
பொதுவாக மனிதர்களாகிய நம்முடைய வாழ்க்கையில் கற்பனை என்பது பிரிக்க முடியாத ஒன்றாகும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் எத்தகைய நிலையை எட்ட வேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து, அதை கனவுகளாக்கி தான் அதை தொடங்கவே செய்கிறோம்.
இவையெல்லாம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. ஆனால், அன்றைக்கு இருந்த புலவர்களின் கற்பனை இப்பொழுது நினைத்தாலும் கூட நம்முடைய கற்பனைக்கு எட்டாத மாபெரும் காவியமாகவே நம் முன் விரிந்து கிடக்கிறது.
பொதுவாக மழை பெய்யும் போது வரும் மண்வாசனையை நாம் அனைவரும் ரசிப்பதுண்டு. ஆனால், அந்த மழை நீரே வானிலிருந்து பொழியும் போது நறுமணத்தை கமழ்வதாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு வகையான கற்பனையை தான் தமிழ் புலவர் ஒருவர் அவருடைய பாடலில் பயன்படுத்தியுள்ளார்.
'எழில் சூழ்ந்த உயர்ந்த மாடங்கள் இடையே இருக்கும் அரண்மனைகளில் வீற்றிருக்கும் பெண்கள் தங்களுடைய கூந்தலில் உள்ள ஈரத்தை உணர்த்துவதற்காக ஊட்டுகின்ற நறும்புகையின் வாசமானது வானத்து மேகங்களில் தஞ்சம் அடைந்து அது குளிர்ந்து மழைத்துளிகளாக பூமியை அடையும் போது இனியதொரு நறுமணத்தை தருகின்றன!' என்று தன்னுடைய கற்பனைக்கு புதியதொரு வடிவம் கொடுத்துள்ளார். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் நறுமணம் இருக்கிறதா? என்று ஆராய்ச்சி நடத்திய தமிழ் இலக்கியத்தில் தான் புலவர் இப்படி ஒரு கற்பனையையும் உலவ விட்டு இருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் அங்கு வாழும் மனிதர்களின் குண நலன்களை கூறும் போது அவர்கள் பயன்படுத்தும் வில் மட்டுமே கோணலாய் இருக்குமே தவிர ஒருபோதும் அங்கு வாழ்ந்த மக்கள் மனம் கோணி இருப்பதில்லை என அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
அதேபோல தளர்ந்து சோர்ந்து போய் இருப்பவை எல்லாம் பெண்களின் மனம் மிகுந்த கூந்தல் தானே தவிர மனிதர்கள் யாரும் மனம் சோர்ந்து இருப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறார். துன்ப நிலைகளால் எந்த ஒரு மனிதரும் புலம்பி அழுவதில்லை என்றும் புலம்பி அரற்றுவன எல்லாம் மெல்லிய பாதங்களில் அணியப்பட்டிருக்கும் கால் சிலம்புகளே! என்றும் கூறுகிறார்.
நகரத்தின் அமைப்பினை கூறும் போது காணும் இடமெல்லாம் கண்ணுக்கு தெரிபவை வாழ்வியல் நெறிமுறைகளை கூறும் நல்ல நூல்களே! என்றும் தெரியாமல் இருப்பவை அழகிய வளையல்களை அணிந்த இளம் பெண்களின் இடைகள் மட்டுமே என்றும் தன் கற்பனைக்கு புதியது ஒரு வடிவம் கொடுக்கிறார் கவிஞர்.
அங்கு வாழும் மக்களுக்கு இல்லாமையால் ஒரு பொருளை மற்றவரிடம் சென்று கேட்கும் இரத்தல் என்ற ஒன்றே தெரியாது எனவும் இழிவானது என்று ஒதுக்கி மக்கள் கற்காமல் விட்டது வஞ்சனை என்ற ஒன்று மட்டுமே என்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியலுக்கும், வளமைக்கும், குண நலன்களுக்கும் புதியதொரு இலக்கணமே வடிக்கிறார் கவிஞர்.
இன்றெல்லாம் மக்களின் வாழ்வியலை விளக்குவதற்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் வந்து விட்டன. ஆனால், இவை யாவும் இல்லாத அன்றைய காலகட்டத்தில் நடமாடும் நூலகங்களாக விளங்கிய மாபெரும் கவிஞர்களே மக்களின் வாழ்வியலையும், அரசனின் ஆட்சியையும், மக்களின் குண நலன்களையும் சீர்தூக்கி பார்த்து அதற்கு சிறப்பானதொரு வடிவத்தையும் வாரி வழங்கிய மாபெரும் வர்ணனையாளர்கள் என்று சொன்னால் அது நிச்சயம் மறுக்க முடியாத ஒன்றுதான்!