

ராமநாதபுரம் அரண்மனை தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க அரண்மனையாகும். 17ஆம் நூற்றாண்டில் சேதுபதி மன்னரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை ராமலிங்க விலாசம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ரகுநாத சேதுபதி என்பவர் 1674 முதல் 1710 ஆம் ஆண்டு இடைப்பட்ட பகுதியில் இதை கட்டினார்.
இந்தக் கட்டடத்தில் இருந்து கொண்டு சேதுபதிகள் நாட்டை ஆண்டு வந்தனர். இந்த அரண்மனை வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சமஸ்தானம் ராமநாதபுரம் சிவகங்கை பகுதிகளை உள்ளடக்கியது. இந்த அரண்மனை சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. இந்த வளாகத்தில் ராமலிங்க விலாசம், சங்கர விலாசம், கௌரி விலாசம், அந்தப்புரம், ஆயுத கிடங்கு, சுரங்கப்பாதை, ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், சரஸ்வதி மண்டபம் போன்றவை அடங்கியுள்ளது. இங்குள்ள சுவர் ஓவியங்களும், சிற்பங்களும் கண்ணை கவரும் விதத்தில் உள்ளன.
அரண்மனை சுவர் முழுவதும் வண்ண ஓவியங்களால் வரையப்பட்டுள்ளன. மன்னர் சேதுபதியின் ராஜ வாழ்க்கையை குறிப்பிடும் வகையில் ஓவியங்கள் அமைந்துள்ளன. அவர் மராட்டியர்களுடன் சண்டையிட்ட ஓவிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
மன்னர் சேதுபதி குடும்பம் ராமநாதசுவாமி மீது கொண்டு உள்ள அளவற்ற பக்தியால் இந்த அரண்மனைக்கு ராமலிங்க விலாசம் என பெயரிட்டனர். இந்த அரண்மனையின் அமைப்பானது கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. செங்கல், கருங்கல், சுண்ணாம்பு கொண்டு அழகாக கட்டப்பட்டுள்ளது.
இதில் உள்ள 16 நீண்ட படிகளை கடந்து தான் அரண்மனைக்கு செல்ல வேண்டும். இருபுறமும் கல்லால் ஆன யாழிகள் உங்களை வரவேற்கும். இந்த மண்டபத்தில் வட்ட வடிவிலான 50 கல் தூண்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்தில் முக்கியமான சுற்றுலாதலமாக இந்த இடம் வழங்குகிறது. இந்த அரண்மனையை காண எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் சுற்றிப் பார்ப்பதற்கு அனுமதி உண்டு. இந்த அரண்மனையின் நகைகள், கலைப்பொருட்கள் ஆயுதங்கள் ஆகியவை அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் அரசு கல்லூரி, அரசு பெண்கள் கல்லூரியும் சில காலம் இந்த அரண்மனையில் செயல்பட்டு வந்தது.
தற்போது அரண்மனை முகப்பில் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் உள்ளே ஒரு பகுதியில் சேதுபதி குடும்பத்தின் வாரிசுகள் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலான பகுதிகள் அரசு அலுவலகமாக இயங்கி வருகின்றன.
சேதுபதிகள் சேது சமுத்திரத்தின் பாதுகாவலராக இருந்து வந்தார்கள். அவர்கள் மறவர்களின் தலைவராக விளங்கினார்கள். இந்திய சுதந்திரத்திற்கு பின் சமஸ்தானம் முடிவுக்கு வந்தது. சேதுபதியும், முத்துராமலிங்கத் தேவரும் நெருங்கிய நண்பர்கள். அக்காலத்தில் ராமநாதபுரம் மன்னர் மகள் வீட்டிலிருந்து சுமார் 33 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு அது சம்பந்தமாக வழக்கும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஜாக்சன் துரையும், கட்டபொம்மனும் இந்த அரண்மனையில் சந்தித்துக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
அந்த சந்திப்பு மோதலில் முடிவடைந்தது. அந்த மோதலில் பிரிட்டிஷ் அதிகாரி கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். இந்த அரண்மனை வளாகத்தில் தான் ஜாக்சன் துரையும், கட்டபொம்மன் வரி சம்பந்தமாக பேச்சுவார்த்தை காரசாரமாக நடத்தினார்கள்.
இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மனையை சுற்றிப் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகம் தரும்.