
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்று கோயம்பேடு. பரபரப்பு நிறைந்த கோயம்பேட்டில் அமைதி நிறைந்த இப்படி ஒரு கோவில் அமைந்திருப்பது நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் வரலாறும், கோயம்பேடு என்ற பெயர் வரக் காரணமும் தொடர்புடையவை. என்ன தொடர்பு என்று பார்க்கலாம் வாருங்கள்.
பண்டைக்காலத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமம் இங்கே இருந்தது. காட்டில் விடப்பட்ட சீதாதேவியை வால்மீகி முனிவர் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று நல்லவிதமாக கவனித்து வருகிறார். லவ குசனைப் பெற்றெடுக்கிறார் சீதாதேவி. சகல கலைகளையும் கற்று லவகுசன் அங்கே வளர்கிறார்கள்.
ராமபிரான் அஸ்வமேத யாகம் செய்யும்போது குதிரையை (அஸ்வம்) உலகைச் சுற்றிவர அனுப்புகிறார். அந்தக் குதிரை வால்மீகி ஆசிரமம் வழியாக வரும்போது லவகுசன் அதைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.
கோ - அரசன்
அயம் - குதிரை
பேடு – கட்டுதல்
அரசனின் குதிரையைக் கட்டிப்போட்ட இடம் 'கோயம்பேடு' என்றாயிற்று.
குதிரையைக் கட்டிப்போட்டவர்களுடன் போர்புரிய வருகிறார் ராமபிரான். வந்திருப்பவர் தங்களின் தந்தை என்பதை அறியாமல் சண்டையிடுகிறார்கள் லவனும் குசனும். சூழ்நிலையைக் கண்டு பதறிய முனிவர், உண்மையை விளக்கி போரை நிறுத்துகிறார்.
தந்தையை எதிர்த்துப் போர்புரிந்த லவ குசன் மிகவும் வருந்தினார்கள். அந்தப் பாவத்தைப் போக்க முனிவரிடம் பரிகாரம் கேட்டனர். “சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் பாவம் தீரும்,” என்று வால்மீகி முனிவர் அறிவுரை சொல்கிறார்.
அவ்வாறே இருவரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சிறுவர்களாகிய லவ குசன் பிரதிஷ்டை செய்த லிங்கம் குறுகி, சிறியதாகக் காணப்பட்டதால் குறுங்காலீஸ்வரர் என்று அழைக்கப்படலானார். குசலவன் பூஜை செய்ததால் 'குசலவபுரீஸ்வரர்' என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு.
அம்பிகை தர்ம சம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். அம்பிகை இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சியளிக்கிறார். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு விரைந்து அருள் வழங்கவே அன்னை இவ்வாறு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
புராணகால ஸ்தல வரலாறு இருப்பதுபோல், அதற்குப்பின் வந்த தல வரலாறும் உள்ளது. அதையும் தெரிந்து கொள்வோம்.
சோழ மன்னன் ஒருவன் இந்த வழியே தேரில் சென்றபோது, பூமிக்கு அடியில் புதையுண்டு இருந்த லிங்கத்தின் மேல் பகுதியில் தேர்ச் சக்கரம் ஏறி இறங்கியது. அந்த இடத்தில் இருந்து ரத்தம் வெளிப்பட்டதும், மன்னன் பதறி அவ்விடத்தைத் தோண்டச் சொல்கிறான்.
அங்கே பாதி உடைந்த நிலையில் சிவலிங்கம் கிடைக்கிறது. அதை அப்படியே பிரதிஷ்டை செய்கிறான். லிங்கம் உடைந்து மிகவும் குறுகியவராக இருப்பதால் குறுங்காலீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது என்பதும் ஒரு வரலாறு.
கோவிலின் முன் உள்ள பெரிய பதினாறு கால் மண்டபத்தில் உள்ள தூண்களில் ராமாயணக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் சரபேஸ்வரர் அருள் பாலிக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரர் வழிபாடு இப்போதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மோட்ச ஸ்தலமாக இக்கோவில் கருதப்படுகிறது.