

மனித வரலாற்றில் இதுவரை முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத சில ஆவணங்கள் உள்ளன. அவற்றில் இன்னும் தீர்க்கப்படாத புதிராகத் திகழ்வது Voynich கையெழுத்துப் பிரதி ஆகும். இந்த நூலில் உள்ள மர்மமான எழுத்துமுறையும், விளக்க முடியாத படங்களும் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
இந்த கையெழுத்துப் பிரதி 1912 ஆம் ஆண்டு பழமையான நூல்களை சேகரித்த வியாபாரியான Wilfrid Voynich என்பவரால் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் பெயராலேயே இது Voynich Manuscript என்று அழைக்கப் படுகிறது. ஆனால், இந்த நூல் அதற்கு முன்பே சுமார் 15ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் கார்பன்-டேட்டிங் மூலம் நிரூபித்துள்ளனர்.
இந்த நூலில் சுமார் 240 பக்கங்கள் உள்ளன. இதில் சில பக்கங்கள் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் முக்கிய சிறப்பு, இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துக்கள் எந்த அறியப்பட்ட மொழியுடனும் பொருந்தவில்லை.
உலகின் முன்னணி குறியாக்க நிபுணர்கள், மொழியியல் அறிஞர்கள் மற்றும் கணினி விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக இதை புரிந்துகொள்ள முயன்றும், இதன் அர்த்தத்தை முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை.
Voynich கையெழுத்துப் பிரதியில் பல வண்ணப்படங்கள் காணப்படுகின்றன. அவை பல்வேறு பிரிவுகளாகப் பகுக்கப்படுகின்றன. முதலில், 'மருத்துவம் அல்லது மூலிகை' பகுதி உள்ளது. இதில் காணப்படும் சில தாவரங்கள் இன்னும் அறியப்படாதவை போல தெரிகின்றன. இது ஒரு கற்பனை மூலிகை நூலா அல்லது மறைந்துபோன தாவரங்களின் பதிவு தானா என்ற கேள்வியை எழுப்புகிறது.
அடுத்ததாக, வானியல் சார்ந்த பகுதி உள்ளது. இதில் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் போன்றவற்றின் வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன. சில பக்கங்களில் ராசி சின்னங்களை ஒத்த வடிவங்களும் காணப்படுகின்றன. இது ஜோதிட அறிவியலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
மேலும், இந்த நூலில் மனிதர்களைப்போன்ற உருவங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக, நீரில் குளிப்பது போன்ற பெண்களின் படங்கள் அதிகமாக உள்ளன. இந்த பகுதி உயிரியல் அல்லது மருத்துவ சிகிச்சை தொடர்பானதாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த நூலை யார் எழுதியது என்பது இன்னும் தெரியாத புதிராகவே உள்ளது. இன்றைய காலத்தில், இந்த கையெழுத்துப் பிரதி Yale University நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இதன் டிஜிட்டல் பிரதிகளைப் பயன்படுத்தி தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீப காலங்களில், செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி மொழியியல் முறைகள் பயன்படுத்தப்பட்டும் இதன் குறியீடுகளை புரிந்துகொள்ள முயற்சிகள் நடக்கின்றன. இருப்பினும், முழுமையான மொழிபெயர்ப்பு இன்னும் சாத்தியமாகவில்லை.
Voynich கையெழுத்துப் பிரதி என்பது கடந்த காலத்தின் அறிவு படைப்பா? அல்லது ஒருவரின் கற்பனை படைப்பா? என்ற கேள்விகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.
எதிர்காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் இந்த மர்மம் தீர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது. அதுவரை, போய்னிச் கையெழுத்துப் பிரதி உலகில் உள்ள மர்மங்களில் ஒன்றாகத் தொடர்கிறது.