
சாதாரணமாக இரு சக்கர வாகனத்தில் கணவன் பின்னால் மனைவி அமர்ந்து சென்றால் ஆபத்தைத் தடுக்கும் வகையில் கணவரின் பின் சட்டையைப் பிடித்து இழுத்து மனைவி எச்சரிக்கை செய்வதைப் பார்க்கலாம். இதையே விமான ஓட்டிகளும் பின்பற்றினர் என்பது ஆச்சரியம் தரும் தகவல்! அத்துடன் விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படுகிறது என்ற குறிப்பும் நமது ஆர்வத்தை தூண்டுகிறது! என்ன காரணம்?
விமான பைலட்களை உருவாக்கி வரும் சில அகாடமிகளில் பல பைலட்களின் சட்டை பின் பகுதி கிழித்து தொங்க விடப்பட்டிருப்பதைக் காணலாம். இப்படி தொங்கி கொண்டிருக்கும் சட்டைகளின் பின் பகுதியில், பல்வேறு எழுத்துக்களும், குறியீடுகளும் இருக்கும். இந்த எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்று என்றாவது சிந்தித்ததுண்டா?
பயிற்சி பெற்று பைலட்களாக உருவாகும் மாணவர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய நடவடிக்கைதான் இதற்கு காரணம் என்கிறார்கள். பயிற்சியை நிறைவு செய்யும் விதமாக முதல் முறையாக விமானத்தை தனியாக வெற்றிகரமாக இயக்கி விட்டு வரும் புதிய பைலட்டுடைய சட்டையின் பின் பகுதி அவரது வழிகாட்டியால் கிழிக்கப்பட்டு அதில் புதிய பைலட்டின் பெயர் மற்றும் அவர் முதல் முறையாக தனியாக இயக்கிய விமானத்தின் விபரங்கள் எழுதப்படுகிறது.
அத்துடன் ரன்வே மற்றும் ஏர்போர்ட் குறியீடு போன்ற அம்சங்களும் குறிக்கப்பட்ட கிழித்த சட்டைகளை பைலட் பயிற்சி பள்ளிகள் தங்கள் வளாகங்களில் கௌரவமாக தொங்க விடுகின்றன. சட்டையின் பின் பகுதியை கிழிக்கும் இந்த நிகழ்வு வழிகாட்டிகள் புதிய பைலட்களின் மீது வைக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இதற்கான பின்னணியும் சுவாரஸ்யமானதாக உள்ளது. பைலட் லைசென்ஸ் பெறுவதன் முக்கியமான ஒரு பகுதிதான் விமானத்தை தனியாக இயக்குவது. எனவே முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கும்போது, அதில் வெற்றியடைய வேண்டும் என்பதில் புதிய பைலட்கள் மிகவும் கருத்துடன் இருப்பார்கள்.
தகவல் தொழில்நுட்பம் முன்னேறுவதற்கு முன்னான காலங்களில் அதாவது ஹெட்செட்கள் மற்றும் ரேடியோ கம்யூனிகேஷன் ஆகியவை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன், மாணவன் விமானத்தை ஓட்டத் தொடங்கும் நாட்களில் ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய திறந்தநிலை காக்பிட் கொண்ட விமானங்களில்தான் வழிகாட்டிகள் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவார்கள். இந்த விமானங்களில் பயிற்சி மாணவர்கள் முன்னே அமர்ந்திருக்க, வழிகாட்டிகள் பின்னால் அமர்ந்திருப்பார்கள்.
பயிற்சி அளிக்க தொடர்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தாலும், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய இருக்கை அமைப்பு காரணமாகவும், மாணவ பைலட்கள் மற்றும் வழிகாட்டிகள் பேசி கொள்வது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருந்த அக்காலத்தில் மாணவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய சட்டையின் பின் பகுதியை வழிகாட்டிகள் பிடித்து இழுத்து பைலட்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்பியதும், தேவையான ஆலோசனைகளை வழிகாட்டிகள் அவர்களுக்கு வழங்குவார்களாம்.
இதுவே மாணவ பைலட்கள் முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின் இனி இப்படிப்பட்ட தகவல் தொடர்பு இனி தேவையில்லை என்பதை குறிக்கும் விதமாகதான், அவர்களுடைய சட்டையின் பின் பகுதியை வழிகாட்டிகள் கத்தரித்து விபரங்களை பதிகிறார்கள் என்ற சுவாரஸ்யமான தகவல் உள்ளது.