

பாரசீகக் கம்பளங்கள் என்பது ஈரானின் கலாச்சாரம், கலை மற்றும் நெசவு பாரம்பரியத்தின் மிக உயரிய அடையாளமாகும். வெறும் தரை விரிப்புகளாக மட்டுமில்லாமல், நுணுக்கமான கைவினைத்திறன் மற்றும் தனித்துவமான வடிவமைப்புகள் காரணமாக இவை உலக அளவில் விலைமதிப்பற்ற கலை பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன.
2,500 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த கலை வடிவம் 2010ல் யுனெஸ்கோவின் (UNESCO) அழியாத பாரம்பரியப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. பாரசீகக் கம்பளம் என்பது ஈரான் (பண்டைய பாரசீகம்) நாட்டில் பாரம்பரிய முறையில் கையால் நெசவு செய்யப்படும் உலகப் புகழ்பெற்ற இந்த கலைப் படைப்பில் பல வகைகள் உள்ளன.
பாரசீக வீடுகளில் கம்பளங்கள் வெறும் அலங்காரப் பொருளாக மட்டுமல்லாமல், பிரார்த்தனை செய்வதற்கான புனிதமான இடமாகவும், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் குடும்ப சொத்தாகவும் மதிக்கப்படுகின்றன.
முகலாய காலத்தில் அக்பர் பேரரசர் மூலமாக இந்த நெசவுக்கலை இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இந்திய வடிவங்களுடன் இணைந்து புதிய அரசக் கலை வடிவம் பெற்றது.
இவற்றின் முக்கிய வகைகள்:
தப்ரிஸ் (Tabriz):
நுணுக்கமான மலர் வடிவமைப்புகள் மற்றும் நேர்த்தியான கைவினைத் திறனுக்காக அறியப்படுகிறது.
இஸ்பஹான் (Isfahan):
மிக நேரத்தியான பூக்கள், மென்மையான மலர்க் கொடிகள் மற்றும் ஆடம்பரமான வண்ணக் கலவைகளைக் கொண்டது.
கஷான் (Kashan):
பாரம்பரிய அரசர் தோற்றம் கொண்ட ஆழமான சிவப்பு, கடற்படை நீல வண்ணங்களில் நடுப்பகுதியில் பெரிய பதக்கம் அமைப்பும், சிவப்பு, நீலம், ஐவரி போன்ற அடர் நிறங்களும் கொண்டது.
ஹெரிஸ் (Heriz):
தடித்த வடிவியல் வடிவங்கள் (Geometric patterns) மற்றும் வலிமையான எல்லைகளைக் கொண்டது. இது பெரிய வரவேற்பறைகளுக்கு ஏற்றது.
நைன் (Nain):
வெள்ளை அல்லது தந்த நிற பின்னணியில் நீலம் மற்றும் பச்சை நிற சிறிய மலர் கிளைகள் கொண்ட நேர்த்தியான கம்பளம்.
இது தவிர கெர்மன், கோம், சரூக், அபாதே மற்றும் நாடோடி பழங்குடியினரால் நெய்யப்படும் தடிமனான, எளிமையான வடிவியல் உருவங்கள் கொண்ட காபே (Gabbeh) போன்ற வகைகளும் குறிப்பிடத்தக்கவை.
தயாரிப்பு முறை:
இவை பொதுவாக உயர்தரச் செம்மறி ஆடு கம்பளி (Wool), பட்டு (Silk) அல்லது இவை இரண்டின் கலவை இழைகளைக் கொண்டு தூய பருத்தி அடித்தளத்தில் (Warp) இவை நெய்யப்படுகின்றன.
நெசவு முறை:
இவை தரைத் தறிகள் அல்லது செங்குத்துத் தறிகளில் (Tabriz loom போன்றவை) கைவினைக் கலைஞர்களால் நூற்றுக்கணக்கான மணி நேரம் உழைத்து கையால் முடிச்சிட்டு உருவாக்கப்படுகின்றன.
கலைநயம்:
இவை வெறும் தரை விரிப்புகள் மட்டுமல்ல; இவை பாரசீகப் பண்பாடு, வரலாறு மற்றும் மலைப்பகுதிகள் முதல் நாடோடி மக்களின் வாழ்க்கை முறை வரை சித்தரிக்கும் கலைப் பொருள்களாகும்.
முக்கிய நெசவு நுட்பங்கள்:
நெசவு முடிச்சுகள் (Knots):
பாரசீக கம்பளங்களில் பெரும்பாலும் அசமச்சீர் முடிச்சுகள் (Asymmetric or Senneh knots) பயன்படுத்தப் படுகின்றன. இது கம்பளத்திற்கு மென்மையான வெல்வெட் போன்ற அமைப்பையும், வளைவான நுணுக்கமான டிசைன்களை உருவாக்கவும் உதவுகிறது.
முடிச்சு அடர்த்தி (Knot Density):
ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை முடிச்சுகள் உள்ளன என்பதைப் பொறுத்து இதன் மதிப்பு மாறும். உயர்தர கம்பளங்கள் 300 முதல் 1000+ KPSI வரை கொண்டிருக்கும்.
வீட்டு அலங்காரத்தில் பாரசீகக் கம்பளங்கள்:
வாழ்க்கை அறையின் (living room) மையத்தில் இந்த கம்பளத்தை விரிப்பதன் மூலம் முழு அறைக்கும் ஒரு கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுவர முடியும். கிளாசிக் தோற்றத்திற்கு அறையில் உள்ள சோபா மற்றும் நாற்காலிகளின் முன் கால்கள் அல்லது நான்கு கால்களும் கம்பளத்தின் மீது இருக்கும்படி பெரிய அளவைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
பாரசீகக் சம்பளங்கள் இயற்கையான சாயங்கள் (Natural Dyes) மூலம் ஆழமான வண்ணங்களைக் கொண்டிருப்பதால், சுவர்களின் நிறம் சற்று எளிமையாக இருக்கும்போது கம்பளத்தின் டிசைன் மிக அழகாக வெளிப்படும்.