புராணக் கதை பேசும் சுரேந்திரபுரி அருங்காட்சியகம்!

சுரேந்திரபுரி நுழைவாயில்
சுரேந்திரபுரி நுழைவாயில்

யாதெரி குட்டம் மலைக்கோயில் தெலங்கானாவின் புதிய திருப்பதியாகும். இது ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு மிக பிரம்மாண்டமாக தெலங்கானாவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கோயிலாகும். யாதகிரி கோயிலுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பாக உள்ளதுதான் இந்த சுரேந்திரபுரி. 12 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு, 2003ல் திறக்கப்பட்ட இது ஒரு விசித்திரமான மாயாஜால உலகமாகும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக புராண கதைகளை பிரம்மாண்டமான சிலைகள் மூலமாக நமக்கு எடுத்துக் காட்டுகின்ற ஒரு தீம் பார்க் என்று இதைக் கூறலாம். இங்கு பிரம்மாண்டமான கடவுள் சிலைகள் மட்டுமின்றி, புராண கதைகளில் வரும் பூதங்கள் அந்த பூதத்தின் வாய்க்குள் நாம் சென்று வர பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

காயத்ரி தேவி
காயத்ரி தேவி

நுழைவாயிலில் ஒரே சிலையின் முன்பக்கம் பஞ்சமுக ஆஞ்சனேயரும் பின்புறம் சிவபெருமானும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நாம் செல்லும் நுழைவாயிலில் வாயை பிளந்திருக்கும் பெரிய சிங்கத்தின் இருபுறமும் தந்தங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதனைத் தாண்டி சென்றவுடன் ஒரு படகில் முனிவர்களும் விலங்குகளும் செல்வது போன்ற சிலைகள், மனுச்சரித்ரா என்ற புராணக் கதையை கூறுவதை வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் அழியும் தருவாயில் முனிவர்கள் விலங்குகளை காப்பாற்றி அழைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு செல்கின்றனர். மற்றொரு தனி படகில் ஒரு தம்பதியர் அவர்களது குழந்தையுடன் செல்கின்றனர். யானையின் காலை கடிக்கும் முதலை கதையை கூறுகிறது. கோபியர் குளிக்கும்பொழுது கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆடையை எடுத்து ஒளித்து வைத்துக்கொள்ளும் கதையை கூறும் காட்சி அமைந்துள்ளது.

மகாவிஷ்ணு விஸ்வரூப காட்சி
மகாவிஷ்ணு விஸ்வரூப காட்சி

அடுத்ததாக, இருபுறமும் வர்ணம் தீட்டிய இந்தியாவில் புகழ்பெற்ற கோயில்கள், கருவறைகள் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இங்கு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், வராக, நரசிம்மர் கோயில் என நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் கோபுரங்கள் காட்சியளிக்கின்றன.

எமலோகத்தில் ஒரு மிருகம் மற்றொன்றை விழுங்குவது போல உணவு சங்கிலியை இங்கு பார்க்கலாம். ஒரு மனிதன் இறந்த பிறகு அவனை எமதர்மராஜாவிடம் அழைத்து வந்து அவரவர்கள் செய்த தவறுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படுகிறது. கயிலாய மலையின் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் அங்கே தண்ணீர் குடம் இருக்கிறது. அதைத் தொடர்ந்து சென்றால் கோயில் நகரமே இருக்கிறது.

பிரம்மாண்ட சிவன் சிலை
பிரம்மாண்ட சிவன் சிலை

அதனைத் தொடர்ந்து சிவபெருமானின் சன்னிதியில் எலும்பு கூடுகள், ஒற்றைக் கண்ணுடைய மனிதன், தலை முழுவதும் கண்கள் உடைய மனிதன் என பல சிலைகள் அங்கு இருக்கின்றன. இங்கு இமயமலையின் மீது சிவபெருமான் நிற்கும் கண்கொள்ளாக் காட்சி தென்படுகிறது. இவை தவிர, கிருஷ்ண பகவான் குழந்தையாக இருந்தபொழுது பூதங்களை அடக்கிய கண்கொள்ளாக் காட்சிகள் சிலைகளாக நிறுவப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
சித்தன்னவாசலை போலவே ஓவியக் கலைக்கு புகழ் பெற்ற அர்மா மலை குகை!
சுரேந்திரபுரி நுழைவாயில்

அடுத்து, சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி அரக்கனை அடக்கும் காட்சி பிரதிபலிக்கிறது. மந்தார மலையை ஆதிசேஷன் பாம்பை வைத்து தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கும் காட்சி தெரிகிறது. சொர்க்கவாசலில் மகாவிஷ்ணு பள்ளிகொண்ட பெருமாளாக மகாலட்சுமியுடன் காட்சி தருகிறார். இலங்கையில் அனுமன் தனது வாலை சுருட்டிக்கொண்டு அதன் மேலே அமர்ந்திருக்கும் காட்சி தெரிகிறது.

பாதாள உலகத்தில் பாதாள காளி சிலையை அடுத்து, ஒருபுறம் சிவன் உருவமாகவும் மறுபுறம் சிவலிங்கமாகவும் காட்சி தருகிறார். தேவ லோகத்தில் விளக்குகள் அலங்காரத்துடன் தேவதைகள் காட்சி தருகிறனர். கடைசியாக பெரிய அனுமன் சிலையின் கையினால் தேங்காய் பிரசாதம் வழங்கப்படுகிறது.

இங்கு சுற்றுலா பயணமாக சென்று வர கட்டணமாக பெரியவர்களுக்கு 350 ரூபாயும், குழந்தைகளுக்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com