கானகத்தின் குரலை மீட்டும் வனதேவதை: ஒலேனா ஊத்தாயின் ஷாமனிக் இசைப் பயணம்!

உறைபனி சைபீரியாவில் பிறந்து உலக அரங்கைக் கலக்கிய மோர்சிங் மிரட்டல்.
மோர்சிங் இசை - ஒலேனா ஊத்தாய்
மோர்சிங் இசை - ஒலேனா ஊத்தாய்
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

2018-ஆம் ஆண்டில் ‘பிரிட்டன்ஸ் காட் டேலண்ட் (Britain's Got Talent)’ நிகழ்ச்சியை வழக்கம்போலப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், முற்றிலும் மாறுபட்ட, நடுவர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் அனைவரையுமே பெருவியப்பில் ஆழ்த்திய அந்த இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது.

சைபீரியாவின் வடகிழக்குப் பகுதியான யகூட்டியாவைச் (Yakutia) சேர்ந்த ஒலேனா ஊத்தாய் (Olena Uutai) மேடையில் தோன்றிய விதமே கண்ணையும் கருத்தையும் கவர்வதாக இருந்தது. பிரத்யேகமான பழங்குடிச் சிறப்பாடையில் கழுகின் சிறகுகள் கொண்ட வனதேவதை போலக் காட்சியளித்தார். நடுவர்களில் ஒருவரான சைமன், “நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டதும், “எனது கலாச்சாரத்தை உலகத்துக்குப் பகிர்வதற்காக” என்றார்.

அவரிடம் கைக்குள் அடங்கக்கூடிய சிறு இசைக் கருவியான கோமஸ் (Khomus) இருந்தது. பொது வழக்கில் இது Yakutian jaw harp என்றும் vargan என்றும் அழைக்கப்படக்கூடியது. இது யாகூட்டியன் கலாச்சாரம் மற்றும் ஷாமனிக் இசையின் மையச் சின்னமாக விளங்கும் பாரம்பரிய இசைக்கருவியாகும். இந்தியாவில் மோர்சிங் (Morsing) என அறியப்படும் இசைக் கருவிதான் இது. ஒலியில் இரண்டுக்கும் இடையே சற்று வேறுபாடு இருக்கும் என்பதுதான் வித்தியாசம்.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்திய இசையில் புழக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் மோர்சிங், வெவ்வேறு மாநிலங்களில் வேவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழில் இதற்கு ‘நாமுழவு’ என்று பெயராம். கருப்பு - வெள்ளைக் கால நினைவுகளில், மோர்சிங் என்றதுமே நினைவுக்கு வருவது ‘மருதமலை மாமணியே’ பாடல். அதில் ‘மணமிகு சந்தனம்’, ‘அழகிய குங்குமம்’ ஆகிய சொற்றொடர்கள் பாடப்பட்டதும் ‘டொய்ன்டொட டொய்ன்டொட ‘ என்ற உலோகச் சத்தம் ஒலிக்குமே,... அது மோர்சிங்தான். ‘உயிரே’ படத்தின் ‘நெஞ்சினிலே’ பாடல் துவக்கத்திலும் மோர்சிங் இசை இடம்பெற்றிருக்கும்.

BGT-யில் பங்கேற்க ஒவ்வொருவரும் தங்களின் அசாத்தியமான திறமைகளைக் காட்டுவார்கள் என்பது தெரிந்ததுதான். மோர்சிங்கை வைத்துக்கொண்டு ஒலேனா என்ன செய்யப்போகிறார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எதிர்பார்த்தது இசையில் ஏதாவது வித்தகம் என்று மட்டும்தான். ஆனால் நடந்தது வேறு.

ஒலேனா Throat Singing எனப்படுகிற தொண்டைப் பாடல் முறையில் வனப்பறவையின் ஆழ்ந்த குரல் எழுப்பலோடு தன் இசையைத் தொடங்கினார். பிறகு மோர்சிங் / கோமஸ் இசைத்தபடி, தன் தொண்டை ஒலிகளால் காற்றையும், குதிரையையும் கண் முன் கொண்டுவந்தார். இசையின் வேகத்துக்கும் தாளத்துக்கும் ஏற்ப உணர்ச்சி பொங்கியது.

நடுவர்களும் பார்வையாளர்களும் நம்பவியலாத வியப்படைந்ததோடு, அந்த இசையில் அதி உற்சாகமாகி, அதற்கேற்ப அபிநயங்கள் செய்யவும், எழுந்து நடனமாடவும் செய்தனர். இரண்டு நிமிடத்தில் அங்கே ஒரு இசை மாயாஜாலம் நிகழ்ந்தது. கண் முன்பு கானகம் விரிந்து, கானுயிரிகள் இயங்கின; அரங்கிலும் மேடையிலும் மனிதர்கள் மெய்மறந்து ஆடிக் கொண்டிருந்தனர்.

மோர்சிங் இசை - ஒலேனா ஊத்தாய்
மோர்சிங் இசை - ஒலேனா ஊத்தாய்

ஒலேனாவின் இசை, எனக்குள் இருக்கும் கிராம வாசியையும் காட்டுமிராண்டியையும் மிக ஈர்த்தன. அதனால் யூ ட்யூபில் அவரது இசையைத்தேடி, அப்போது கிடைத்த சிலவற்றைப் பார்த்து லயித்தேன். அவரது அடிப்படை இசைக்கருவிகள் கோமஸ் மற்றும் அவரது தொண்டைதான்.

சில சமயம் அதோடு சைபீரிய ஷாமன் சடங்குப் பறையான டியுங்கூர் (diungiür) இணைந்து கொள்ளும். இவற்றின் மூலமாக அவர் கானகத்தின் விலங்குகள், பறவைகள், காற்று ஆகியவற்றின் ஒலிகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார். குதிரைகளின் கனைப்பு மற்றும் ஓட்டம், ஓநாய்களின் ஊளை ஆகியவை அதில் முக்கிய அங்கம் வகிக்கும்.

அவர் செய்வது கானுயிரிகளின் மிமிக்ரி அல்ல; அவற்றின் இருத்தலியல் வெளிப்பாடு. அந்த ஷாமனிக் இசைக்கருவிகளும் அவரது தொண்டையும் சேர்ந்து அதை நமக்குள் கடத்துகின்றன. நாமும் அப்போது இயற்கையோடு இணைகிறோம்; கானகத்தின் அங்கமாக ஆகிறோம்.

ஒலேனாவின் இசை அறிமுகத்துக்குப் பிறகு அவரைப் பற்றியும் அவரின் இசை மரபு பற்றியும் இணையத்தில் தேடி விபரங்கள் அறிந்துகொண்டேன். அப்போதுதான் அவரது இசை ஷாமன் மரபு சார்ந்தது என்று தெரியவந்தது. அதில் எனக்கு ஆச்சரியமும், நெருக்க உணர்வும் ஏற்பட்டது. காரணம் ஷாமன், தற்காலத் தாந்த்ரீகவியலில் இணைத்துப் பேசப்படுகிற ஒரு மரபு என்பதால் அது குறித்து ஏற்கனவே எனக்குக் கொஞ்சம் தெரியும்.

ஷாமனிஸம் (Shamanism) என்பது மனித குலத்தின் மிகத் தொன்மையான இயற்கை வழிபாட்டு மற்றும் ஆன்மிக வாழ்வியல் முறையாகும். கண்களுக்குத் தெரிகிற பௌதீக உலகிற்கும், கண்களுக்குத் தெரியாத ஆன்மாக்கள் மற்றும் இயற்கை சக்திகளின் உலகிற்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஒரு ஆன்மிகத் தொடர்பு முறையே ஷாமனிசம்.

இது ஒரு நாட்டிற்கு மட்டும் உரியதல்ல; உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தொல்குடி மக்களிடம் வேரூன்றியது. எனினும் 'ஷாமன்' என்ற சொல் சைபீரியாவின் துங்குசிக் (Tungusic / Evenki) பழங்குடி மொழியிலிருந்து உருவானது. இதன் பொருள் ‘அறிந்தவர்’ என்பதாகும். அறிவு (Knowledge), அறிதல் (Knowing) ஆகிய சொற்கள் மெய்ஞான (Wisdom) மார்க்கங்களில் மெய்ஞானம் என்பதையே குறிக்கக் கூடியவை. ஷாமன் என்பதும் அதே வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டிற்கு அல்ட்ரா-மாடர்ன் லுக் தரும் 5 பெயிண்டிங் டெக்னிக்!
மோர்சிங் இசை - ஒலேனா ஊத்தாய்

சைபீரியா, மங்கோலியா, மத்திய ஆசியா, வட மற்றும் தென் அமெரிக்காவின் பூர்வகுடிகள் (Native Americans & Amazon tribes), கொரியா (Muism), ஜப்பான் (ஷின்டோ மரபில் காணப்படும் ஆன்மிக நடைமுறைகள்) மற்றும் ஆப்பிரிக்காவின் பழங்குடி சமூகங்களில் வெவ்வேறு பெயர்களில் இதே மரபு இன்றளவும் உயிர்ப்போடு உள்ளது.

ஷாமனிஸம் தனிப் புனித நூல்களோ, கோயில்களோ, மத நிறுவனங்களோ கொண்ட மதம் அல்ல; அது ஆன்மிக நடைமுறை (Spiritual Practice). ஷாமனிசத்தின் அடிப்படை நம்பிக்கை 'ஆன்மவாதம்' (Animism) ஆகும்.

அதாவது, மனிதர்களுக்கு மட்டுமல்ல - மலைகள், நதிகள், மரங்கள், காற்று, விலங்குகள் மற்றும் கற்கள் என இயற்கையின் ஒவ்வொரு துகளிலும் உயிரும் ஆன்மாவும் உண்டு என்பது இதன் மையத் தத்துவம். இயற்கையோடு முரண்படாமல், அதன் சக்திகளோடு இணக்கமாக வாழ்வதே இதன் நோக்கம். அதைத்தான் ஒலேனா ஊத்தாயின் இசை பிரதிபலிக்கிறது.

ஒலேனா ஊத்தாய் நிகழ்த்தும் இசை வடிவம், பிரத்யேகமாக யகூட்டியா (Sakha Republic / Yakutia) எனப்படும் வடகிழக்குச் சைபீரிய மண்டலத்திற்கு உரியதாகும். இப்பகுதியின் உறைபனி நிலப்பரப்பில் வாழும் துருக்கிய-மங்கோலியப் பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை. இயற்கையோடு மனித ஆன்மாவை நேரடியாக உரையாட வைக்கும் 'ஷாமனிக்' சடங்கு முறை வழிபாட்டு இசை.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா! பல கோடிகளுக்கு விற்பனையான உலகின் 5 சிறந்த ஓவியங்கள்!
மோர்சிங் இசை - ஒலேனா ஊத்தாய்

ஒலேனாவின் இசையில் குதிரை மற்றும் ஓநாயின் ஒலிகள் முதன்மையாக இடம்பெறுவது அவர்களின் ஆதிப் பண்பாட்டு நம்பிக்கையோடு தொடர்புடையது.

சைபீரியப் பழங்குடியினருக்கு ஓநாய் என்பது காட்டின் காவலாளி, அவர்களின் முன்னோர்களின் ஆன்மா மற்றும் சுதந்திரத்தின் குறியீடு. ஓநாயின் ஊளையிடும் ஒலியைத் தன் தொண்டை வழியே எழுப்புவது காட்டின் ஆன்மாவைத் தன் உடலுக்குள் ஆவாஹனம் செய்வதற்குச் சமமாகும்.

2018-ஆம் ஆண்டின் பிரிட்டன்ஸ் காட் டேலண்ட் போட்டியின் 12-வது பருவத்தில் பங்கேற்ற ஒலேனா ஊத்தாய், அரையிறுதிப் போட்டி (Semi-Final) வரை முன்னேறி உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றார். முதல் பரிசை வெல்லாவிட்டாலும், அந்த மேடை அவரை ஒரு சர்வதேசப் பண்பாட்டுத் தூதராக உயர்த்தியது.

யாகூட் மரபு மற்றும் துருக்கியத் தொண்டைப் பாடலுக்கான உலகளாவிய கலாச்சாரத் தூதராக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒலேனா, பல்வேறு சர்வதேச உலகப் பண்பாட்டு இசை விழாக்களில் தொடர்ந்து நேரடி இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். தொடர்ந்து புதிய இசைத் தொகுப்புகளையும் (Single Tracks) ஷாமனிக் தியான இசைக் கச்சேரிகளையும் நடத்துகிறார்.

பழமையான ஷாமனிக் அதிர்வுகளை நவீன எலக்ட்ரானிக் இசை மற்றும் சிம்பொனி இசைக்குழுக்களோடு இணைக்கும் புதிய பரிசோதனை முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஒலேனா ஊத்தாயின் இசை வெறும் இசையல்ல; அது நகரமயமாக்கலில் இயற்கையை மறந்து வாழும் நவீன மனிதனை, காட்டின் ஆதி அமைதிக்கும் அதன் உக்கிரமான ஆன்மாவிற்கும் மீண்டும் அழைத்துச் செல்லும் ஒரு மகத்தான சைபீரியப் பண்பாட்டுச் சுவாசம்.

இதையும் படியுங்கள்:
உலகமே ஒரு நாடகம்: பாரம்பரிய தமிழ் நாடகங்களின் சுவாரஸ்யமான பக்கங்கள்.
மோர்சிங் இசை - ஒலேனா ஊத்தாய்