
இழந்த பதவி மற்றும் சொத்துகளை மீட்டளிக்கவென்றே அமைந்திருக்கும் ஒரு அற்புதத் திருக்கோயில், ஆதலையூர் பீமேஸ்வரர் ஆலயமாகும். இந்தக் கோயில் கும்பகோணம் - நாகப்பட்டினம் சாலையில் 32 கி.மீ தொலைவில் உள்ள ஆதலையூரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஆதலையூர் என்று பெயர் வரக் காரணமான புராண வரலாற்றின்படி, சிவபெருமான் கயிலாயத்தில் புதிதாக ஒரு திருவிளையாடலைத் தொடங்கினார். அந்த திருவிளையாட்டில் அவர் பலவாறு உருமாறி வில்வமரம், கங்கை என்று எந்த ரூபம் எடுத்தாலும் பார்வதி தேவி அவரைக் கண்டு பிடித்து விட்டார். இதையடுத்து, சிவபெருமான் பூலோகம் சென்று பசுவாக உருமாறினார். அது ஒரு முரட்டுப் பசு. அது யாருக்கும் அடங்காமல் எல்லோருக்கும் துன்பங்கள் கொடுத்ததால் அதை ஊர் மக்கள் கட்டி வைத்தனர். ஆனால், அங்கே வந்த பார்வதி தேவி பசுவைக் கண்டு மனமிரங்கி, அதை அவிழ்த்து விட்டு விட்டாள்.
பசு உருவத்தில் இருந்த சிவபெருமான் தனது சுய உருவத்தைக் காட்ட, பார்வதி தேவி மிகுந்த ஆனந்தம் அடைந்தாள். இதனால் ‘ஆனந்தநாயகி’ என்னும் பெயர் இத்தலத்து அம்பாளுக்கு ஏற்பட்டது. 'ஆ' என்றால் 'பசு', 'தளை' என்றால் 'கட்டுதல்'. பசுவைக் கட்டிப்போட்ட இடம் என்பதால் இந்த ஊருக்கு ஆதளையூர் என்ற பெயர் ஏற்பட்டது. அது நாளாவட்டத்தில் மருவி ஆதலையூர் என ஆயிற்று.
இதே தல புராணத்தில் ஈஸ்வரனுக்கு ‘பீமேஸ்வரர்’ என்ற பெயர் வரக் காரணமான புராண வரலாறும் உள்ளது. துரியோதனன், பாண்டவர்களுக்கு தனது தேசத்தில் பாதியைத் தர மறுத்ததால், மகாபாரதப் போர் ஆரம்பிக்கும் முன்பு, பாண்டவர்கள் தாங்கள் இழந்த தேசத்தைப் பெற பல தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அப்போது பீமன் மட்டும் தனியாக ஆதலையூர் வந்து அங்கேயுள்ள தாமரைக் குளத்தில் நீராடி சிவபெருமானை வணங்கினான். தாங்கள் இழந்த தேசத்தை மீட்டுத் தர சிவனை வேண்டி வழிபட்டான்.
சிவபெருமான் பீமனுக்கு தரிசனம் அளித்து அவனுக்கு ஆசி வழங்கினார். பிறகு குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றது. பாண்டவர்கள் தாங்கள் இழந்த தேசத்தையும், பதவியையும் மீட்டனர். பீமன் இங்கே வந்து வழிபட்டதால் இங்கேயுள்ள ஈஸ்வரனுக்கு பீமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
பீமன் வந்து வழிபட்டு வெற்றி கண்டதால், ஏதோ காரணத்திற்காக பதவிகளை இழந்தவர்கள் மற்றும் தங்கள் சொத்தாக உள்ள வீடு, நிலபுலங்களை சண்டை சச்சரவு, கோர்ட்டு, வழக்கால் இழந்தவர்களும் ஆதலையூருக்கு வந்து இங்கேயுள்ள பீமேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் அவை மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தற்காலத்தில், தேர்தலில் நிற்பவர்கள் தாங்கள் ஜெயித்து பதவியை அடைய வேண்டும் என்பதற்காக இங்கே வந்து வழிபடுவதால் இந்த பீமேஸ்வரர் கோயில் தேர்தலில் வெற்றிக்கும் ஒரு பிரபலமான கோயிலாக உள்ளது.