தமிழ் மொழிக்கே உரித்தான சிந்தனைக் கலை எது? அதாங்க நம்ம பட்டிமன்றம்!

விவாதங்கள் மூலம் சமூகத்தில் உள்ள பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் போன்றவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இந்த பட்டிமன்றத்தினால் சமூக சிந்தனை மேம்படும்.
village Pattimandram
Pattimandram
Published on

தமிழ் மொழிக்கே உரித்தான சிந்தனைக் கலை வெளிப்பாட்டு வடிவங்களில் ஒன்று தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பட்டிமன்றங்கள். இலக்கிய வழக்கில் இது 'பட்டி மண்டபம்' என குறிக்கப்படுகிறது. பட்டி மண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், கம்ப ராமாயணம் போன்ற பழமையான தமிழ் நூல்களில் காணப்படுகின்றது. பட்டிமன்றம், தமிழ் இலக்கியத்திலும், பண்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தமிழ் மொழியின் செழுமையையும், தமிழர்களின் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் ஒரு கலையாகும்.

விவாதங்கள் மூலம் சமூகத்தில் உள்ள பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் போன்றவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இந்த பட்டிமன்றத்தினால் சமூக சிந்தனை மேம்படும். இதில் இரண்டு வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட அணிகள், நகைச்சுவையுடன் கூடிய விவாதத்தின் மூலம் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைப்பார்கள். இறுதியில் எது சிறந்தது என்பதை நடுவர் தீர்ப்பளிப்பார். இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், பொது அறிவை வளர்க்கவும், சமுதாயப் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வரவும், சிந்தனைகளை தூண்டவும் ஒரு சிறந்த கருவியாக கருதப்படுகிறது.

பார்வையாளர்களைக் கவரும் வகையில் நடைபெறும் இந்த விவாதத்தில் நகைச்சுவை, வாக்குவாதம், கேள்வி பதில் போன்றவை இருக்கும். இறுதியில் நடுவர் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது பற்றியும், யார் பக்க கருத்துக்கள் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டன என்பதைப் பொறுத்தும் தீர்ப்பை வழங்குவார்.

பொதுவாக பட்டிமன்றத்தில் கொடுக்கப்படும் தலைப்புகள் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளையும், நாட்டு நடப்புகளையும், பொதுமக்களின் பிரச்னைகளையும் விவாதிக்கும் வகையில் இருக்கும். இரு தரப்பு அணியும் தங்களுடைய அணியின் சார்பாக, தங்களுடைய கருத்தை முன்வைத்து வாதிடுவார்கள். நடுவராக இருப்பவர் இந்த விவாதத்தை நெறிப்படுத்துவதுடன் இறுதி தீர்ப்பையும் பாரபட்சமின்றி வழங்குவார். விவாதத்தின் பொழுது பேச்சாளர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு பல்வேறு உத்திகளை கையாளுவார்கள்.

குன்றக்குடி அடிகளார் தமிழ் வளர்ச்சிக்காக பட்டிமன்றங்களை மாணவர்களிடையே அதிகம் ஊக்குவித்தார். ஆனால் இன்று நடைபெறும் பட்டிமன்றங்கள் சில பொருளற்ற கூச்சல்கள் ஆகிவிட்டன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மூடநம்பிக்கை கோட்டை: 13-ம் எண்ணை ஏன் பல விமான நிறுவனங்கள் தவிர்கின்றன?
village Pattimandram

இலக்கியங்களை பொதுவெளியில் கொண்டு வருவதாக சொல்லி தொடங்கப்பட்ட பட்டிமன்றம் காலப்போக்கில் கணவனா? மனைவியா? ஆண்களா? பெண்களா? என தனி மனிதர்களின் பலவீனங்களை அலசி ஆராயும் பட்டிமன்றமாக மாறிவிட்டது. தொடக்க காலத்தில் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்ப ராமாயணம் என்பது போல் இலக்கியத்தைப் பொருளாகக் கொண்டு நடைபெற்றது. அடுத்த கட்டத்தில் பட்டிமன்றம் என்பது சமூகத்தைப் பற்றியதாக அமைந்தது. இந்நெறிக்கு தலைமை தாங்கியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். இக்கால கட்டத்தில் பட்டிமன்றம் சமூகம் பற்றிய சிந்தனைகளை பெரிதும் வெளிப்படுத்தியது.

மூன்றாவது பரிமாணமாக பட்டிமன்றங்கள் குடும்பம் பற்றியதாக அமைந்தது. குடும்பங்களில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகள் நகைச்சுவையோடு பட்டிமன்றங்களில் விவாதிக்கப்பட்டன.

நான்காம் கட்ட வளர்ச்சியாக சினிமாவை மையமிட்டு அமைந்தது. கண்ணதாசனா, பட்டுக்கோட்டையா? பழைய பாடலா? புதிய பாடலா? என்று சினிமா தொடர்பான விஷயங்கள் பட்டிமன்றங்களில் அலசப்பட்டன.

ஐந்தாம் கட்ட வளர்ச்சியாக விழிப்புணர்வு சிந்தனை பற்றியதாக அமைந்தது. மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டக்கூடிய தலைப்புகளில் பட்டிமன்றங்கள் அமைந்தன.

இதையும் படியுங்கள்:
'கோஹினூர் வைரம்' - காலத்தால் அழியாத கோல்கோண்டா கோட்டை! என்ன சம்பந்தம்?
village Pattimandram

முன்பெல்லாம் கோவில் திருவிழாக்களில் பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இப்பொழுது திருமண வீடுகளில் கூட பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. தொலைக்காட்சிகள் பட்டிமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டன. பொங்கல், தீபாவளி, தமிழ் வருட பிறப்பு என்று எல்லா முக்கிய நாட்களிலும் பட்டிமன்றத்தை ஒளிபரப்புகின்றன. பட்டிமன்றங்கள் மக்களிடையே நகைச்சுவை உணர்வை வளர்ப்பதுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன என்றால் மிகையல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com