குஜராத்தை ஆண்ட மன்னர்களுள் மக்களிடையே மிகவும் புகழ் பெற்றவனாகத் திகழ்ந்தவன் சித்தராஜ ஜெயசிம்மன். மூன்று வயதிலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. எட்டு வயதில் தந்தை கர்ணா இறக்கவே இவன் மன்னனான்.
‘திவ்யாஸ்ரய காவ்யா’ என்னும் நூல் இவனை வெகுவாகப் புகழ்ந்து இவனது அரும் செயல்களைப் பட்டியலிடுகிறது.
இதே காலத்தில் இங்கு வந்த இஸ்லாமிய யாத்ரீகர்களான அல் – இத்ரிஸி மற்றும் முகம்மது உஃபி ஆகியோர் முறையே தங்களது நூல்களான நுஜாத் – அல் – முஷ்டக் மற்றும் ஜமே – அல்- ஹிகயாதா என்ற நூல்களில் இவனைப் பற்றி விவரிக்கின்றனர். இவனது அரசவைக்கு அவர்கள் சென்றிருக்கின்றனர்.
கி.பி, 1094 முதல் கி.பி. 1143 முடிய இவன் ஆண்ட காலம் பொற்காலம் எனக் கூறப்படுகிறது.
சித்தராஜ என்று இவனுக்குப் பெயர் ஏற்பட்ட காரணம் இவன் பல வித அரும் சித்திகளைக் கொண்டிருந்தான் என்பதால் தான். சித்தர்கள் இருந்த பூமியை ஆண்ட அரசன் என்பதாலும் இவனுக்கு சித்தராஜன் என்ற பெயர் வழங்கப்பட்டது.
இவன் உஜ்ஜயினியை ஆண்ட விக்ரமாதித்தன் போலத் தான் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான பண்புகளை வளர்த்துக் கொண்டான்.
இன்றும் கூட குஜராத்தில் உள்ள கிராமங்களில் மக்கள் தங்கள் நாட்டுப்புறப் பாடல்களில் இவனது அரும் செயல்களைப் பாடி வருகின்றனர்.
இவனுக்கு அமைச்சராக இருந்த அறிஞர் சம்பத்காரா என்பவர் இவனுக்கு அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார்.
அந்தக் காலத்தில் பஹுலோடா என்ற தலத்திற்கு, தெற்கிலிருந்து வரும் யாத்ரீகர்களிடமிருந்து யாத்திரை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.
ஒருமுறை சோமநாதபுரத்திற்கு தல யாத்திரை செய்ய ஜெயசிம்மனின் தாயார் மயநல்லா (குஜராத்தில் அவர் மினலா தேவி என்று அழைக்கப்பட்டார்) கிளம்பினார். அந்தக் கால வழக்கப்படி சேனையின் முக்கியமான பகுதி அவருடன் கிளம்பியது.
மயநல்லா பஹுலோடாவை நெருங்கியபோது எதிரில் ஏராளமான யாத்ரீகர்கள் வருவதைப் பார்த்து அவர்களை நோக்கி, “யாத்திரை நன்றாக நடந்ததா?” என்று அன்புடன் விசாரித்தார்.
அவர்களோ, “தாயே! எங்களுக்கு அங்கு செல்ல வரி விதிக்கப்பட்டிருக்கிறது. நாங்களோ ஏழைகள். தெய்வ தரிசனத்திற்காக வந்தோம். ஆனால் வரி கொடுக்கப் பணமில்லை. ஆகவே தரிசனம் செய்யாமல் திரும்புகிறோம்” என்று வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் கூறினர்.
இதைக் கேட்ட மஹாராணி திடுக்கிட்டார்.
“நீங்களே பார்க்கமுடியாத போது நான் எதற்கு அங்கு போக வேண்டும்? நானும் உங்களுடன் திரும்புகிறேன்” என்றார் மஹாராணி.
செய்தி ராஜா ஜெயசிம்மனுக்குப் பறந்தது. உடனே ஓடோடி வந்த ஜெயசிம்மன் இந்தக் கணமே யாத்திரை வரி நீக்கப்படுகிறது என்று உத்தரவிட்டான். தாயாரின் மீது அளவற்ற பக்தியும் பாசமும் கொண்ட அவனது உத்தரவால் ராணியார் மகிழ்ந்தார். மக்களின் உற்சாகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லாமல் போயிற்று.
இந்தக் கால வழக்கப்படி 72 லட்சம் நாணயங்கள் மதிப்பாகும் அந்த வரித் தொகை!
மக்களின் மீது அவன் செலுத்திய அதே அன்பை மக்களும் அவன் பால் திருப்பிச் செலுத்தினர்.
அவனைப் பற்றிய சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு. அவை விக்ரமாதித்த மஹாராஜாவின் கதைகள் போலவே இருக்கும். அவற்றில் வேதாளம் போன்ற பேய், பிசாசு, ராட்சஸன் ஆகிய எல்லாமும் உண்டு! ஆனால் அனைத்தும் உண்மையாக நடந்தவையே!