உலகமே ஒரு நாடகம்: பாரம்பரிய தமிழ் நாடகங்களின் சுவாரஸ்யமான பக்கங்கள்.

தமிழ் நாடகங்களின் பரிணாம வளர்ச்சி, கிராமத்து திருவிழா நாடகங்கள், மற்றும் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் தாக்கம் குறித்த முழுமையான பார்வை.
நாடகம் | Street play
நாடகம் | Street playImage credit: Gemini AI
என்.எஸ்.வி.குருமூர்த்தி

ஐம்பது வருடங்களுக்கும் மேலான எழுத்துலக அனுபவம். 1970 முதல் சிறு துணுக்குகள் எழுதி, கல்கி, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி கதிர், காமதேனு, இந்து தமிழ் திசை இவற்றிலும், சிறுவர்மணி இதழில் கடந்த 8 வருடங்களாக சுமார் 90 நாடகங்கள் அரங்கம் என்ற பகுதியிலும் பிரசுரமாகி உள்ளன. கல்கி ஆன்லைனில் இது வரை சுமார் 45 கதைகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஒரு cartoon படத்துக்கு வசனம் எழுதும் போட்டியில் (இடம் சோழா ஹோட்டல் function - Overseas SANMAR...குழுமம்) ரைட்டர் சுஜாதா அவர்கள் கையால் இரண்டாம் பரிசு ஒரு விழாவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

Updated on: 
Kalki Strip
Kalki Strip

வாழ்வே ஒரு நாடகம், நாமே நடிகர்கள்! வீடுகளில் நடக்கும் தம்பதியினரின் சின்னச் சின்னச் சண்டைகள் முதல், கிராமத்துத் திருவிழாக் கூத்துக்கள், மேடை நாடகங்களின் பொற்காலம், ஆர்.எஸ்.மனோகரின் பிரம்மாண்டங்கள் மற்றும் பள்ளி ஆண்டு விழா அரங்கேற்றங்களின் கலகலப்பான சுவாரஸ்யங்கள் வரை... நாடகக் கலையின் வேர்களை வியக்க வைக்கும் தகவல்களுடன் இந்தப் பதிவு அலசுகிறது. மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த இந்தக் கலையின் சுவாரஸ்யமான பக்கங்களை முழுமையாக அறிய தொடர்ந்து படியுங்கள்!

நாடகமே உலகம்... நாம் அனைவரும் நடிகர்களே... சொன்னவர் ஷேக்ஸ்பியர்.

புருஷன் பெண்டாட்டி சண்டை. - "இந்த டிராமா போடற வேலை எல்லாம் என்னிடம் வச்சுக்காதே. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்பான் புருஷன். மனைவியைச் சமாளிக்க முடியாத அந்த அப்பாவி, உண்மையில் என்ன செய்வது என்று தெரியாமல்தான் அப்படிச் சொல்றான். சண்டைக்குக் காரணம் என்ன என்று கேட்பது புரிகிறது. ஒன்றும் கிடையாது. ஒரு சண்டை போட வேண்டும் என அம்மணி தீர்மானித்துவிட்டால் போச்சு... ஆரம்பம் ஆகிவிடும்.

"கமலா வாயேன் என்கூட வாக்கிங்" என்பார் குப்புசாமி.

"நான் என்ன குண்டாவா இருக்கேன்... ஏன் படுத்துறீங்க?"

"இல்லே. இந்த வயசில் நடை பயிற்சி ஆரோக்கியத்திற்கு முக்கியமாம். அன்னிக்கு டாக்டர் சொல்லலே..?"

"அப்போ நான் சீக்காளி...வியாதிக்காரின்னு முடிவே கட்டிட்டீங்க..."

அப்புறம் பேச வாயைத் திறப்பாரா...

"சரி கமலா... சண்டை போடாதே..."

"அப்போ சண்டைக்காரி நான்.. என்னைக் கட்டிக்கிட்டதால் வீட்டில் சண்டைதான் தினமும்... நான் போன பிறகுதான் என் அருமை புரியும்."

சீலிங்கைப் பார்த்தபடி மவுனமானார். மவுனம் கலக நாஸ்தி.

இந்த டிராமா பல வீடுகளில்... பல முறை அரங்கேறும். டிசைன் அப்படி. கடவுள் எழுதிய ஒரே ஒரு கதை... மற்றும் வசனம். டி என் ஏ, மற்றும் ஜீன் வழி வந்த விஷயம். மாற்று வழி கிடையாது. சரணாகதியே ஒரே கதி.

நாடகம் நடிப்பது கடவுளுக்கு மிகவும் இஷ்டமாம். "மகா கணபதிம் மனஸா ஸ்மராமி.." சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனை.. நாட்டை ராகம். அதில் பிள்ளையாருக்குப் பிடிச்சதாம். ." மகா காவ்ய நாடகாதி ப்ரியம்...மூஷிக வாகன மோதகப்ரியம்" மோதகம், நாடகம் காவியங்கள்... ரொம்பப் பிடிக்குமாம் கணபதிக்கு.

காவியங்கள் பல... இயல், இசை, நாடகமே முத்தமிழ். பாலும் தெளி தேனும் பாடலில், 'நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா' என அவ்வை வேண்டுவார். ஆகவே முத்தமிழும் கை வசம் இருப்பது வினாயகரிடமே. அக்காலத்தில் பத்திரிக்கைகளில் எழுதினார்கள். ஆசிரியர் எடிட் செய்து போடுவார். டிஜிட்டல் காலத்தில் இணையத்தில் எழுதுகிறார்கள். கண்ட்ரோல் இல்லை. சென்ஸார் இல்லை. அதனால்தானோ என்னவோ... எழுத்தாளர்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு இணையாக இருப்பதற்குக் காரணம்.

நாடகம் | Drama
நாடகம் | DramaImage credit: Gemini AI

அந்தக் காலத்தில் நாடகங்கள் நிறைய நடக்கும். சபாக்கள் சென்னையில் பல. நாடகக் குழுக்கள் பல இருந்தன. பலரும் ட்ரூப் வைத்திருந்தார்கள். சினிமாவுக்கு சமமாக நாடகங்களும் நிறைய நடந்தன. சினிமா என்பதில் கதை காட்சிகளாய் காட்டப்படும். நாடகத்தில் வசனம் பாடல் மூலம் நடிக்கப்படும்.

அக்காலத்தில் சிவாஜி, எம் ஜி ஆர், எஸ் எஸ் ஆர், எம் ஆர் ராதா, சினிமா நடிகர்கள் பலருக்கும் மேடை நாடகமே முதல் படி. டி கே எஸ் பிரதர்ஸ், சக்தி நாடக சபா, மதுரை பாய்ஸ் கம்பெனி இப்படியாக பல கம்பெனிகள் ஊர் ஊராகச் சென்று நடித்தார்கள். வெற்றி பெற்ற நாடகங்களே பின்னர் சினிமாவாகவும் மாறின. ‘தூக்கு தூக்கி’, ‘மனோகரா’, ‘பராசக்தி’, ‘கட்டபொம்மன்’, ‘ஔவையார்’, ‘தங்கப் பதக்கம்...’ இப்படி பல, முதலில் நாடகமாய் நடிக்கப்பட்டவையே. சங்கராதாஸ் ஸ்வாமிகள் எழுதிய பல நாடகங்கள் நடிக்கப்பட்டன. அவரே மேடை நாடகத்தின் மூல குரு.

கிராமங்களில் கோடை காலத்தில் வயல் வெளியில் மேடை அமைத்து நாடகம் நடக்கும். கோவில் திருவிழாக்களில் அது ஒரு முக்கிய விஷயம். கீற்றுக் கொட்டகை வேய்ந்து மேடையின் பின் புறம் மேக்கப் அறை இருக்கும். சுவர் கிடையாது. கீற்று அடைப்புதான். நடிகர்கள் ஒப்பனை செய்வதை ஒரு கூட்டம் விரலால் கீற்றை விலக்கி வேடிக்கை பார்க்கும். ஒருத்தர் எல்லோரையும் விரட்டுவார்.

நாடகத்தில் பிரமாண்டம் காட்டியவர் ஆர் எஸ் மனோகர். நாடகக் காவலர். ‘இலங்கேஸ்வரன்’, ‘துரோணர்’ நாடகங்களில் சீன் செட்டிங் வியக்க வைக்கும். நாடகங்களில் ஒளி - ஒலி அமைப்பு மிக முக்கியம். வில்லன் கொக்கரித்து சூழ்ச்சி டயலாக் பேச அவன் முகத்தில் சிவப்பு ஒளியைப் பாய்ச்சுவார் மைக்செட் காரர். ஒரு வட்டவடிவ தட்டில் பல ஓட்டைகளில் வண்ண சவ்வுத்தாள் ஒட்டி சுற்றும்போது வண்ண ஒளி மேடை நோக்கி பாயும். நடனக் காட்சிகளில் ஒரு சுற்று சுற்றி விட்டால் பல நிறங்கள் மேடையில் சுத்தும்.

இதையும் படியுங்கள்:
ஹைஜாக்கர்களை கதிகலங்கச் செய்த இந்தியத் தியாகிகள்!
நாடகம் | Street play

டெக்னாலஜி. முழு நிலவைக் காட்ட ஒரு போகஸ் விளக்கைத் திரையில் குவிக்க வட்ட ஒளி நிலவாய் மாறும். காடு, நாடு, ராஜ தர்பார் காட்ட பின்ணணி படுதாக்கள் சுருட்டவும், விரிக்கவும் கயிறு இழுக்க காட்சிகள் மாறும்.

மேடையில் எம் ஆர் ராதா மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து பிரேக் அடிப்பார் அக்காலத்தில். டி ஆர் மகாலிங்கம் வள்ளித் திருமணம், பவளக் கொடி நடிப்பார்.

நாடகத்தில் பாடி நடித்தாலும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாடகம் முடிந்து தனியே சில பாடல்களைப் பாடி மகிழ்விப்பார்... ஏழு கட்டை குரலில் உச்ச ஸ்தாயியில்... கேட்க மெய் சிலிர்க்கும்.

கதாயுதம், வில், அம்பு, கிரீடங்கள், ஜிகினா வைத்த உடைகள் பெட்டி பெட்டியாய் பின்புறம் இருக்கும். இதற்கென்றே சீன், டிரெஸ் கம்பெனிகள் வாடகைக்கு அவற்றைத் தந்தார்கள்.

தொலைகாட்சி நாடகங்கள், தொடர்கதை படிப்பதற்கு மாற்று. சீரியல் எடுக்க பெரிசாகக் கதை என ஒன்று தேவையில்லை. கணவன், மனைவி, நாத்தனார், மாமியார், கொழுந்தன், ஓரகத்தி பிரச்னை.. அது போதும்... கோடிக்கணக்கில் நாடகம் போடலாம்.

மன்னார்குடி அருகில் ஒரு ஊரில் வேலை பார்த்தபோது, பியூன் தங்கராசு ஒரு போட்டோ காட்டினான். அதில் உடைவாள் ஏந்தி ராஜ குமாரன். பார்க்க பொன்னியின் செல்வன் வைத்தியர் மகன் பினாக பாணி. கவனித்துப் பார்த்தால் அது தங்க ராசு. "அட நீயாப்பா. பலே."

அவன் சொன்ன போட்டோ வரலாறு. அவங்க கிராமத்து கோவில் திருவிழாவில் ஊர்க்காரர்களே நடித்து நாடகம் போட்டார்கள். ஹீரோ தங்கராசு.

ராஜ குமாரன் ராஜபார்ட். இளவரசியைக் காதலித்து தோல்வி... இப்படியாக அம்பிகாபதி படக் கதையைச் சுட்டு ஒரு கதை.

வசனம் எழுதியது தமிழாசிரியர் ஒருத்தர். ஹீரோயின் ராஜகுமாரி வேஷத்துக்கு தஞ்சையில் ஒரு நாடக நடிகையை முன்னூறு ரூ சம்பளம் பேசி அழைத்து வந்தார்கள். நடிகை "ஒத்திகை எல்லாம் வேண்டாம். ஒரு டான்ஸ், கொஞ்சம் வசனம் தானே... பிராம்ப்ட் கேட்டு பேசிடறேன்."

நாடகத்தின் ஆரம்பத்தில் ஒரு டான்ஸ் காட்சி. ரெகார்டில் பாடல் ஒலிக்க ஆடினார்கள் சுற்றி சுற்றி மேடையில். நல்ல கூட்டம் நாடகம் பார்க்க... டான்ஸ் நடுவில் தங்கராசு ஹீரோயினை அலேக்காக தூக்கி சுற்றி தரை இறக்க வேண்டும் என்பதாகப் பேச்சு. அதன்படி மியூசிக் ஒலிக்க தங்கராசு நடிகையைத் தூக்க எத்தனித்தான். நடிகை கொஞ்சம் பூசின உடல்வாகு. வெயிட்... தூக்கமுடியவில்லை. ஒத்திகையில் ஒரு சிறுவனை தூக்கி சுற்றி பழகி இருந்தான். இப்போ நடக்கவில்லை. ஆடியன்ஸ் ஆகிய ஊர்க்காரர்கள், "தங்கராசு தூக்கு தூக்கு" என விசில் அடித்து முழங்க... ம் ஹூம்.. முடியலே. விஷயத்தைப் புரிந்துகொண்ட நடிகை தங்கராசுவைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கினார்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் சிறந்ததாகக் கருதப்படுவது 1600ஆம் ஆண்டு வாக்கில் எழுதிய "ஹேம்லட்" ஆகும். சோக முடிவைக் கொண்ட அது.

இதையும் படியுங்கள்:
நாட்டின் வளர்ச்சிக்கு நாமே தடையா? சிந்திக்க வைக்கும் உண்மைகள்!
நாடகம் | Street play

ஆசிரியரால் அவர் எழுதியவற்றில் மிக நீளமாக எழுதப்பட்ட ஒன்று என சொல்கிறார்கள். குடும்ப துரோகம் நாடகத்தின் அடிப்படை என்பர்.... துரியோதனன் மேட்டர்தான். "இருப்பதா...போவதா.. இதுதான் என் கேள்வி இப்போது". (To be or Not to be...) எனும் ஹீரோ பேசும் வசனம் மிகப் பிரசித்தமான ஒன்று. பேய் ஒன்றும் கதையில் வரும். ஹேம்லட் மனித மன நிலைகளின் கோளாறுகளை அலசி துவைத்து காயப்போட்டு, அயர்ன் செய்யும் நாடகம்.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் ஹாம்லெட்டை 1906 ல் அமலாதித்யன் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். மனோகரா அதன் தழுவல் எனச் சொல்வர் சிலர். ஒரிஜினல் ஹேம்லட்டே, 1200 வருஷ வாக்கில் நார்ஸ் எனும் லத்தீன் புராணத்தின் தழுவல் என்பார்கள்.

"பாட்டி வடை சுட்ட கதை", யைத் தவிர அனைத்துமே எதிலோ இருந்து சுடப்பட்டவையே. ராமாயாணத்தை நவீன கால கதையாக எடுதார் இயக்குனர் மணி ரத்னம்.."ராவணன்".

குழந்தைகள் பள்ளி ஆண்டு் விழாவில் நாடகம் நடிப்பார்கள். டான்ஸ் ஆடுவார்கள். பல விழாக்களில் ஆங்கில நாடகம் ஒன்று வைப்பர். சீமான் சீமாட்டிகள் வேடத்தில் குழந்தைகள் ஆங்கிலம் பேசி, நடப்பார்கள், நடிப்பார்கள்.

என்ன கதை, என்ன டயலாக் யாருக்கும் புரியாது. அமைத்த இங்கிலீஷ் டீச்சர் உட்பட. எல் கேஜி பசங்கள் ஆட, கிளாஸ் மிஸ் ஓரமாக மறைவில் ஆடி ஸ்டெப் போட்டுக் காட்டுவார். அதைப் பார்த்துக் குழந்தைகள் ஸ்டெப் கொஞ்சம் லேட்டாகப் போடும். அது ஒரு தமாஷ். ஒரு பள்ளியில் பிரகலாதன் நாடகம். இரண்ய கசிபுவைக் கொல்ல தூண் பிளந்து நரசிம்மர் வர குழந்தை பிரகலாதன் வேண்டினான். கொடூரமாய் சிங்க முகத்துடன் விஷ்ணு டம் டம் என முரசம் ஒலிக்க தோன்ற எல் கே ஜி குழந்தை பிரகலாதன், பயந்து அலறி மிஸ்ஸிடம் ஓடி விட்டான். அப்புறம் மேடைக்கு வரவே இல்லை!

logo
Kalki Online
kalkionline.com