
ரசியாவின் மாஸ்கோவில் 1996 ஆம் ஆண்டு பிறந்த ஒரு கறுப்பு நிறக் கலப்பு வகைத் தெருநாய் ஒன்று, தனது இரண்டாவது வயதில் மாஸ்கோ மெட்ரோ தடத்தில் இருக்கும் மெண்டலீவ்ஸ்காயா தொடருந்து நிலையத்தில் தஞ்சமடைந்தது. அங்கிருந்த தொடருந்து நிலையப் பணியாளர்கள், அந்த நாயை ‘மால்சிக்’ என்று பெயரிட்டு அழைத்ததுடன், அதற்குத் தேவையான உணவையும் வழங்கிக் கொண்டிருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மெண்டலீவ்ஸ்காயா தொடருந்து நிலையத்தில் அந்த நாய் வசித்து வந்ததால், அந்நிலையப் பணியாளர்களுக்கு மட்டுமின்றி, அந்த நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்துப் பயணிகளுக்கும் நெருக்கமான மற்றும் பழக்கமான நாயாகவும் மாறிப் போனது.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அழகுத் துறையைச் சார்ந்த 22 வயதான யூலியானா உரோமானோவா (வோல்கோவா) எனும் ஒரு பெண்மணி, தனது செல்லப்பிராணியான நாயுடன் மெண்டலீவ்ஸ்காயா நிலையத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியிலிருந்த சுரங்கப்பாதை ஒன்றைக் கடக்கும் போது, அங்கிருந்த மால்சிக்கைக் கண்டார்.
மால்சிக் அவரையும், அவருடன் வந்த நாயையும் பார்த்துக் குரைக்கத் தொடங்கியது. அதனைக் கண்ட அந்தப் பெண், தன்னுடன் அழைத்து வந்த செல்ல நாயை மால்சிக்குடன் மோதச் செய்தார். அதனோடு நிற்காமல், தான் வைத்திருந்த கைப்பையிலிருந்த ஒரு சமையலறைக் கத்தியை எடுத்து, மால்சிக்கின் முதுகு, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தினார்.
அருகிலிருந்த ஒரு கடைக்காரர் அத்தாக்குதலைத் தடுக்க முயன்றார். ஆனால், அந்தப் பெண் அவரைக் கத்தியைக் கொண்டு மிரட்டியதால் அவர் பின்வாங்கினார். காவல்துறைக்கும், அவசர மருத்துவ ஊர்திக்கும் தகவல் அனுப்பப்பட்டது. காவல்துறையினரும் அவசர மருத்துவ ஊர்த்தியும் வருவதற்கு முன்பு, நாய் மால்சிக் இறந்து போனது. அந்தப் பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின்பு, காவல் துறையால் உரோமானோவாவைக் கண்டறிய முடியாமல் போனது. அத்துடன் முறையான விசாரணை ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போனது.
ஆனால், இஸ்வெட்டியா என்ற பிரபல செய்தித்தாளின் புலனாய்வு நிருபரான ஐரினா ஓஸ்யோமயா என்பவர் இந்நிகழ்வு குறித்து செய்திக் கட்டுரைகள் எழுதி வெளியிடத் தொடங்கினார். காவல் துறையும் வேறு வழியின்றி, அந்தச் செய்தி கட்டுரையில் சொல்லப்பட்ட உரோமானோவாவினை அடையாளம் காட்ட, அவரே நாயைக் கொலை செய்தவர் என்பது தெரிய வந்தது. செய்தியாளர்கள் அவரைத் தொடர்பு கொண்டபோது, தன் குற்றத்தை அலட்சியமாக மறுத்தார். ஆனால், செய்தியாளர்கள் அந்தப் பெண் நீண்ட காலமாக விலங்குகள் வன்கொடுமையியில் ஈடுபட்டிருந்ததையும், சில காலம் மனநலச் சிகிச்சை பெற்றவர் என்பது தெரிய வந்தது. காவல்துறை இது குறித்து விசாரணை ஏதும் செயாமல் இருந்து வந்தது.
மால்சிக்கின் கொடிய மரணம் பற்றிய தகவல்களை வெளியிட்ட பல்வேறு இதழ்கள், அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்துச் செய்திகளை வெளியிட்டன. இதேப் போன்று, விலங்குரிமை ஆர்வலர்கள் அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையிலடைக்க ஒரு வருட காலம் வரை போராடினர். அதன் பின்னர், அந்தப் பெண் உரோமானோவா கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு ஓராண்டுக் காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்காலம் முடிந்ததும் மனநலச் சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டார்.
மெண்டலீவ்ஸ்காயா தொடருந்து நிலையப் பணியாளர்கள் மற்றும் அங்கு வந்து செல்லும் பயணிகள், மால்சிக் தெரு நாயாக இருந்த போதும், அதன் மீது கொண்டிருந்த பாசத்தால், அதன் உருவத்தை வெண்கலச் சிலையாகவும், நினைவுச் சின்னமாகவும் நிறுவுவது என்று முடிவு செய்து பொதுமக்களிடம் நிதி திரட்டினர்.
அதனைத் தொடர்ந்து, அந்த நாய்க்கான வெண்கலச் சிலையைச் செய்து, அச்சிலையினை 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று, மெண்டலீவ்ஸ்காயா சுரங்க இரயில் நிலையத்தில் நிறுவினர். அந்தச் சிலையின் கீழே அனைவருக்கும் தெரியும் வகையில், "இரக்கம்" என்று பொருள்படும் ‘கம்பாசன்’ எனும் ரசியச் சொல்லையும் எழுதி வைத்தனர்.
மேலும், ரசிய மொழியிலான கல்வெட்டில் "நினைவுச் சின்னமானது இருப்பிடமற்ற விலங்குகளிடம் காட்டப்படும் மனிதாபிமான உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது" என்றும் பொறித்து வைத்தனர்.