பெரும்பாலானோர் வீடுகளில் தினமும் டீ போடுவது வழக்கம். டீ போட்டுவிட்டு அந்தத் டீத்தூளை குப்பை தொட்டியில்தான் போடுவோம். இது நாம் எல்லோர் வீடுகளிலும் செய்யும் காரியம்தான். ஆனால், அந்தப் பயன்படுத்திய டீ தூளின் அருமை தெரிந்தால் இனி அதை கண்டிப்பாக நீங்கள் குப்பைத் தொட்டியில் போட மாட்டீர்கள். ‘வேஸ்ட் ஆன டீத்தூளில் அப்படி என்ன இருக்கு?’ என்று நீங்கள் யோசிக்கலாம். யோசிக்கவே வேண்டாம். வீணாய் தூக்கி எறியப்படும் டீ துளில் கீழ்க்காணும் ஐந்து விஷயங்களைச் செய்து வியக்கத்தகும் பயன்களைப் பெறலாம்.
1. கை கழுவலாம்: அசைவ சாப்பாட்டை சாப்பிட்ட பின்பு உங்களுடைய கைகளில் வரக்கூடிய ஒரு கெட்ட வாடையை என்னதான் சோப்பு போட்டு கழுவினாலும் போகவே போகாது. சோப்பு போட்டு கழுவிய உங்களுடைய கைகளில் கொஞ்சமாக இந்த பழைய காய்ந்த டீ தூளை எடுத்து கையை நன்றாக ஸ்க்ரப் செய்து, கழுவிப் பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.
2. சன் டேன் நீக்கலாம்: நாம் வெயிலில் வெளியே சென்று வந்தால் கட்டாயமாக சன் டேன் ஏற்படும். இந்த சன் டேன் சுலபமாக நீக்க, ஒரு சிறிய பௌலில் 1 ஸ்பூன் இந்த டீ தூள், புளித்த தயிர் 1 ஸ்பூன் இந்த இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலந்து கொண்டு இந்தக் கலவையை சன் டேன் உள்ள இடத்தில் அப்ளை செய்து லேசாக ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மீண்டும் ஒரு ஐந்து நிமிடங்கள் அந்த இடத்திலேயே டீத்தூளை அப்படியே உலர விட்டு விடுங்கள். அதன் பின்பு தண்ணீரை ஊற்றிக் கழுவி பாருங்கள். சன் டேன் உடனடியாக நீங்கி இருக்கும்.
3. ஈக்களை விரட்டலாம்: நம் வீட்டு சமையல் அறையில் காரணமே இல்லாமல் சில இடங்களில் ஈ வந்து மொய்க்கும். குறிப்பாக, அசைவம் சமைத்த இடம். ஏதாவது பழங்களை வெட்டி வைத்து இருந்தால், அந்தப் பழச்சாறு விழுந்த இடம், குறிப்பாக மாம்பழம் வெட்டினால் அந்த வாசம் உள்ள இடம் எல்லா இடத்திலும் ஈக்கள் வந்து மொய்க்கும். இப்படி எந்த இடத்தில் அதிகமாக ஈ இருக்கின்றதோ அந்த இடத்தில் நீங்கள் பயன்படுத்திய டீ தூளை தூவினால் ஈக்கள் தொல்லை இருக்காது.
4. கரும்புள்ளியை போக்கலாம்: இந்த டீ துளை நாம் ஒரு நல்ல ஸ்க்ரப்பராக முகத்திற்குப் பயன்படுத்தலாம். மூக்கின்மேல் இருக்கக்கூடிய பிளாக் ஹெட்ஸ் நீக்குவதற்கு, கொஞ்சமாக இந்த டீத்தூளை உங்களுடைய ஆள்காட்டி விரலால் தொட்டு, மூக்கின் மேலே ஸ்க்ரப் செய்தால், மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும். அப்படியே முகம் முழுவதும் கூட ஒரு முறை இந்த ஸ்க்ரப்பரை பயன்படுத்தி சுத்தம் செய்தால் முகம் பளிச்சென மாறும்.
5. செடிகளுக்கு உரமாக்கலாம்: வீட்டில் பூச்செடிகள், காய்கறி செடிகள் இருந்தால் இந்த பயன்படுத்திய டீ தூளை வாரம் ஒருமுறை அந்த மண்ணில் உரமாக சேர்க்கலாம். செடியைச் சுற்றி உள்ள மண்ணில் டீ தூளை தூவி விட்டு, நன்றாக மண்ணுடன் கலந்து விட்டு விடுங்கள். செடிகள் செழிப்பாக வளரும். இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால், உங்களுடைய வீட்டிலும் டீ தூளை குப்பையில் தூக்கி போடாமல், பயன்படுத்திக் கொள்ளலாம்.