
உலகின் மிகப்பெரிய நதித்தீவான மஜுலி தீவு அசாம் மாநிலத்தில், பிரம்மபுத்திரா நதியில் நடுவில் உள்ளது. சுமார் 880 சதுர கிலோமீட்டர் பர்பளவைக்கொண்ட இது நாட்டின் மிகப்பெரிய தீவாகவும், உலகின் மிகப்பெரிய நதித்தீவாகவும் உள்ளது. இந்த தீவு தெற்கில் பிரம்மபுத்திரா நதியாலும், வடக்கில் சுபன்சிரி நதியுடன் இணையும் பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான கெர்குடியா சூட்டியாலும் சூழப்பட்டுள்ளது. இந்த தீவு அதன் இயற்கை அழகு மற்றும் கலாச்சாரத்திற்கு பிரபலமானது.
இந்த தீவு அசாமிய கலாச்சாரத்தின் தாயகமாக உள்ளது. மஜூலி தீவு அதன் இயற்கை, அமைதியான நீர்நிலைகள் மற்றும் பசுமையான நெல் வயல்களுக்கு பெயர் பெற்றது. 2016 ஆம் ஆண்டில், மஜுலி உலகின் மிகப்பெரிய தீவாக அங்கீகரிக்கப்பட்டது.
மேலும் இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாகவும் உள்ளது. மழைக் காலங்களில் மஜூலி தீவின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிடும். வருடாந்திர பருவமழை வெள்ளத்தால் வளப்படுத்தப்பட்ட ஆற்று மண் விவசாய பகுதிகளில் படிந்து நெல் சாகுபடிக்கு வளமான பகுதியாக மாற்றுகிறது.
இங்கு பெரிய நெல் வயல்கள் மற்றும் ஏராளமான மூங்கில் காடுகள், வாழைத்தோட்டம் மற்றும் கரும்பு சாகுபடிகளும் சிறப்பாக நடைபெறுகின்றது. தீவின் முதன்மையான தொழிலாக விவசாயம் உள்ளது. கோமல் சவுல் மற்றும் பாவோதான் போன்ற சிறப்பு வகை அரிசியை பயிரிடுகிறார்கள். விவசாயத்தைத் தவிர, மீன்பிடித்தல் மற்றும் நெசவு முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு தயாரிக்கும் பாரம்பரிய அசாமிய துணிகள் உள்ளூர் சிறப்பாக அறியப்படுகிறது.
மஜூலி வளமான கலாச்சாரத்தை தாண்டி அதன் மாறுபட்ட இயற்கை சூழலுக்கும் பெயர் பெற்றது. தீவில் ஆற்றங்கரை காடுகள் மற்றும் நீர்நிலைகள் பல விலங்குகளுக்கு, குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும் பறவைகளுக்கு வசிக்க தகுந்த பாதுகாப்பான இடமாக உள்ளது.
மஜூலியின் ஈரமான பகுதிகளில் சைபீரியா மற்றும் ஐரோப்பா போன்ற தொலைதூர இடங்களிலிருந்து இடம்பெயரும் பறவைகளை காணலாம். மிகவும் அரிய வகைப் பறவைகள் , அழிவு நிலையில் உள்ள பறவைகளை எல்லாம் இங்கு காணலாம். பறவைகளை பார்த்து ரசிக்க விரும்புபவர்களுக்கு இது ரசனையான இடமாக இருக்கும்.
இந்த தீவில் கிருஷ்ணரின் வாழ்க்கையை கொண்டாடும் ராஜ மஹோத்சவம் பெரிய பண்டிகையாக உள்ளது. இந்த விழா பார்க்க வேண்டிய மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நடைபெறும். மேலும் கிருஷ்ணரைப் பற்றிய பிரபலமான பாவோனா நாடகங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தீவின் மதம் மற்றும் கலாச்சாரத்தை நெருக்கமாகக் காண இந்த இடங்களுக்குச் செல்லலாம்.
பாரம்பரிய முகமூடிகள் அணிந்த அற்புதமான நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம். ஆன்மீக நாடகங்களில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய முகமூடிகளை தயாரிப்பதில் மஜூலிக்கு ஒரு சிறப்பு கைவினை உள்ளது. பாவோனா நாடகங்களுக்காக கையால் இந்த வண்ணமயமான முகமூடிகளை தயாரிப்பதில் சமகுரி சத்ரா என்ற ஆன்மீக மையம் மிகவும் பிரபலமானது. இந்த நேரத்தில் முழு தீவுமே திருவிழாவை கொண்டாடுகிறது. இதைப் பார்க்க மக்கள் அனைத்து இடங்களிலிருந்தும் வருகிறார்கள்.
மஜூலி அழகாகவும், பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் கொண்டிருந்தாலும், அது கடுமையான சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்கிறது. மிகப்பெரிய பிரச்னை வெள்ளத்தில் நிலம் அடித்துச் செல்லப்படுவதுதான். பிரம்மபுத்திரா நதியின் வலுவான ஓட்டம் பல ஆண்டுகளாக தீவின் பெரிய பகுதிகளை மெதுவாக அரித்து, அதை மிகவும் சிறியதாக ஆக்கியுள்ளது. இயற்கையின் நெருக்கடிகள் இருந்தாலும் சுற்றிப் பார்க்கவும் சுற்றுலா செல்லவும் மஜூலி தீவு அற்புதமான ஒன்றுதான்.