

பஞ்சாப் நவராத்திரி திருவிழா "ஷேரான்வாலி" (சிங்க வாகனத்தில் அமர்ந்திருக்கும் துர்கை அம்மன்) வழிபாடாக மிகவும் கோலாகலமாக உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் நவராத்திரி என்பது அன்னை துர்க்கையின் வடிவமான "மா ஷேராவாலி"(Maa Sherawali) க்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான ஆன்மீகத் திருவிழாவாகும்.
பஞ்சாபில் நவராத்திரி திருவிழா பக்தி, விரதம் மற்றும் தனித்துவமான கலாச்சார சடங்குகளுடன் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் கடுமையான விரதத்தை கடைபிடிக்கின்றனர். இந்த நாட்களில் தானியங்களைத் தவிர்த்து சாத்வீக உணவுகளான குக்டு பூரி, ஆலு சப்ஜி, பழங்கள் மற்றும் பால் பொருட்களை மட்டுமே உட்கொள்கின்றனர்.
முக்கிய சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள்:
ஜாக்ரன்(Jagran):
நவராத்திரி இரவுகளில் 'ஜாக்ரன்' என்ற இரவு நேர பஜனை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து "ஷேரான்வாலி கி ஜெய்" என்ற முழக்கங்களுடன் துர்காதேவியைப் போற்றி பஜனைகள் பாடி, ஆரத்தி எடுத்து வழிபடுகின்றனர்.
கஞ்சகன் பூஜை (Kanjak Puja):
நவராத்திரியின் எட்டாவது நாளான அஷ்டமி மற்றும் ஒன்பதாவது நாளான நவமி நாட்களில் சிறுமிகளை துர்க்கையின் வடிவமாகப் போற்றி கஞ்சகன் சடங்கு நடக்கும். சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து அவர்களின் கால்களைக் கழுவி, கைகளில் மௌலி எனப்படும் புனிதக் கயிற்றைக் கட்டி, திலகமிட்டு வணங்குவார்கள். பின்பு அவர்களுக்கு உண்பதற்கு பூரி, சோலே மற்றும் ஹல்வா போன்ற பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டு பரிசுகள் வழங்கி ஆசி பெறுகின்றனர்.
ராம்லீலா:
நவராத்திரி ஒன்பது நாட்களும் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை விவரிக்கும் ராமாயண நாடகங்கள் "ராம்லீலா" பஞ்சாபின் பல நகரங்களில் மேடை ஏற்றப்படுகின்றன. பத்தாம் நாளான விஜயதசமி அன்று ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டு தீமை ஒழிக்கப்பட்டதாகக் கொண்டாடப்படுகிறது.
விரத உணவு முறைகள்:
நவராத்திரி நாட்களில் வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட்டு, 'செந்த உப்பு' (Sendha Namak) கொண்டு பிரத்யேக விரத உணவுகள் மற்றும் தாலிகள் தயாரிக்கப்படுகின்றன.
குருத்துவாரா லங்கர்:
பல குருத்துவாராக்களில் வெங்காயம், பூண்டு இல்லாத எளிய சைவ லங்கர் (சமூக உணவு) ஏற்பாடு செய்யப்பட்டு ஒற்றுமை வலியுறுத்தப்படும்.
ஜாகோ நடனம்(Jaago)
இங்கு நவராத்திரி ஷேரான்வாலியாக கொண்டாடப் படுகிறது. இந்த விழாவின் பொழுது ஜாகோ நடனம் முக்கிய இடம் பெறுகிறது. ஜாகோ என்ற வார்த்தைக்கு "விழித்தெழு" என்று பொருள். இது பொதுவாக பஞ்சாபி திருமணங்களில் மணமக்களின் வீடுகளில் நள்ளிரவில் ஆடப்படும் ஒரு முக்கிய சடங்காக இருந்தாலும், நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் பொழுது ஷேரான்வாலி (துர்க்கை அம்மன்) வழிபாட்டின் ஒரு பகுதியாக ஆடப்படுகிறது.
தீயசக்திகளை விரட்டி தெய்வீக ஆசீர்வாதங்களை வீட்டிற்குள் வரவேற்பதற்காகவும், அம்மனின் வருகையைக் கொண்டாடுவதற்காகவும் "ஜாகோ ஷேரான்வாலி என்ற முழக்கங்களுடன் ஆடப்படுகிறது. பெண்கள் தலையில் பித்தளை அல்லது மண்ணால் செய்யப்பட்ட பானையின் மீது ஏற்றிய மண் விளக்குகளுடன் வட்ட வடிவில் சுழன்று ஆடுவார்கள்.
பஞ்சாபின் பாரம்பரிய வாத்தியமான தோல் (Dhol) எனப்படும் மேள சத்தத்திற்கு ஏற்ப துள்ளலான அசைவுகளுடன் கித்தா (Giddha) மற்றும் பங்ரா (Bhangra) நடனக் கலைகளின் கலவையாக இந்த நடனம் ஆடப்படுகிறது.
பெண்கள் தங்களின் கைகளில் அலங்கரிக்கப்பட்ட குச்சிகளையும் (Jaggo Stick), சஜ் (Chajj) எனப்படும் வண்ணமயமான முறங்களையும் கொண்டு ஒலியெழுப்பி ஆடுவார்கள். இவை நவராத்திரி போன்ற வழிபாட்டு காலங்களில் பக்தி மற்றும் நேர்மறை ஆற்றலை சமூகத்தில் பரப்பும் ஒரு உன்னத கலை வடிவமாகத் திகழ்கிறது.
தற்போது குஜராத்தின் கர்பா மற்றும் தாண்டியா நடனங்களின் தாக்கமும் பஞ்சாபில் நவராத்திரி திருவிழாக்களின்போது பரவலாகக் காணப்படுகிறது.