வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் குறிப்பாக சிக்கலான நேரத்தில் உள்ளுணர்வு சரியாக வழிகாட்டும். அதைப் புரிந்துகொண்டு அதன்படி நடந்தால் நன்மைகள் கிட்டும். எந்த சூழ்நிலைகளில் உள்ளுணர்வு நமக்கு உதவியாக இருக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நிச்சயமற்ற நிலையில் முடிவெடுத்தல்: ஒருவர் தான் பணிபுரியும் அலுவலகத்தில் சில சிக்கல்கள் காரணமாக அதை விட்டு விலகி, ‘சொந்தமாக பிசினஸ் செய்யலாமா? அல்லது வேறு ஏதாவது அலுவலகத்தில் கிடைத்த வேலையை செய்யலாமா?’ என்கிற குழப்பமான மன நிலையில் இருக்கும்போது அவரால் சரியாக முடிவு எடுக்க முடியாது. அப்போது அவரது உள்ளுணர்வு அவரது கடந்த கால அனுபவங்களையும் அறிவையும் மனதில் அசை போட்டுப் பார்க்கத் தூண்டுகிறது. அவற்றின் அடிப்படையில் உள்ளுணர்வு வழிகாட்டுதலின்படி அவர் செயல்பட்டால் அவருக்கு சாதகமான பலன் கிட்டும்.
உறவு ரீதியான சிக்கலான உணர்ச்சி நிலைகள்: தனிப்பட்ட உறவுகள், குடும்பம், நட்பு அல்லது காதல் போன்ற உறவு ரீதியான சிக்கலான உணர்ச்சி நிலைகளில் உள்ளுணர்வு ஒருவருக்கு கணிசமாக உதவும். ஒருவரை விட்டு விலக வேண்டும் என்று முடிவு எடுக்கும்போது சம்பந்தப்பட்ட நபரின் குணாதிசயங்களை அலசி ஆராய்ந்து அவரை விட்டு விலகுவது அவசியமா என்று தீர்மானம் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.
பிரச்னைகளுக்குத் தீர்வு: பணியிடத்தில் ஏற்படும் மோதல்களைத் தீர்ப்பதற்கு அல்லது கதை எழுதும்போது அதன் கிளைமாக்ஸை எப்படி முடிப்பது, புதிதாக ஒரு தயாரிப்பை வடிவமைப்பது போன்ற சூழல்களில் உள்ளுணர்வு வழக்கத்திற்கு மாறான யோசனைகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகளை ஊக்குவிக்கும்.
தொழில் மாற்றங்கள்: தொழில் மாற்றங்கள், பதவி உயர்வுகள் அல்லது தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து முடிவு செய்யும்போது உள்ளுணர்வு, தனிப்பட்ட நபர்களின் தொழில் தேர்வுகளை, அவர்களின் உண்மையான உணர்வு மற்றும் மதிப்புகளுடன் சீரமைத்து எச்சரிக்கை செய்யும். வழக்கமான பாதைகளை பின்பற்றுவதற்குப் பதிலாக புதிதாக ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது அதில் உள்ள சிக்கல்களை நன்கு அலசி ஆராயச் சொல்லி உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யும்.
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு: உணவு உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் தொடர்பான வாழ்க்கை முறைத் தேர்வுகளை மேற்கொள்வது, குறிப்பாக வழக்கமான ஆலோசனைகள் சரியாக வராதபோது உள்ளுணர்வு ஒருவருக்கு மிகச் சரியாக உதவுகிறது. இது ஆரோக்கியத்திற்கு தனிப்பட்ட அணுகுமுறைகளை வலியுறுத்தும். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத ஏதாவது உணவு வகைகளை உண்ணச் சொல்லி நண்பர்களோ உறவினர்களோ வற்புறுத்தும்போது, ‘இது உனது குடலுக்கும் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாது’ என்று உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யும். அதை அலட்சியம் செய்யாமல் நடந்துகொள்வது ஆரோக்கியம் தரும்.
இடர் மதிப்பீடு: புதியதாகத் தயாரிப்புகளைத் தொடங்குதல் அல்லது நிலையற்ற சந்தைகளில் முதலீட்டுத் தேர்வுகளை மேற்கொள்வது போன்ற அபாயங்கள் நிறைந்த வணிக மற்றும் முதலீட்டுச் சூழல்களில், ஒருவருக்கு சரியாக உதவுகிறது. அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள், அவர்களின் கடந்த கால அனுபவங்கள் மற்றும் உள் உணர்வுகளிலிருந்து தங்கள் முடிவை வழிநடத்த அடிப்படையான அபாயங்கள் மற்றும் சாத்தியமான வெகுமதிகளை உணர உள்ளுணர்வை நம்பலாம்.
நெருக்கடி மேலாண்மை: அவசர நிலை அல்லது எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள விரைவாக சிந்திக்க வேண்டியிருக்கும்போது உள்ளுணர்வு சரியாக பதிலளிக்கும். உயர் அழுத்த சூழ்நிலைகளில், உயிர்களை காப்பாற்ற அல்லது பேரழிவு தாக்கங்களைக் குறைக்கக்கூடிய விரிவான முடிவுகளை எடுக்க தனி நபர்கள் பெரும்பாலும் உள்ளுணர்வை நம்பி இருக்கிறார்கள்.
உள்ளுணர்வு ஒரு சக்தி வாய்ந்த கருவி என்றாலும் பகுத்தறிவு சிந்தனை மற்றும் பகுப்பாய்வுடன் சிக்கலான சூழ்நிலைகளில் செயலாற்றுவது முக்கியம்.