

ஜல்லிக்கட்டு (Jallikattu) தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. தை பொங்கல் தொடங்கி அந்த மாதத்தில் தொடர்ந்து பல இடங்களில் நடைபெறும் ஒரு வீர விளையாட்டு. கூர்மையான கொம்புகள், ஆஜானுபாகுவான தோற்றம், சிறிய மலைக்குன்று போன்ற திமிலுடன் கம்பீரமாக நிற்கும் காளையினை அடக்குவது தான் அந்த விளையாட்டின் சவால். ஜல்லிக்கட்டுக்கு (Jallikattu) என்றே பிரத்தியேகமாக, காளைகள் வளர்க்கப்படுகின்றன. இவை பிறப்பிடம், நிறம், தன்மை ஆகியவற்றால் வகைப்படுத்தபடுகின்றன.
1. உம்பளச்சேரி காளைகள்:
நாட்டு வகை மாடுகளில் மிக முக்கியமானவை உம்பளச்சேரி மாடுகள். நாகப்பட்டினம் மாவட்டத்தின், தலை ஞாயிறு ஒன்றியத்தைச் சேர்ந்த உம்பளச்சேரி பகுதியின் பெயரால் 'உம்பளச்சேரி மாடுகள்' என அழைக்கப்படுகின்றன.
உம்பளச்சேரி கன்றுகள் பிறக்கும் போது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் சிவப்பு நிறமானது சாம்பல் நிறத்துக்கு மாறும். ஆறு மாதம் முதல் எட்டு மாதங்களில் முழுமையான சாம்பல் நிறத்துக்கு மாறிவிடும். காலில் முட்டிக்குக் கீழே கால் உறை அணிந்ததுபோல வெள்ளை நிறமாகக் காணப்படும்.
வால் பகுதிகள் மட்டும் பாதி வெள்ளை நிறத்தில் இருக்கும். உம்பளச்சேரி இளம் காளைகளினுடைய கொம்பு கூர்மையானதாக இருக்கும். அதனால் கொம்பைத் தீய்க்கும் பழக்கம் இன்றளவும் வழக்கத்தில் இருக்கிறது. இதன் திமில் கொஞ்சம் பெருத்து உறுதியாக இருக்கும். இது ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் இனம்.
தொடக்க காலத்தில் ஜல்லிக்கட்டுகளில் கலக்கி வந்தது உம்பளச்சேரி காளைகள் தான். காளைகளில் அதிக காலம் வரை கிட்டத்தட்ட 20 வருடங்கள் உயிர் வாழ்வது இதன் பலம். மேலும் 300 கிலோ எடையுள்ள கம்பீரமான தோற்றம். இதன் ஆற்றல் காரணமாக இது "வேலி மஞ்சுவிரட்டு" போட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து இதன் ஆற்றல் ஜல்லிக்கட்டில் வெளிப்படாமல் போவது மற்றும் மற்ற ஜல்லிக்கட்டு காளைகளை போல ஆக்ரோஷமாக இல்லாமல் போவது இதன் பலவீனமாக கருதப்படுகிறது.
2. காங்கேயம் காளைகள்:
ஜல்லிக்கட்டு என்றவுடன் முதலில் நினைவில் தோன்றுவது காங்கேயம் காளைகள் தான். ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் காங்கேயம் காளைகள் வளர்க்கப்படுகின்றன. பிறக்கும்போது சிவப்பு நிறத்திலும், வளர வளர சாம்பல் நிறமாகவும் இவை மாறுகின்றன.
இதன் பரந்த திமில் மற்றும் சிலை செதுக்கியது போன்ற தோற்றம் அதோடு இதன் கொம்புகளுக்காக மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் எடை 250 கிலோ. ஜல்லிக்கட்டில் 20 சதவீதம் காங்கேயம் காளைகள் தான் வலம் வருகின்றன. ஜல்லிக்கட்டில் இது காட்டும் வேகம் இதன் பலமாக கருதப்படுகிறது.
சில நேரங்களில் மிகவும் அமைதியாக இருப்பதே இதன் பலவீனமாக கருதப்படுகிறது. மயிலை, பிள்ளை, செவலை, காரி என நான்கு உட்பிரிவு இனங்கள் காங்கேயம் காளைகளில் உள்ளன. ஜல்லிக்கட்டுகாக வளர்க்கப்படும் காளைகள் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
3. புலிக்குளம் காளைகள்:
உயரமான திமில்களை கொண்டிருப்பது புலிக்குளம் காளைகளின் தனிச்சிறப்பு. இதன் காரணமாக இவை ஜல்லிக்கட்டுக்காக பிரத்தியேகமாக வளர்க்கப்படுகின்றன. இவை சிவகங்கை, மதுரை ஆகிய ஊர்களை சுற்றியுள்ள பகுதிகளை பூர்வீகமாக கொண்டவை. இவை கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களில் காணப்படுகின்றன. ஜல்லிக்கட்டில் அதிகம் கலந்து கொள்ளும் காளை. குறிப்பாக, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் அதிகம் இடம் பெறுகிறது. இதை ரேக்ளா பந்தயங்களிலும் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஜல்லிக்கட்டுகளில் இது தனது முழு ஆக்ரோத்தையும் காட்டுவது இதன் பலம். இதுவே இதனை ஜல்லிக்கட்டில் 90 சதவீதம் பயன்படுத்த காரணமாக இருக்கிறது. புலியை தனது கூரிய கொம்பால் குத்திக் கொன்றதால் இவற்றிற்கு இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பெரிய திமில், கூர்மையான கொம்பு மற்றும் சீறிபாயும் வீரியத்திற்கு பெயர் பெற்றவை இந்த காளைகள். இவை 5 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
4. பர்கூர் மலை மாடுகள்:
பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே திட்டுக்களுடன் பெரிய திமில், சிறிய கால்களுடன் கூடிய இவை ஈரோடு பர்கூர் மலையை சேர்ந்தவை. இவற்றின் கொம்புகள் சற்றே வளைந்து கூர்மையாக காணப்படும்.
ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்திற்கு பயன்படுத்தப்படும் இவை, அதிக கோபமும், முரண் பிடிக்கும் தன்மையும் கொண்டவை. ஜல்லிக்கட்டு காளைகளில் சிறிய வகை காளை பர்கூர் மாடுகள் தான். இதன் எடை 100 கிலோ. மரபு ரீதியாக இது எருதுவிடும் விளையாட்டுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதனை ஜல்லிக்கட்டிற்காக பழக்கப்படுத்துவது எளிதாக இருப்பது மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் வேகமான காளை என்பது இதன் பலமாக கருதப்படுகிறது. மற்ற ஜல்லிக்கட்டு காளைகளை ஒப்பிடுகையில் இதன் பலம் குறைவு என்பது இதன் பலவீனமாக கருதப்படுகிறது.