மரத்தால் செய்யப்பட்ட மர பொம்மைகள் கொண்ட தொகுப்பை மத்ரியோஷ்கா பொம்மை (Matryoshka Doll) என்கின்றனர். இதற்கு (Russia) ரசியக் கூடு பொம்மை, ரசியப் பொம்மை என்று வேறு சில பெயர்களும் உண்டு.
இந்தப் பொம்மை ஒன்றினுள் ஒன்று வைப்பது போன்று, சிறியது அதை விடச் சிறியது என்ற அளவோடு இருக்கும். ஒரு தொகுப்பு மத்ரியோஷ்கா பொம்மையைத் திறந்தால், இன்னொரு பொம்மை. அந்தப் பொம்மையைத் திறந்தால் இன்னொரு குட்டி பொம்மை என ஆறு பொம்மைகளைத் தன் வயிற்றுக்குள் வைத்திருக்கும் ஏழாவது பெரிய பொம்மையே மத்ரியோஷ்கா எனப்படுகிறது. மத்ரியோஷ்கா என்றால். அன்னை என்று பொருள் வரும் லத்தீன் சொல்லான மேட்ரனிலிருந்து திரிந்து இந்தப் பெயர் வந்துள்ளது.
ரசியாவின் நாட்டுப்பற கைவினைஞர்களான வசீலிவிச் பெட்ரோவிச் ஜ்வெஸ்டோக்கின், சவ்வ அய்வனோவிச் மமோன்தவ் என்ற இருவரும் சேர்ந்து 1890 ஆம் ஆண்டில் வடிவமைத்த இந்தப் பொம்மைத் தொகுப்பில், குண்டான இளம் கிராமத்து ரசியப் பெண்ணின் சாயலில் முதல் பொம்மையை உருவாக்கினார்கள். பின்னர் வெளி பொம்மையான மத்ரியோஷ்காவுக்குப் பாரம்பரிய ரசிய உடையான சராஃபனை அணிந்தது போல வடிவமைத்து அழகூட்டினர். அம்மாவே குடும்பத் தலைவராக இருந்த ரசியக் குடும்ப முறையைக் குறிப்பதாக பெரிய பொம்மை அமைந்துள்ளது. அதற்குள் பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் சிறிய மரப் பொம்மைகளாக உள்ளன.
1900 ஆம் ஆண்டில் பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மத்ரியோஷ்கா பொம்மைகள், உலகமெங்கும் ரசிகர்களைப் பெற்றது. வெவ்வேறு நாடுகள், கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் தங்களைக் கவர்ந்த கதைகளின் தாக்கத்தில் மத்ரியோஷ்கா பொம்மைகளை உருவாக்க ஆரம்பித்தனர். தற்போது மத்ரியோஷ்கா பொம்மைகளாக விசித்திரக் கதைப் பாத்திரங்களில் இருந்து சோவியத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் உருவத்தில் கூடக் கிடைக்கின்றன.
மத்ரியோஷ்கா பொம்மையை வாங்குவதற்காக ரசியா போகமுடியுமா? என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கும் கேட்கிறது. இணைய வழி (Online) விற்பனையகங்களில் இப்பொம்மைகள் கிடைக்கின்றன. மத்ரியோஷ்கா பொம்மை வாங்கி வையுங்களேன்... வரப்போகிற நவராத்திரி கொலுவுக்கு உதவியாக இருக்கும்.