

நம்முடைய தமிழ்நாட்டில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் திருமணத்தின்போதோ அல்லது சுப காரியங்களிலோ, முக்கிய நிகழ்வுகளில் பஞ்சகச்சம் மடிசார் புடவை அணிந்து செய்வதுதான் வழக்கம்.
இதைப் போலவே கிட்டதட்ட எல்லா மாநிலத்திலும் பெண்களும் ஆண்களும் அவரவர்களுடைய கலாச்சார ஆடையை பின்பற்றத்தான் செய்கிறார்கள். கோவில்களை பொறுத்தவரையில் எல்லா மாநிலத்து பூசாரிகளுமே பஞ்சகச்சத்தை அணிந்துகொண்டுதான் பூஜை செய்கிறார்கள். இந்த பஞ்சகச்சம் மற்றும் மடிசார் கட்டுவதால் என்ன பயன்? அவற்றின் சிறப்பு என்ன? மேலும் எதற்காக அவற்றை குறிப்பாக பூஜை செய்யும் சமயத்தில் கட்டுகிறார்கள் என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்..
பஞ்சகச்சம் என்றால் என்ன? சமஸ்கிருத வார்த்தைகளான பஞ்ச மற்றும் கஜம் என்பதிலிருந்து இந்த பெயர் வந்தது. அதாவது இதனுடைய பொருள் “ஐந்து கெஜம்” என்பதாகும். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தப்படும் வேஷ்டிகள் பொதுவாக நான்கு அல்லது எட்டு முழம் நீளத்தில் இருக்கும். ஆனால் பஞ்சகச்சத்தின் நீளம் ஐந்து கெஜம் ஆகும்.
இதைத் தவிர இன்னொரு அர்த்தமும் இதற்கு இருக்கிறது. அதாவது பஞ்ச என்றால் ஐந்து கச்சம் என்றால் சொருகுதல். ஐந்து முறை சொருகுதலைதான் பஞ்ச கச்சம் என்று நம் முன்னோர்கள். வலது இடுப்பில் ஒன்று, இடுது இடுப்பில் ஒன்று, பின் பக்கம் ஒன்று மற்றும் தொப்புள் பகுதியில் இரண்டு, ஆக மொத்தம் ஐந்து தரவை சொருகப்படுகிறது.
சடங்குகளைச் செய்யும்போது பலமுறை எழுந்து பிரதட்சிணம் செய்ய வேண்டியிருக்கும். இவை அனைத்திற்கும் அசைவுகளில் ஒரு எளிமை தேவைப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்குப் பஞ்சகச்சம் மிகவும் பொருத்தமான ஆடையாகும். ஒரு பிராமணரின் இறந்த உடலுக்குக் கூடப் பஞ்சகச்சம் போர்த்தப்படுகிறது.
ஏனெனில், சொர்க்கத்திற்குச் செல்லும் போதும், சொர்க்கத்தை அடைந்த பிறகும், ஒரு உண்மையான பிராமணர் தனது கடமைகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆடை அணிவிக்கப்படுகிறது.
மனிதனாக பிறந்த நம் எல்லோருக்குமே மூன்று குணங்கள் உள்ளன.
1. ரஜோ குணம் ( பேராசை, செய்யும் செயல் குழப்பம்).
2. தமோ குணம் ( இருள், அழிவு குணம், ஒழுங்கற்ற தன்மை) மற்றும்
3. சத்வ குணம் ( நன்மை, ஆக்கபூர்வமான மற்றும் இணக்கமான தன்மை).
இந்த மூன்று குணங்களுமே நம் அனைவரிடமும் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொருக்கும் தனித்தனி விகிதத்தில் இருக்கின்றன. இந்தக் குணங்களின் விகிதத்தை பொறுத்துதான் நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றம் தீர்மானிக்கப்படுகிறது.
ஆகவேதான் பூஜை நேரங்களில் பஞ்சகச்சத்தை கட்ட முன்னோர்களால் பரிந்துரைக்கப்பட்டது. பஞசகச்சத்திற்கும் நம்முடைய குணங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நிச்சயமாக இருக்கிறது.
இந்த பஞ்சகச்சம் என்பது வெறும் நீளத்தை பற்றியோ அல்லது அணியும் வித்தை பற்றியோ சார்ந்ததல்ல. மாறாக, ஒரு சடங்கைச் செய்யும்போது, அந்த நபர் தன்னுடைய ஐந்து புலன்களையும் கட்டுப்பாட்டிலும் கவனத்திலும் வைத்திருக்க உதவும் வகையில், உடலின் முக்கியத் தொடு புள்ளிகளான ஐந்து இடங்களில் இந்த வேஷ்டியை கட்டிக்கொள்கிறார்கள்.
கர்ம காரியங்கள், பூஜை மற்றும் திருமணச் சடங்குகள், சந்தியாவந்தனம் போன்றவற்றின்போது, சத்துவ குணங்களை அதிகரித்து, மற்ற இரண்டு குணங்களான ரஜோ மற்றும் தமோ குணங்களைக் குறைக்கும் நோக்கத்தில்தான் இந்த பஞ்சகச்சத்தை அணிந்து கொள்கிறார்கள்.
பஞ்சகச்சம் என்கிற இந்த ஆடை முறை, அங்க வஸ்திரத்துடன் சேர்த்து அணியும்போது, ஒரு இல்லறத்தாரிடம் அதற்கான சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. பஞ்ச கச்சம் எனும் ஆடை முறை, பிரகிருதியான உடல் கூறுகளைக் கட்டி, கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
அடுத்தபடியாக மடிசாரை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பாரம்பரியமாக, திருமணமாகிய, பிராமணப் பெண்கள் மடிசார் என்று அழைக்கப்படும் ஒன்பது கஜ புடவையை உடுத்திக் கொகிறார்கள். பெண்கள் திருமணமாவதற்கு முன்னால் இதை கட்டிக்கொள்ள மாட்டார்கள். பொதுவாக புடவைகள் ஆறு கஜ நீளம் கொண்டவை, ஆனால் மடிசார் வேறு பாணியில் உடுத்தப்படுவதால், அதை உடுத்த ஒன்பது கஜ புடவை தேவைப்படுகிறது.
இது ஐயர் மற்றும் ஐயங்கார் கலாச்சாரத்தின் மிக முக்கியமான ஒரு ஆடையாக கருதப்படுகிறது. இவற்றைப் பின்பற்றும் திருமணமான பெண்களும், அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் இந்த மடிசாரை அணிந்து கொள்கிறார்கள். நம் மாநிலத்தை தவிர ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தை சேரந்த பெண்களும் கச்சம் வைத்து கட்டிக் கொள்கிறார்கள்.
இந்த மடிசார் என்ற சொல் முன்னோர்களால் மடிதார் என்றழைக்கப்பட்டது. மடி என்பது நீளமான முந்தானையின் ஒரு பகுதியை குறிக்கிறது. இது நீளவாக்கில் இரண்டாக மடிக்கப்பட்டு பின்புறத்தில் சொருகப்படுகிறது. இது தோளிலிருந்து புடவை நழுவுவதைத் தடுக்கிறது.
மற்றொரு சொல்லாகிய தார் என்றால் வேட்டி அல்லது சேலையின் ஒரு பகுதியை முன்பக்கத்திலிருந்து கால்களுக்கு இடையில் கொண்டு வந்து, இடுப்பின் பின்புறத்தில் சொருகுவதாகும். இது வேட்டி அல்லது சேலையை ஒரு பைஜாமா போல ஆக்கி, கால்களின் தடையற்ற அசைவுக்கு உதவுகிறது. இந்தச் சொல் இப்போது 'சார்' என்று மாறி மடிசார் என்றழைக்கப்படுகிறது.
மடிசார் கட்டுவதனால், இடுப்பு நரம்புகளிலும் மற்றும் முதுகெலும்பின் பின்புறத்திலும் உள்ள நரம்புகளிலும் அழுத்தம் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, அதை அணியும் பெண்ணிற்கு பசியோ தாகமோ ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன. அக்காலத்தில் அதிகமான விரதங்கள் பின்பற்றப்பட்ட காரணத்தினால் பெண்கள் விரத நாட்களில் இந்த மடிசாரை அணிந்துகொண்டார்கள்.
இது, அவர்களின் பசியையும் தாகத்தையும் குறைக்க உதவியது. மேலும், பண்டிகை காலங்களில் விரதத்தின் நடுவில் இந்த மடிசார் புடவை கழிவு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்றும் கூறப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டுதான் இன்றளவும் திருமண சடங்குகளிலும் கர்ம காரியங்களிலும் அதாவது கிட்டதட்ட நான்கைந்து மணி நேரத்திற்கு கட்டப்படுகிறது.
இந்த மடிசாரில், குறிப்பாக முதுகில் அணியும் கச்சமானது, இடுப்புப் பகுதிக்கு ஒரு மெத்தைபோல செயல் படுவதாகவும், இது முதுகுவலி உள்ளவர்களுக்கு எலும்பியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் இடுப்புப் பட்டையைப் போன்றது என்றும் நம்பப்படுகிறது .
மேலும், மடிசார் பெண்களின் கருப்பைக்கு மெத்தை போன்ற பாதுகாப்பை அளித்து, அதிர்வுகளைத் தாங்கும் ஒரு கருவியாகவும் செயல்படுவதாகவும் கூறப்படுகின்றன. இதனால்தான் அந்த காலத்தில் கருச்சிதைவு அல்லது மலட்டுத்தன்மை போன்ற பிரச்னைகள் அரிதாகவே இருந்தன.
ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் ஆண்களும் சரி, பெண்களும் சரி, தினமும் மடிசாரையும் பஞ்ச கச்சத்தையும் உடுத்துவதென்பது முடியாத காரியமாகும். பெண்களும் இந்த காலத்தில் நன்றாக படித்து அலுவலகம் செல்கிறார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் மடிசாரை அணிந்துகொண்டு செல்ல முடியுமா? அதைப்போல ஆண்களும் பஞ்சகச்சத்தை அணிந்துகொண்டுதான் செல்லமுடியுமா? இருந்த போதிலும் சில முக்கியமான பூஜைகளுக்கும் சடங்களுக்கும் இருபாலரும் இன்றளவும் இவற்றை அணிந்துகொண்டு நம் இந்திய நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பின்பற்றத்தான் செய்கிறார்கள்.