'ராணியின் படிக்கிணறு' என்று அனைவராலும் அழைக்கப்படும் படிக்கிணறு விபரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாமா..?
மதி நுட்பமும், தொழில் நுட்பமும் அறிந்த முன்னோர்கள், அன்றே ஆழமாக யோசித்து கட்டிய படிக்கிணறு இது.
ராணியின் படிக்கிணறு, குஜராத்தி மொழியில் "ராணி கி வாவ்", எனக் கூறப்படுகிறது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகம் பதான் நகரத்தில் இருக்கும் படிக்கிணறு சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இந்த படிக்கிணற்றை இந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக, ஜுன் மாதம் 22 ஆந்தேதி 2014 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்துள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.
ராணியின் படிக்கிணறு விபரங்கள்:
ஸோலங்கி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் பீம்தேவ் மன்னரின் நினைவாக அவரது மனைவியார், இராணி உதயமதி இதை கட்ட ஆரம்பிக்க, அவர்களது முதல் மகன் கர்ணதேவ் முழுமையாக கட்டி முடித்து, கிணற்றுக்கு 'இராணியின் படிக்கிணறு' எனப் பெயரிட்டார் என்று கூறப்படுகிறது.
அகமதாபாத்திலிருந்து 110 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பதான் நகரில், பசுமையான புல்வெளிகளுக்கு நடுவே அமைந்துள்ள 'ராணி கி வாவ்' எனப்படும் மிகப் பிரமாண்டமான படிக்கிணறாகிய இதனை 'படிக்கிணறுகளின் ராணி' என அழைக்கின்றனர்.
64 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 27 மீட்டர் ஆழம் கொண்ட படிக்கிணறு ஏழு அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. கடைசி படிக்கட்டுக்கு கீழே சுமார் 30 கி.மீ. உள்ள சுரங்கப்பாதை சித்பூருக்கு செல்கிறது. போர்க்காலங்களில் தப்பித்து செல்ல வசதியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கி.பி. 1063 முதல் 1068 வரை கட்டப்பட்ட கிணறு, நாளடைவில் மணல் மற்றும் கற்களால் மூடப்பட்ட காரணத்தால், ஒருவருக்கும் தெரியாமல் போனது. 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் படிக்கிணறு கண்டு பிடிக்கப்பட்டு, பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இக்கிணற்றின் தூண்கள், பக்கவாட்டுச் சுவர்கள் மற்றும் படிகளில் இலைகள், பறவைகள், மீன்கள் போன்ற அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. 800 க்கும் மேலான சிற்பங்கள் இங்கே உள்ளன.
கிணற்றுக்குள் செல்லும் படிகள் நேராக இல்லாமல் பக்கவாட்டில் ஏறவும், இறங்கவும் வசதியாக கட்டப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும்.
படிக்கிணறு செவ்வக வடிவிலும், மேற்கூரை முக்கோண வடிவிலும் கட்டப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சமும் வருமாறு அமைக்கப்பட்டிருப்பதால், உள்ளே குளிர்ச்சியாக இருக்கிறது. மழை நீரைச் சேமிக்கும் இடமாகவும் படிக்கிணறு விளங்குகிறது.
தரைமட்டத்திலிருந்து காண்கையில், ஒரு மேடிட்ட சிறிய கட்டிடம் போலத் தோன்றும் படிக்கிணற்றினை உள்ளே சென்று பார்க்கையில், மக்களை வியப்பின் எல்லைக்கே அழைத்துச் செல்லும். மேலும், படிகளில் மெதுவாக கீழே இறங்கிச் செல்கையில், கலை அமைப்புடன் கூடிய ஏதோ ஒரு பாதாள சிற்ப லோகத்திற்குள் நுழைவது போன்ற பிரமிப்பினை ஏற்படுத்தும் வகையில் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. மாரு-குர்ஜரா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
'இந்தியாவின் சுத்தமான சின்னம்' என்ற பட்டத்தை 2016 ஆம் ஆண்டு "ராணி கி வாவ்" பெற்றுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு ASI ஆல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திங்கள் முதல் ஞாயிறு வரை காலை மணி 7 முதல் மாலை மணி 6 வரை திறந்திருக்கும்
'ராணி கி வாவ்' -ஐ கண்டு ரசிக்க உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
"ராணி கி வாவ் ரியலி வா...வ்"!