
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டின் சிறப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்றவை. சில நாடுகள் கல்வி வளர்ச்சிக்கு பெயர் பெற்றவை, சில நாடுகள் அதிக அல்லது குறைந்த மக்கள் தொகைக்கு பெயர் பெற்றவை என சில விசித்திரமான விஷயங்களுக்கு பெயர் பெற்றவையாக சொல்லப்படும். ஒரு நாட்டின் பெயரை சொன்னால் அந்த நாட்டின் சிறப்பம்சங்களை சொல்லக்கூடும். அதேபோல் ஒவ்வொரு நாட்டிற்கும் சட்ட திட்டங்களும், விதிமுறைகளும் இருக்கும். அதை அந்தநாட்டு மக்கள் தவறாமல் கடைபிடிப்பார்கள்.
பொதுவாக, எல்லா நாட்டிற்கும் அல்லது மாநிலத்திற்கும் கண்டிப்பாக ஒரு தலைநகரம் இருக்கும். அந்த தலைநகரத்தில் தான் அனைத்து அரசு அலுவலகம் சார்ந்த விஷயங்கள் செயல்படும். ஆனால், தலைநகரம் இல்லாத ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாங்க, அப்படிப்பட்ட ஒரு நாட்டின் பெயர் நவ்ரு (Nauru).
இது மைக்ரோனேஷியா தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு.
21 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இந்த நாடு. தலைநகரம் இல்லாத உலகின் ஒரே குடியரசு நாடு இதுவாகும். தனிப்பட்டோருக்கான வரிகள் எதுவும் நவூருவில் விதிக்கப்படுவதில்லை. அங்குள்ள மக்கள் தேங்காய் உற்பத்தி செய்வதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.
நவூரு குடியரசு (Republic of Nauru) பொதுவாக இனிமையான தீவு எனவும் அழைக்கப்படுகிறது. 1788-ம் ஜோன் பேர்ன் என்பவர் நவூரு தீவிற்கு ‘இனிமையான தீவு’ (Pleasant Island) எனப் பெயரிட்டார். இது தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடாகும். ‘நவூரு’ என்ற சொல் நவூருவ மொழியில், ‘நான் கடற்கரைக்குப் போகிறேன்’ எனப் பொருள். நவூரு உலகின் மிகவும் சிறிய குடியரசு நாடாக கருதப்படுகிறது. இதன் மொத்தப் பரப்பளவு 21 கி.மீ ஆகும். 2023-ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, நவூருவின் மக்கள் தொகை 11,875 ஆகும். சமீபகாலமாக இங்கு மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி இங்குள்ளவர்கள் உலகிலேயே அதிக உடற் பருமன் உள்ளவர்களாக உள்ளனர். மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
நவூரு தீவின் மேற்பரப்பில் பாஸ்பேட் பாறைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இத்தீவு மக்கள் ஐரோப்பிய வணிகர்களுடன் மது வகைகளையும், துப்பாக்கிகளையும் தமது உணவுப் பொருட்களைக் கொடுத்துப் பண்டமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
நவூரு நாடாளுமன்ற முறையைக் கொண்ட ஒரு குடியரசு நாடு. 18-உறுப்பினர் கொண்ட ஓரவை நாடாளுமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்த நாடு பங்கேற்கிறது.
நவூருவில் நிலவுடைமை முறை சற்று வேறுபட்டது. தீவின் நிலங்கள் அனைத்தும் தனியார்களோ அல்லது குடும்பங்களோ சொந்தமாக வைத்துள்ளனர். அரசாங்கமோ அல்லது அரசு சம்பந்தப்பட்டவர்கள் யாரும் எந்த நிலத்தையும் உரிமையாக வைத்திருக்க முடியாது. நிலம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அந்த நிலத்தின் உரிமையாளருடன் குத்தகை உடன்பாட்டில் மட்டுமே குறிப்பிட்ட நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் நவூரு குடிமக்கள் அல்லாதோர் இங்கு நிலம் வாங்க உரிமை கிடையாது.
நவூருவில் இராணுவப் படை எதுவும் இல்லை, ஆனாலும் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் சிறிய அளவில் காவல்துறையினர் உள்ளனர். இத்தீவின் பாதுகாப்பு ஆஸ்திரேலியாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவூரு அதிகாரபூர்வ நாணயமாக ஆஸ்திரேலிய டாலரைப் பயன்படுத்துகிறது. நவூருவின் வருமானத்தின் முக்கிய பங்கு ஆஸ்திரேலியாவிடமிருந்து பெறும் உதவிமூலம் கிடைக்கிறது.
நவூருவின் காலநிலையை பொறுத்தவரை ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமானதாகவே உள்ளது. நவம்பர் முதல் பிப்ரவரி வரை பருவ மழை பெய்தாலும், சூறாவளிகள் மிகக் குறைவாகவே தாக்குகின்றன.