தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஆதிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் என்ற ஊர் ஓவியத் தயாரிப்புக்கும், பொம்மைகள் தயாரிப்புக்கும் புகழ் பெற்றதாக இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஓவியங்கள், நிர்மல் ஓவியங்கள் (Nirmal Paintings) என்றும், இங்கு தயாரிக்கப்படும் மரபு வழியிலான இந்திய மர பொம்மைகள், நிர்மல் பொம்மைகள் (Nirmal Toys) என்றும் அழைக்கப்படுகின்றன.
நிர்மல் ஓவியங்கள் தெலுங்கானா மட்டுமின்றி, இந்தியாவின் பல நகரங்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள ஓவிய ஆர்வலர்களுக்கும் விருப்பமான ஓவியமாக இருந்து வருகிறது. நகாசு என அழைக்கப்படும் கைவினைஞர்களைக் கொண்ட குழுவினர், 14 ஆம் நூற்றாண்டில் இவ்வகையான ஓவியங்களை முகலாயர்கள் ஆதரவுகளோடு வரைந்து வந்தனர்.
அதன் பிறகு, 1950 ஆம் ஆண்டுகளில் சீமாட்டி ஹைதெரி என்பவர் இந்தக் கைவினைஞர்களை ஐதராபாத்து சுதேச மாநிலத்திற்கு அழைத்து வந்து, அவர்களின் வேலைப்பாடுகளை ஊக்குவித்தார். இந்த ஓவியங்களுக்குப் பயன்படுத்தும் நிறங்கள் தாதுக்கள், மூலிகைகள் போன்றவை, பல்வேறு தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகின்றன. இந்த ஓவியங்களின் கருப்பொருட்கள் அஜந்தா குகை ஓவியங்களிருந்தும், பிற முகலாயக் கலைகளிலிருந்தும் பெறப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் கருப்பு நிறப் பின்னணியில் தங்க நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று, நிர்மல் மரப் பொம்மைகள், வெப்பாலை மரத்தினைக் கொண்டு செய்யப்பெற்று, அரக்குப் பூச்சு பூசித் தயாரிக்கப்படுகின்றன. வெப்பாலை மரம் பேச்சுவழக்கில் ஆலே மரா (தந்தம் மரம்) என்று அழைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மர பொம்மைகள், நிர்மல் ஓவியத்தைப் பின் தொடர்ந்தேத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மரபு வழியிலான கைவினைக் கலையும், உலகளவில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
இப்போது உள்ளூரில் கிடைக்கும் மென்மையான மரத்திலிருந்து செதுக்கப்பட்டு டுகோ வண்ணப்பூச்சுகளால் வரையப்பட்டு வருகின்றன. தற்போது, கலைஞர்கள் இயற்கை சாயங்களிலிருந்து டுகோ வண்ணப்பூச்சுகளுக்கு மாறி விட்டனர். டுகோ வண்ணங்களைப் பயன்படுத்துவதால், நிர்மல் ஓவியங்கள் ஒரு பொதுவான ஒளியூட்டத்தைப் பெறுகின்றன. இதனால், இந்த பொம்மைகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
தெலங்காணாவில் உள்ள நிர்மல் பகுதி, ஒரு காலத்தில் பீரங்கிகள் மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்தி மையமாக இருந்தது. ஐதராபாத் நிசாமின் இராணுவத்திற்குக் கனரகப் பீரங்கிகளை வழங்கிய அதே வேளையில், கைவினைஞர்களும் கலைஞர்களும் நிர்மல் கலை என்ற பெயரில் நேர்த்தியான மர பொம்மைகளையும் ஓவியங்களையும் கொண்டு வந்தனர்.
நிசாம் ஆட்சி மறைந்த உடனேயே இதுவும் மூடப்பட்டது. தற்போது 4 இடங்களில் மட்டுமே நகாசு கைவினைஞர்களால் நேர்த்தியான பொம்மைகள் மற்றும் ஓவியங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் தோற்றம் தொடர்பான பதிவுகள் எதுவும் இப்போது இல்லை என்றாலும், நகாசு குடும்பங்கள் 17 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானிலிருந்து நீமா நாயக் (அல்லது வேறொரு பதிப்பின்படி நிம்மா நாயுடு) என்பவரால் இங்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.