்களைக் கொண்டு செய்யப்பட்டது. குமரி மாவட்டத்தில் புட்டு (பிட்டு) செய்ய அரிசியைத் தண்ணீரில் ஊறப் போட்டுப் பின்னர் உரலில் இட்டுக் குத்தி மாவைச் சலித்தெடுப்பார்கள். ஊறப் போட்ட அரிசியை வடித்து உலர்த்தி எடுப்பதற்காக அனைத்து வீடுகளிலும் அரிவட்டி இடம் பெற்றிருந்தது. இதேப் போன்று, திருமண வீடுகளின் அரிசியைக் கழுவி நீர் வடித்து உலையில் போட அரிவட்டியைப் பயன்படுத்துவர்.
தற்போது, அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் போன்ற உலோகங்களில் அரிவட்டிகள் வந்து விட்டதால், இதன் பயன்பாடு இல்லாமலேப் போய்விட்டது.
மஞ்சணப்பெட்டி:
பனையோலையைக் கொண்டு செய்யப்படும் மிகச் சிறிய ஒரு பெட்டி இது. உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் இந்தப் பெட்டிக்குச் சிறு மூடியும் உண்டு. இதை குருத்தோலை கொண்டு செய்வர். சிறு தெய்வங்களுக்குப் படைக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றை இந்தப் பெட்டியில் வைப்பதால், வழிபாட்டில் முக்கியப் பங்கெடுக்கும் தன்மை கொண்டதுமான பெட்டி இது. தற்போது, பித்தளை, எவர்சில்வர் போன்ற உலோகங்களில் பூசைகூடை வந்து விட்டதால் இந்தப் பெட்டியும் காணாமல் போய்விட்டது.
கொட்டான் - மிட்டாய்பெட்டி:
குட்டான் அல்லது கொட்டான் என்பது பனையோலை, நாரால் செய்யப்பட்ட பெட்டி. இது பதநீர், சுக்கு, மிளகு சேர்த்துச் செய்யப்படும் இனிப்புப் பண்டமான சில்லுக்கருப்பட்டி, பனை வெல்லம் போன்றவைகளையும், இனிப்புகளை வைப்பதற்குமான பெட்டியாக இருந்தது. இதனை மிட்டாய்பெட்டி என்று கூடச் சொல்வார்கள். திருமணச் சீராகத் தரப்படும் பண்டங்களை கொட்டான்களில் வைத்துத் தருகிற மரபும் உண்டு. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இத்தகைய ஓலைப்பெட்டிகளின் பயன்பாடு நெகிழிப் பைகள், அட்டைப் பெட்டிகள் போன்றவற்றின் வரவால் காணாமல் போய்விட்டது.
திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் விற்கப்படும் சில்லுக்கருப்பட்டிகளைச் சில கடைகளில் இப்பெட்டியில் வைத்துத் தருகின்றனர்.
தோண்டி:
கையில் சுமந்து செல்லத்தக்க வடிவில் அமைக்கப்பட்ட ஒரு தண்ணீர் கொள்கலன் இது. தோண்டியானது மண், உலோகம், பனையோலையில் ஒற்றைச் சிறகு ஓலை போன்றவற்றால் செய்யப்பட்டுப் பயன்பாட்டில் இருந்தது. பனையோலைத் தோண்டியானது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது. ஒரு பனை மட்டையிலிருந்து பிரியும் ஓலைகளில் அதன் ஓரத்திலிருக்கும் சிறிய ஓலைகளை நீக்கிவிட்டுக் குறைந்தபட்சம் ஒன்பது இலக்குகள் கொண்ட ஓலைகளைத் தெரிந்து கொண்டு அதை குருத்தோலையின் வடிவத்தில் இணைந்திருக்கும்படி கட்டி உருட்டி வடிவம் ஏற்படுத்தி, குறுக்காக ஒரு கம்பை கொடுத்து சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது இந்தத் தோண்டி. குமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டிகள் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்டன. தற்போது இதுவும் காணாமல் போய்விட்டன. சில திருமண வீடுகளில் சாம்பார் போன்றவற்றை பரிமாறுவதற்கு தோண்டிகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர் என்கின்றனர்.
மீன் பறி:
மீன் பறி என்பது தமிழ் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை இடுகின்ற ஒரு பெட்டியாகும். இது பனை ஓலையில் செய்யப்பட்டதாக குடுவை போன்ற அமைப்பில் இருக்கும். பார்ப்பதற்குச் சுரைக் குடுவை போலவே இருக்கும். குருத்தோலைகளைக் கொண்டு இவற்றைப் பின்னுவதால், நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கும். இதற்கு கையளவுள்ள சிறிய வாய் அமைத்திருக்கும். உயிருடன் பிடிக்கப்படும் மீன்கள், துள்ளி வெளியேச் சென்றுவிடாதபடி இருக்க ஒரு அமைப்பைக் கொண்டதாகவும் இது இருந்தது. தற்போது இதுவும் பயன்பாட்டிலில்லை.
இதே போன்று, பனையோலைகளிலிருந்து உருவாக்கம் பெற்ற ஓலைப் பெட்டி, கடகம், ஒலை விசிறி, கூடை, கைப்பை, சுளகு, காசுப்பெட்டி, கிலுகிலுப்பை, விளக்குமாறு, கிடுகு போன்ற பல பொருட்கள் இன்று கிடைப்பதில்லை.
பனையோலையால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்குத் தமிழ்நாட்டில் வரவேற்பு இல்லாமல் போனாலும், வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், பனையோலைக் கைவினைப் பொருட்களைச் செய்வதற்கான கைவினைஞர்கள்தான் இல்லாமல் போய்விட்டனர்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுயவுதவிக் குழுவினர்களுக்குப் பனையோலைக் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டு, அதனைச் சந்தைப்படுத்துவதற்கான உதவிகளையும், வழிமுறைகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்தால், காணாமல் போன பனைபொருட்களை மீட்டெடுக்கும் வாய்ப்பிருக்கிறது.