'தண்ணீர்த் தாய்' - மம்மி வாட்டா வழிபாடு!

Mami Wata
Mami Wata
Published on

ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலும், அங்கிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்கக் கண்டத்தில் சென்று வசிப்பவர்களாலும் வழிபடப்படும் ஒரு பெண் தெய்வமாக மம்மி வாட்டா (Mami Wata) இருக்கிறது. இத்தெய்வம், மம்மி வாட்டர் (Mammy Water) என்றும் அழைக்கப்படுகிறது. மம்மி வாட்டாவின் வரலாறு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வரை செல்கிறது. 

மம்மி வாட்டா என்ற சொற்களின் பொருள் ‘தண்ணீர்த் தாய்’ எனச் சொல்லப்படுகிறது. ஆனால், பழமையான எகிப்திய மொழியில் இருந்து திரிந்த சொற்கள்தான் இவை எனத் தற்கால ஆய்வுகள் சொல்கின்றன. இந்தச் சான்றின் அடிப்படையில் மம்மி வாட்டா வழிபாடு முதலில் எகிப்தில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.

தண்ணீர்த் தெய்வமாக வணங்கப்படும் இத்தெய்வம் பெண் தெய்வமாகவே இருக்கிறது. ஒரு சில இடங்களில், ஆண் தெய்வமாகவும் இருக்கிறது. இயற்கையைத் தெய்வமாக வழிபடும் மரபு உலகம் முழுவதும் இருந்திருக்கிறது. இந்து, கிறிஸ்துவம், இசுலாம் போன்ற பெரும் சமயங்கள் தோன்றுவதற்கு முன்பு இருந்த நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் இயற்கையைக் குறிப்பவைகளாகத்தான் இருந்தன. மம்மி வாட்டா என்பதும் அது போன்ற தெய்வங்களுள் ஒன்றுதான். 

இத்தெய்வத்தின் முடி நீண்டதாகவும், சுருண்டும், கறுத்தும் காணப்படுகிறது. மம்மி வாட்டா சிலைகள் கி.பி. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனச் சொல்லப்படுகின்றன. இன்று கிடைக்கும் மம்மி வாட்டா ஓவியங்கள், மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி தருகின்றன. 

அடர்ந்த சுருள் கூந்தலை விரித்துப் போட்டிருக்கும் மம்மி வாட்டா, தோளின் குறுக்காக மலைப்பாம்பை அணிந்திருக்கிறார். பழமையான சிலைகளிலும் இந்த உருவமேச் செதுக்கப்பட்டிருக்கிறது; ஆடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. பிற்காலப் படங்கள் மம்மி வாட்டாவை ஆடையுடன் பெருமைக்குரியதாகக் காட்டுகின்றன. 

மம்மி வாட்டா கோயில்கள் ‘மமஸ்ஸீ’ (mamaissii) என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கோயில்களில் பெண்களேப் பூசாரிகளாக இருக்கின்றனர். அவர்களும் ‘மமஸ்ஸீ’ என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பளிங்கு சிற்பங்களால் ஜொலிக்கும் தில்வாரா கோயில்!
Mami Wata

தமிழ்த் திராவிட வழிபாட்டுக்கும், மம்மி வாட்டா வழிபாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக விவியன் ஹண்டர் ஹிண்ரோவின் ஆய்வு முடிவு சொல்கிறது. மிகப் பழமையான மம்மி வாட்டாவின் கரு எனச் சொல்லப்படும் ஒரு வழிபாட்டுச் சிற்பத்தைத் தமிழ் லிங்க வழிபாட்டுடன் ஒப்பிட்டு இந்த முடிவுக்கு ஹிண்ரோ வருகிறார். இந்தியாவிலும் தண்ணீரைப் பெண் தெய்வமாக வழிபடும் வழக்கம் இருக்கிறது. இங்குள்ள காளி வழிபாட்டுடனும் இதை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார் அவர்.

தமிழக நாட்டார் தெய்வங்களைப் போலவே, மம்மி வாட்டாவும் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதிகளில், கடுமையான தெய்வமாகவும், சொல்லுக்கடங்காத வீரம் மிகுந்தவளாகவும் தொன்மக் கதைகளில் இடம் பெற்றிருக்கிறாள். அவளது ஆவேசத்தை வெள்ளப் பெருக்குக்கும், அவளது கருணையை நீரின் அமைதிக்கும் ஒப்பிடுகிறார்கள்.

துன்பங்கள், வலிகள், பாவங்கள் ஆகியவற்றைத் தான் வாங்கிக் கொண்டு, மக்களுக்கு மன அமைதியை வழங்கக் கூடியவளாகவும், குழந்தை வேண்டும் பெண்களுக்குக் குழந்தைப் பேற்றை தரக்கூடியவாளாகவும் மம்மி வாட்டா வணங்கப்படுகிறாள். இன்றைக்கு மம்மி வாட்டா வழிபாடு, கியூபா, பிரேசில், நைஜீரியா, கானா, ஜமைக்கா, ஹெய்டி எனப் பல்வேறு நாடுகளிலும் பரவியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com